தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் தரும் YPP! 'அரசிலையைத் தாண்டிய கோரிக்கைகள்'
இந்த அறிக்கையில் தலைப்பே, 'இளம் மாணவர்களுக்கான அறிக்கை' என்றே வைக்கப்பட்டிருந்தது. இது அரசியலை மையப்படுத்தியது இல்லை. அரசிலையைத் தாண்டி, இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அரிசிலாக்கப்படுகிறது
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் என்பது அத்தியாவசியமான தேவையாகியுள்ளது. உணவு, உடை, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளுக்கு இணையாக இணையதள வசதியும் தேவை என்ற நிலை உள்ளாகியுள்ளது.
இந்திய அரசு “டிஜிட்டல் இந்தியா” என்ற வாசகத்தை பிரதானமாக முன்வைத்து நடத்திய முன்னெடுப்புகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதன்மூலம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இணையச் சேவை சென்றடைய வழிவகை செய்யும் படி திட்டங்கள் போடப்பட்டன.
ஆனால், இந்த தொழில்நுட்பம் எத்தனை மக்களைச் சென்றடைந்தது என்றால், அது மிகக் குறைந்த அளவில் தான் என்பதை தரவுகள் காட்டுகின்றன. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 56 கோடி பேர் மட்டுமே, இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது 2023-ம் ஆண்டில் 65 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, statista.com தளத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.
தேர்தல் அறிக்கையில் தொழில்நுட்பம்
நான் சமீபத்தில், “அரசியல் அறிவார்ந்த இளைஞர்கள்" (Young People for Politics) என்ற அமைப்பின் அறிக்கை வெளியிடும் காணொளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தேன்.அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பம் தொடர்பான சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஒரு சாதாரண குடிமகளாகப் பார்த்தால், இது சற்று ஆச்சரியமான ஒன்று தான். ஏனென்றால், மக்கள் பார்வையில் விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்றவற்றுக்கு நிரந்த தீர்வே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால், வளர்ந்து வரும் இணைய தள புரட்சியில், “இணையப் பாதுகாப்பு, எல்லோருக்கும் இணையதள வசதி” ஆகியவை கண்டிப்பாக அத்தியாவசியமானவை ஆகிவிட்டன.
“நாங்க இது எல்லாம் இல்லாம தான் வாழ்ந்தோம். ஒரு போனு கூட அப்போ இல்லை. நல்லது, கெட்டதுனா கடிதாசி தான் போடனும். இப்போ பாத்தா, எப்போ பாரு கையில போனோடையே அலையுதுங்க”என்று நம் வீடுகளில் வயதானவர்கள் பேசுவதை நாம் கேட்டிருப்போம். அல்லது ஒருமுறையாவது இந்த வசனத்தை ஒவ்வொரு ஊருக்கு ஏற்றப்படி வேவ்வேறு தொனியில் கேட்டிருப்பீர்கள்.
அவர்கள் கூறுவது உண்மைதான். அன்று இணையம், தொலைத்தொடர்பு என்பது அத்தியாவசியமாக இல்லை. எனவே அப்போது இளமை காலத்திலிருந்த தற்போதைய முதியவர்களுக்கு, அதுவே பொற்காலமாகத் தோன்றுகிறது.
ஆனால் வளர்ச்சியடைந்து வரும் தொலைத்தொடர்பு வசதிகள் இன்று அனைத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இன்றைய இளைஞர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர்.
இளைஞர் அரசியல் அமைப்பு
YPP (young people for politics) என்ற அமைப்பு, இளைஞர்களிடையே அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாக்கடை அல்ல என்ற கருத்தை முன்னிறுத்தி இளைஞர்களிடையே ஈடுபாட்டை அதிகரிக்க தூண்டப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி அரசிடம் சில கோரிக்கைகளை இந்த அமைப்பினர் முன்வைக்கின்றனர்.
இந்த அமைப்பு பற்றி “சில இளைஞர்கள் சினிமா பக்கம் செல்கிறார்கள். சில இளைஞர்கள் போதை பக்கம் செல்கிறார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் அறிவுசார்ந்து, கோட்பாடு சார்ந்து, கொள்கை சார்ந்து இயங்கக் கூடிய இளைஞர்களாக ‘இளைஞர்களுக்கான அரசியல் அமைப்பை’ பார்க்கின்றேன்.

நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள பல புரட்சியாளர்கள் இளைஞர்களாக இருக்கும் போதே சாதித்தனர். மகாகவி பாரதியார் இளைஞராக இருக்கும் போதுதான் புரட்சி விதையை விதைத்தார். சேகுவாராவும் தனது புரட்சியை ஒலித்தது இளைஞராக இருக்கையில்தான்.
உளவியல் ரீதியான தரவுகள், ஒருவர் மாணவனாக இருக்கையில் எதைச் சார்ந்து துவங்குகிறானோ, அதேபோல் தான் அவன் வாழ்க்கை பயணிக்கிறது என்று கூறுகிறது. உலகிலேயே வலிமையானவர்கள் இந்திய இளைஞர்கள்.
இன்றை இளைஞர்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், சோம்பேறி என்ற சொர்க்கத்திலிருக்கின்றனர். அந்த இளைஞர்களை எல்லாம் அரசியல்படுத்த வேண்டும்.” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சங்க தமிழன் குறிப்பிட்டார்.
சமீபத்தில் நடந்த சர்ச்சைகளும் YPP-ன் கோரிக்கைகளும்
சமீபத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகிய தளங்கள் தகவல்களைத் திரட்டி விற்பனை செய்வதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவரது தனிப்பட்ட விவரம் விற்கப்படுவது தெரியவந்ததால் சர்ச்சைகள் வெடித்தது.
எனவே வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கிற்கு எதிராகக் கண்டன குரல்கள் எழுந்தன. அத்துடன், அனேகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் செயலியை விட்டு பலரும் வெளியேறினர்.
ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் மனிதனுடன் இணைந்துதான் பயணிக்கின்றன. அவ்வாறு பயணிக்கையில், மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் நேரிடுகிறது. இதைத் தவிர்க்கத் தொழில் நுட்பங்கள் குறித்து 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், இடம் கொடுக்க வேண்டும் என்று “இளைஞர்களுக்கான அரசியல்” (Young People for politics) அமைப்பு சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன், இஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், “இளைஞர்களுக்கான தேவைகளை முன்னிறுத்தித் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக” குறிப்பிட்டிருந்தனர்.
அறிக்கையில் பெண்ணுரிமை, சாதியற்ற தமிழ் சமூகம், ஊரக நலன், பழங்குடியினர் உரிமைகள், மாற்றுப் பாலின, பாலீர்ப்பு மற்றும் இடைபால் மக்களின் உரிமைகள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வகுப்புவாத அரசியல் நிராகரிப்பு, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சுற்றுச்சூழலியல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, கல்வி, விளையாட்டும் வாழ்வும், கல்லூரி அரசியல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன், குற்றவியல் நீதி மற்றும் நிர்வாகம், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் கொண்டு சேர்க்க இளைஞர்களுக்கான அரசியல் அமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பும் மக்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால், தொழில்நுட்பம் பற்றிய கோரிக்கைகள் வளர்ந்து வரும் சமூக மாற்றத்தில் இணைபிரியாத விஷயமாக மாறியுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, தொழில்நுட்பம் தொடர்பான பட்டியல்
“அரசு அதன் தரவு மேலாண்மை மற்றும் தனி நபர் பாதுகாப்பு கொள்கையைத் தெளிவாக அறிவிப்பதுடன், நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
-தகவல்களைச் சேகரித்தல், சேமித்தல், பயன்படுத்துவதில் மேலாண்மை
-பயோமெட்ரிக் தரவு மேலாண்மையை உள்ளடக்கிய கொள்கை
அடிப்படை டிஜிட்டல் திறன்களைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவித்தல்
- குறியீட்டு மொழிகள், தரவு உள்ளீட்டுத் திறன் போன்றவற்றை அனைவருக்கும் அறிந்திருக்கச் செய்தல்
- மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
எளிய மக்களுக்கான டிஜிட்டல் திறன்கள் வளர்ப்பு திட்டம்
-டிஜிட்டல் சேவைகளாகிய நிதி சேவை, இணைய அரசு சேவைகள், அடிப்படையாக இணையத்தைப் பயன்படுத்துதல் போன்றவை அனைவரும் அறியச் செய்தல்
-குறிப்பாக ஊரக மக்கள், நகர ஏழ்மை மக்களுக்கான டிஜிட்டல் கல்வியறிவு குறித்த சிறப்புத் திட்டம் ஏற்படுத்தி அதை 100 சதவீதம் செயல்படுத்துதல்.
-பாதுகாப்பான இணை பயன்பாடு பற்றிப் புரிதலை ஏற்படுத்துதல்.
டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான, பெண்களை மையப்படுத்திய திட்டம் ஏற்படுத்தி ஊரக பெண்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துதல்
-டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் பெண்கள் தங்களின் உரிமையை அறியவும், பாதுகாக்கவும் வாய்ப்பளித்தல்
மாநிலம் முழுவதும் 5540 பொதுச் சேவை மையங்களை ஏற்படுத்தி, கிராமம் தோறும் 1:3 என்ற ஆயில் மையங்கள் அமைத்தல். தற்போது அதில் 10 சதவீத மையங்களே அமைக்கப்பட்டுள்ளது.
-அதிவேக இணையம் போன்றவற்றை அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வழி வகுத்தல்.
-இணைய டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் கிராமங்களுக்குச் சென்றடையச் செய்தல்.
-அரசின் தளங்களில், தகவல்களை உடனுக்குடன் வெளியிடுதல், காலஞ்சென்ற தகவல்களை நீக்குதல் போன்றவற்றை உறுதிப் படுத்துதல்.
நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை அடையக் காலந்தோறும் (குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை) இணைய தணிக்கை ஏற்படுத்தல்,
-நிரல் நெறிமுறை மூலம் இயங்கும் இணைய மின்னணு சேவைகளைத் தணிக்கை செய்ய வல்லுநர் குழு ஏற்படுத்துதல்.
முகமறி தொழில்நுட்பம், Deep Learning போன்ற தொழில்நுட்பங்களைக் கையாள தெளிவான, தவறாகக் கையாள வாய்ப்பளிக்காத கொள்கை நெறிமுறைகளை வெளியிடுதல்
-இதனால் சட்டம் செயல்படுத்தும் நிறுவனங்களின், தனி நபர் அதிகார துஷ்ப்ரயோகம்/ வரம்பு மீறல் குறையும்.
சமூகத் தேவைகளைத் தீர்க்கவும் அனைவரின் அறிவு மற்றும் புத்தாக்க சிந்தனைகளைத் தூண்டவும், புத்தாக்க மையங்கள் ஏற்படுத்துதல்.
-எளியமுறையில் அணுகவும், அறம் சார்ந்தும் செயல்பட வேண்டும்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சவால்களாகிய நகர-கிராம இடைவெளி வறுமை நிலையில் உள்ளவர்கள் அணுக முடியாமை, பாலின டிஜிட்டல் இடைவெளி போன்றவற்றை நுட்பமா ஆராய்ந்து, இடைவெளியை குறைக்கும் செயல் திட்டம் ஏற்படுத்துதல்.
புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் போது, அனைவரின் கருத்தை அறிதல், குறிப்பாக நலிந்த, முக்கிய பயனாளிகள், பாதிப்படைய வாய்ப்புள்ளவர்கள் கருத்துகளை அறிதல்.
இணைய வன்முறைகளை அடியோடு களைய மூன்று அம்ச திட்டங்கள்
- டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு மூலம் சைபர் வன்முறை, இணைய வழியில் பாலியல் துன்புறுத்தல், போன்றவற்றைப் பற்றி இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
-சைபர் குற்றவாளிகளுக்கு, கட்டாயம் தண்டனை கிடைப்பதை உறுதி செய்தல்
-சட்ட வரம்புக்குட்பட்டு, இணையக் கண்காணிப்பு ஏற்படுத்தி முன்கூட்டியே குற்றங்களைத் தடுக்க வழி வகை செய்தல்.
அதிகரித்து வரும் இணைய வழி குற்றங்களாகிய மார்ஃபிங், மின்னஞ்சல் ஏமாற்று மோசடி, அவதூறு பரப்புதல், சைபர் ஆபாசப் படங்கள் போன்றவற்றை புதிய தொழில்நுட்பங்களாகிய செயற்கை நுண்ணறிவு மூலம் தடுத்தல்.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பினை மேம்படுத்தி, தேசிய தரவு மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
அதிக அளவிலான ICT தொழில்நுட்ப கருவிகள் பயன்பாடு, அதிக கரிம உமிழ்வு, இடர் கனிம கழிவு என்ற சங்கிலித் தொடர்பினை முறியடிக்க வளம் குன்றா வளர்ச்சி கொள்கை, மின்னணு கழிவு மேலாண்மை, மறு சுழற்சி விதிகளை மின்பொருள் சுழற்சியின் எல்லா நிலையிலும் பின்பற்றுதல்.” ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ அவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்தொழில்நுட்பம் பற்றிய விஷயங்களைக் கேட்டபோது, “எங்களின் டெக்னாலஜி தொடர்பான கோரிக்கையில் முக்கிய பங்கு வகிப்பது தகவல் பாதுகாப்பே. ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன், அரசால் அனைத்தும் கண்காணிக்கப்பட வேண்டும்.
ஒரு மாணவருக்கு தொழில்நுட்பம் பற்றிய கல்வியிலும், அதன் நெறிமுறைகளை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இது மத்திய அரசால் தான் சாத்தியப்படும் என்றில்லை. மாநில அரசாலும் முன்னெடுக்க முடியும் என்ற கூட்டு முயற்சியால் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.
அந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் ராதிகா கூட்டத்தில் பேசுகையில்,“இணையத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியே இன்னும் பலர் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்து தொழில் நுட்பம் பற்றிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

