2/3 பெண் குழந்தைகளும், 1/2 ஆண் குழந்தையும் சந்திக்கும் பிரச்சனை! பாலியல் கல்வியின் அவசியம்?
பாலியல் கல்வி குறித்து, “உயிரியல் பாடத்தில் உள்ள மனித இனப்பெருக்கம் பாடத்தையே எந்த வாத்தியாரும் நடத்தறது இல்ல. இதுலாம் வாய்ப்பே இல்லை” என்கிறார்கள் மக்கள்
பாலியல் என்றால் என்ன? என்று கேட்கும் காலம் இல்லை இது. நன்றாகவே தெரியும் என்று தைரியமாகப் பதில் கூறும் தலைமுறையைக் கண்டடைந்து விட்டோம். ஆனால் பாலியல் குறித்த சரியான தெளிவு வீட்டில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை யாருக்கும் இல்லை.
ஒரு குழந்தைக்கு நல்ல தொடுத்தல், மோசமான தொடுதல் பற்றிய அறிவு வேண்டும் என்பதை உணர்ந்த பெற்றோர், தொடுத்தல் என்ன என்பதையும், தொடுதல் தவிர இருக்கும் பாலியல் சீண்டல்களைப் பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொண்டது போன்று தெரியவே இல்லை.
பிஎஸ்பிபி, சுஷில் ஹரி, மரிஷி வித்யா மந்திர், செயின்ட் ஜார்ஜ், செட்டிநாடு வித்யாஷ்ரம் இவை அனைத்தும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களால் சிக்கிக்கொண்ட பள்ளிகள். எங்கு பாலியல் பற்றிய கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமோ, அங்கேயே இதுபோன்ற நிலை தான் உள்ளது. இதைத் தவிரத் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதும், மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அவருக்கு உதவியாக இருந்த பெண் பேராசிரியர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டலுக்கும், பாலியல் கல்விக்கும் என்ன தொடர்பு என்று தோன்றலாம். நிச்சயம் தொடர்பு உள்ளது. பாலியல் பற்றிய புரிதல் சரியாக இருந்தால், பல சீண்டல்களை மாணவிகளும், மாணவர்களும் விரைவில் கண்டறிந்துவிடுவர். நான் மேலே குறிப்பிட்ட பள்ளிகளிலும், கல்லூரியிலும் மட்டுமல்ல, பல கல்வி நிலையங்களிலும், பாலியல் சீண்டல்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இதைப் பல மாணவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. ஒருவேளை அவர்கள் புரிந்துகொண்டாலும், அதைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதை நீங்கள் பிஎஸ்பிபி மற்றும் சுஷில் ஹரி பள்ளிகள் விவகாரத்திலேயே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, பாலியல் குறித்த தெளிவு இருப்பதில்லை என்று கூற முடியாது. பாலியல் சார்ந்த விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அதைக் கேலியாகவும் கிண்டலாகவும் பகிர்ந்து வரலாம். அதேபோல் ஒரு சாரார் பாலியல் உணர்வு என்ன என்ற புரிதல் இல்லாமலும் இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் ஒருவன், 11 வயது சிறுமியைக் கொலை செய்த விவகாரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த சிறுவன் ஆபாசப் படங்களுக்கு அடிமையான நிலையில், சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளான். சிறுமி வீட்டில் தெரிவித்துவிடுவேன் என்று கூறியதால், சிறுவன் ஆத்திரத்தில் சிறுமியைக் கொலை செய்துள்ளான். இந்த விவகாரத்திலும் பாலியல் கல்வியின் தேவையை ஆழமாக வெளிப்படுகிறது.
தற்போதைய ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மத்தியில் பாடத்திட்டத்தைத் தாண்டி அதிக அளவில் சிந்திக்கவும், தேடவும் தூண்டுகிறது. 12 வயதில், பாலுணர்வுகள் தூண்டப்படும் போது, அதற்குத் தீர்வுகளைச் சமூகவலைத்தளங்களிலும், கூகுள் போன்ற தேடுதல் தளங்களிலும், பார்க்கும் சில விஷயங்களைத் தேடுகின்றனர். எடுத்துக்காட்டாக 'sex' என்று மட்டும் தேடினால், ஏகப்பட்ட தளங்கள் வருவதைப் பார்க்க முடியும். அந்த தளங்களில் பதியப்பட்டுள்ள தகவல்களும், காட்சிகளும் சரியானதா? என்று புரிந்துகொள்ளும் வயதில் மாணவர்கள் பக்குவமடைந்திருப்பதில்லை. எனவே எண்ண ஓட்டத்தில் அவர்கள் அதைத் தூக்கிச் சுமக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளுக்கு பாலியல் பற்றி நீங்கள் கற்றுக்கொடுத்தால், அது பாலீர்ப்பு அதிகப்படுத்தலாம் என்று உங்களுக்கு எண்ணம் இருக்கலாம். பாலீர்ப்பு என்பது சுரப்பிகளால் எல்லோருக்கும் சாதாரணமாகத் தூண்டப்படுகிறது. அதை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் இருப்பதே பல மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.
யூடியூபர் மதன் விவகாரமும் நமக்குத் தெரியாதது இல்லை. அந்த விவகாரத்திலும் பாலியல் ரீதியிலான வார்த்தைகளே அதிகமாக இருந்தது. இங்கும் பாலியல் கல்வியின் தேவை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
“பாலியல் தொடர்பான கல்வி என்பதை நாம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், மதன் யூடியூபர் போன்றோர் வீடியோக்களின் மூலம் பலரும் தவறுகளைச் சொல்லிக்கொடுப்பர். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒவ்வொருவரும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்கள் மூலம் பாலியல் கல்வி பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் அதற்கு ஏற்றார்போல் சொல்லிக் கொடுக்கலாம். நம் உடலை நாமே தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அது சிறந்த ஆளுமையுடன் ஒருவரை வளரச்செய்யும்” என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் பேராசிரியர் ஆன்ட்ரு சேசுராஜ்
பாலியல் கல்வியின் அவசியம் பற்றி மக்கள் கருத்து கேட்க என்னுடைய வாஸ்ட் ஆப் மற்றும், டிவிட்டர் பக்கங்களில் கேள்வியை முன்வைத்திருந்தேன். வாட்ஸ்ஆப் கணக்கில் ஒருவர் மட்டும் yes என்று பதிலளித்திருந்தார். டிவிட்டர் பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, @DinosaurOffcial “கண்டிப்பாக அவசியம்! முற்காலத்திலேயே இக்கல்வி நம் மனங்களில் புகுத்தப்பட்டிருந்தால், கோவில்களினுள் எந்நாளிலும் நம் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்” என்றார்.
@muthamilmutham4 “கண்டிப்பாகத் தேவைப்படும் ஒன்று. கிராமப்புறங்களில் தொடங்கி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் எந்த மாணவர்களுக்கும் தன்னை சீண்டும் குற்றவாளிகளைக் கண்டறிய முடிவதில்லை. இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். நிச்சயம் கழக அரசு இதைச் செய்யும் என நம்புவோம்.
@mydeen102 “அந்தந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் குறிப்பாகக் குழந்தைகள் நான் எப்படிப் பிறந்தேன் என்று கேட்கும் பொழுது அதற்கு விஞ்ஞான ரீதியான பதில்களைச் சொல்வதற்கான கல்வி நிச்சயம் தேவை”
@ARAVINDASWAMY14 “உயிரியல் பாடத்தில் உள்ள மனித இனப்பெருக்கம் பாடத்தையே எந்த வாத்தியாரும் நடத்தறது இல்ல. இதுலாம் வாய்ப்பே இல்லை”
இதுபோன்று மொத்தம் 37பேர் வெவ்வேறு விதத்தில் பாலியல் கல்வி வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். ஒருவர் மட்டும் 'வேண்டாம்' என்றும் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
— Abisha Bovas (@abishabovas) July 6, 2021
தமிழகத்தில் பாலியல் கல்வி தொடர்பாக உங்கள் கருத்து?#SexEducation #education
பொதுப்படையாகப் பார்த்தால், தற்போதைய நடுத்தர வயதுடைய பலரும் பாலியல் கல்வியின் தேவையை புரிந்துகொண்டுள்ளனர்.
பாலியல் கல்வியில் இடம்பெற வேண்டியவை?
பாலியல் கல்வியில்: உணர்வு, பாலியல் உடல் அமைப்பு, பாலியல் செயல்பாடு, இனப்பெருக்கம், பாலியல் சம்மதத்திற்கான வயது, இனப்பெருக்க ஆரோக்கியம், இனப்பெருக்க உரிமை, பாதுகாப்பான உடலுறவு, பிறப்பு கட்டுப்பாடு, சுயஇன்பம், பாலியல் உறவைத் தவிர்த்தல் போன்றவை கற்றுத்தர வேண்டியுள்ளது.
அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு விறைப்பு தன்மை, விந்தணுக்கள் செயல்பாடு, ஆணுறைகள், பெண்கள் மீதான ஈர்ப்பு பற்றி நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல், மாதவிடாய் தூய்மை, மார்பக வளர்ச்சி, கருத்தரிப்பு முறை, பெண்கள் கருத்தடை போன்றவை பற்றிய புரிதல் ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் கல்வி ஏன் அவசியம் என்று பேசிய பாலியல் நிபுணர் மருத்துவர் காமராஜ், “பாலியல் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. பாலியல் பற்றிய தவறான தகவல்கள் பல உள்ளன. அதில் சரியான விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் தினமும் அதிகமான நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுயஇன்பம், தூக்கத்தில் விந்தணு வருவது போன்றவற்றைக் கூட சரியான புரிதல் இல்லாமல் நோய் என்று எங்களிடம் வருகின்றனர். மாணவர்களுக்கு இது மிகப்பெரிய மன அழுத்தத்தையும் கொடுக்கிறது.
பாலியல் சீண்டல்களைத் தடுக்க ஒரே வழி, பாலியல் கல்வி மட்டுமே. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டில் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அந்த அளவிற்குப் பரவலாக பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது. ஆனால் வெளியில் தெரிவதில்லை.
பெண் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த வன்கொடுமைகள் நடக்கையில், பிற்காலத்தில் அவர்களுக்கு பாலியல் உணர்வே பிரச்சனைக்குரியதாக மாறிவிடும். அவர்கள், உடலுறவில் மகிழ்ச்சியடையாமல் பயந்து நடுங்கும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.

நீங்கள் விரும்பினாலும், இல்லை என்றாலும் சமூகம் பாலியல் பற்றிய அறிவை புகட்டிக்கொண்டே இருக்கிறது. பாலியல் இதை எப்படி எதிர்வினையாற்றுவது என்றே பலருக்கும் தெரிவதில்லை. பாலியல் உறவால் தேவையற்ற கற்பம், பால்வினை நோய் போன்றவை ஏற்படும் என்று முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றால் பிரச்சனையை நோக்கி இழுத்துச் செல்லும்.
உலகம் முழுவதும் பலருக்கும் பாலியல் கல்வி என்ன என்பதே தெரியவில்லை. பலரும் உடலுறவு எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக நினைத்துக்கொள்கின்றனர். இதனால், சீக்கிரம் மாணவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படும் என்று நினைத்துக் கொள்கின்றனர். பாலியல் கல்வி என்பது பாலியல் உறவு கொள்வது எப்படி என்பது அல்ல. பாலியல் சீண்டல்களை எப்படித் தடுப்பது, பால்வினை நோய்கள் வருவதற்கான காரணம், அதைத் தடுப்பது பற்றியது போன்றவையே சொல்லித்தரப்படும். ஆனால் இதையும் சொல்லித்தர வேண்டாம் என்றே நினைக்கின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையைத்தான் கொண்டு வரும்” என்றார்.

Related Stories
மாதவிடாய் காலத்தில் அறையில் அடைத்து வைக்கும் தமிழக கிராமங்கள்! ஊடகமும் குழந்தைகள் உரிமையும் - கருத்தரங்கம்
'அரசு மருத்துவமனையில் தொட்டில்கள் எதையும் காணவில்லை!' - அதிகரிக்கும் பெண் சிசுக்கொலை
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்! யார் காரணம்? அலசல்
பி.எஸ்.பி.பி விவகாரத்தில், 'எவனுக்கோ வந்தா பரவாயில்லை...' என்று நினைக்காத மாணவர்கள்!