தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உலக பொருளாதாரம் முன்னேறும்!
தினமும் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி, ஜாக்கிங், கார்டியோ உடல் பயிற்சியை மேற்கொள்வதால், அவர்களின் உடல் நலம் மேம்படுவதுடன், தேவையின்றி உடல் நலக் கோளாறுகளால் எடுக்கப்படும் விடுமுறைகளும் குறைகின்றது. நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கிறது.
வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் அன்றாடம் முறையான உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) அளவுக்கு உயரும் என்று லண்டனில் உள்ள ஆயுள்காப்பீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆய்வறிக்கையில், ‘பணியாளர்களின் உடல் நலத்திற்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாபத்திற்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது. தினமும் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி, ஜாக்கிங், கார்டியோ உடல் பயிற்சியை மேற்கொள்வதால், அவர்களின் உடல் நலம் மேம்படுவதுடன், தேவையின்றி உடல் நலக் கோளாறுகளால் எடுக்கப்படும் விடுமுறைகளும் குறைகின்றது. நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தொழிலாளிகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே நிறுவனத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய், மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற நோய்களால் பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலையை மாற்றுவதற்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வாக இருக்க முடியும். உலகெங்கும் உள்ள பணியாளர்களிலிருந்து 1,20,000 பேரைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40% அமெரிக்க ஊழியர்களும், 36% பிரிட்டன் ஊழியர்களும், 14% சீன ஊழியர்களும் வெகு குறைவாக உடற்பயிற்சி செய்வதாகக் கண்டறியப்பட்டது. தற்போது 30% உலக மக்கள் உடற்பயிற்சி செய்வதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது. மேலும் 18 -64 வயதில் உள்ளவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும். 40 வயதைத் தாண்டியவர்கள் தங்களது உடலைப் பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மேலும் நீடிக்கலாம்.’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
