ஐபிஎல், ஐசிசி எதிலும் வென்றதில்லை - விராட் கோலி கேப்டன்ஷிப்பை கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றிருந்தால், மிகப்பெரிய புகழை அடைந்திருப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் பேசியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் 8 விக்கெட் தோல்வி, விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை மீண்டும் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களாக இருந்தபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலி ரசிகர்கள் மற்றும் நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, இன்னும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.
கோலியின் கீழ், இந்தியா 3 விதமாக போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்து வருகிறது, மேலும் கோலியின் கீழ் இந்தியா மூன்று முக்கிய ஐ.சி.சி போட்டிகளிலும் நாக் அவுட் கட்டங்களுக்கு வந்துள்ளது, ஆனால் கோப்பையை வெல்லத் தவறிவிட்டது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் தோற்றது இந்திய அணி, 2019 ஒரு நாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி, பின்னர் இந்த ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பியவர்களில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் உள்ளார். அவர், “நீங்கள் ஒரு நல்ல கேப்டனாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்றால், மக்கள் உங்களை நினைவில் கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒரு நல்ல கேப்டனாக இருக்கலாம் மற்றும் நல்ல திட்டங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் பந்து வீச்சாளரால் அதை செயல்படுத்த முடியாமல் போகலாம். எனவே அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்திலும் இருக்க வேண்டும். போட்டிகளில் வென்றவர்களை மட்டுமே மக்கள் நினைவில் கொள்வார்கள்.
விராட் கோலி எந்த ஒரு ஐசிசி அல்லது ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஆக்ரோஷமானவர். மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் சிறந்ததை கொடுக்க விரும்புகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது, இது விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இடையேயான போர் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். கோப்பைகளை வென்ற பெரும்பாலான கேப்டன்கள் நெருக்கடி தருணங்களில் கூலாக இருந்தனர். விராட் கோலி அப்படிப்பட்டவர் இல்லை. ஒருவேளை விராட் கோலி வென்றிருந்தால், அவர் மிகப்பெரிய புகழை அடைந்திருப்பார்” என்று பேசியுள்ளார்.
