'தனிநபரை அறிவுறுத்த அரசிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது' கொந்தளிக்கும் இந்து முன்னணியினர்!
“கொரோனா தொற்றைக் காரணம் காட்டி விநாயகர் சதுர்த்திக்குத் தடை விதிக்கப்படவில்லை. இந்துக்களின் விழாவிற்கு மட்டும்தான் தற்போது தடை விதித்துள்ளனர்” என்று இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் குறிப்பிடுகிறார்.
செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி வீட்டில் கொண்டாடப்படுவதைவிட, பொது இடங்களில் கொண்டாடுவதுதான் மிகவும் பிரசித்திபெற்றது. அதற்காகப் பல அடி உயரம் கொண்ட சிலைகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில்தான், கொரோனா தொற்றின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்த பிரச்சனை அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய பேசு பொருளாகவே இருக்கிறது.
தமிழ்நாடு அரசு கூறியது என்ன?
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் பக்கத்து மாநிலமான கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகள் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று வேகமாகப் பரவியது. இவற்றைக் கருத்தில் கொண்டு 15.09.2021 வரை அனைத்து சமய விழாக்கள் கொண்டாடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன், ஊர்வலங்கள் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாகத் தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்' சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரையில், விநாயகர் சிலையைக் கரைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையினரால் பின்னர் நீர் நிலையங்களில் கரைக்கப்படும்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி கோட்ட செயலாளர், சோமன் கூறுகையில், “விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்கக் கூடாது என்று சொல்வது, தமிழக அதிகாரிகளாக இருந்தாலும் சரி, தமிழக அரசாக இருந்தாலும் சரி அது முறையற்றது. இந்து சமுதாயத்திற்கு எதிரான செயலாகவே பார்க்கிறோம். தனிநபர்தான் சிலையை வைத்துக் கரைக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. தனிநபரை அறிவுறுத்த அரசிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தனிநபர் அவரவர் வீட்டில் வைக்க அனுமதி தேவையா?.
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கூடி தொழுகை நடத்துகின்றனர். கொரோனா இவர்களை எல்லாம் பாதிக்காதா?, அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவாதா?, தமிழக அரசு ஏன் இந்துக்களை மட்டும் ஒடுக்கப் பார்க்கிறது. விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்துக்களின் திருவிழாக்களை முடக்குவது போன்றே தமிழக அரசு செயல்படுகிறது” என்றார்
விநாயகர் சதுர்த்தி கோவை குண்டுவெடிப்பிற்குப் பின்னரே மிகவும் பிரபலமடைந்ததாக நக்கீரன் ஊடகம் குறிப்பிடுகிறது. அதற்கு முன்னர் வீடுகளில் சிறிய அளவில் விநாயகர் சதுர்த்தி கடைப்பிடிக்கப்பட்டாலும், தெருக்களில் கூடுவது போன்ற நடைமுறைகள் கிடையாது என்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியை நம்பியிருக்கும் தொழிலாளிகள்
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்திக்கு, லட்சக் கணக்கில் விநாயகர் சிலை செய்யப்படுகிறது. வீட்டில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தாமதமாகச் செய்தாலும், பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் மிகப்பெரிய அளவில் இருக்கும். அவற்றை முன்னதாகவே சிற்பிகள் செய்து முடிப்பர். விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் பெரிய சிலைகள் விற்பனையாவது குறையும். சிலையின் விற்பனையை நம்பி செய்து முடித்த தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசின் “பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை” என்ற அறிவிப்பிற்குக் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவை கூட்டம் நடந்த கலைவாணர் அரங்கிற்கு வெளியே சிலை செய்யும் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் சென்னையில் சட்டசபை முற்றுகை விநாயகர் உடன் நூற்றுக்கணக்கானோர் கைது தமிழக அரசே விநாயகருக்கு தடையை நீக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே. pic.twitter.com/ox68E5ZtQc
— ???????? Sri.Sri.Yadav ???????? (@Sri_Sri_yd) August 31, 2021
இது பற்றி சோமன் கூறுகையில், “விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமல்ல. வண்ணம் தீட்டுபவர்கள், சிற்பிகள், இவர்களோடு இணைந்து தொழில் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டு தோறும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் செய்யப்படுகிறது. அந்த சிலைகள் செய்வதற்குக் காஞ்சிபுரத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும், 4 மாதத்திற்கு முன்னால் இருந்து பணி செய்வர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் எத்தனை தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதிப்படையச் செய்கிறது?.
தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் அரசாக இருக்கிறதா?. தொழிலாளர்களின் குடும்பத்தையும் அரசு நிச்சயம் கருத்தில்கொள்ள வேண்டும். மாறாக அரசு இந்து சமுதாயத்திற்கு வளர்ச்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே நடந்துகொள்கின்றது. கொரோனாவை விட, இந்துக்களின் மனதைப் பாதிக்கும் நோயைப் போன்று செயல்படுகிறது தமிழக அரசு. தெய்வீகத்தை மறைக்கும் வகையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்” என்றார்.
அதேபோல் சென்னையின் கொசாப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி, தசரா, கிருஷ்ண ஜெயந்திக்கான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் அதிகமானோர் இந்த தொழிலைச் செய்து வந்த நிலையில், தற்போது வெறும் 40 குடும்பங்கள் இதுபோன்ற பண்டிகை காலங்களை நம்பி தொடர்ந்து சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொசப்பேட்டை பகுதியில் முன்கூட்டியே சிலைகள் தயார் நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும். அந்த பகுதியிலிருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது முற்றிலும் களை இழந்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் செய்து முடித்த சிலைகளை என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
விநாயகர் சிலையை வைத்து அரசியலா?
தமிழ்நாடு அரசின் முடிவிற்குத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊர்வலம் நடந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை ஏன் திறக்க வேண்டும்?. எந்த அரசு தடுத்தாலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். மேலும், திராவிட முன்னேற்றக் கழக அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்ய நினைத்தால், அதே விநாயகரால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” என்றார்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்குப் பலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாகக் கடந்த ஆண்டை சுட்டிக்காட்டி அதிமுக அரசு தடை விதித்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும், விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது. அப்படி இருக்கையில், அங்கு ஆட்சி கவிழ்ந்ததா என்ற வகையிலும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வினாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கவில்லை எனில் தமிழக அரசு கலைக்கப்படும் என சிலர் கூறுகிறார்கள்
— Niranjan kumar (@niranjan2428) September 2, 2021
கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்காக பொதுஇடத்தில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டது
குஜராத் அரசை கலைத்தார்களா என்ன?
Full news ????https://t.co/PW8KV83cKO pic.twitter.com/fpMkr7ovtO
மறுபுறம், இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர். ஒரு புறம், கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மறுபுறம் கோயில்களில் பிரார்த்தனை செய்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி சோமன் குறிப்பிடுகையில், “இன்று மாநில முழுக்க உள்ள கோயில்களில் தமிழக அரசிற்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் கூறியிருந்தார்” என்று தெரிவித்தார்.

மேலும், “கொரோனா தொற்றைக் காரணம் காட்டி விநாயகர் சதுர்த்திக்குத் தடை விதிக்கப்படவில்லை. இந்துக்களின் விழாவிற்கு மட்டும்தான் தற்போது தடை விதித்துள்ளனர். தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இது மத சார்பற்ற நாடு. அவ்வாறு இருக்கையில் இந்துக்களுக்கு ஒரு சட்டமும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
நாங்கள் ஆரம்ப முதலே அரசின் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தே ஒவ்வொரு நிகழ்வுகளையும் வழிநடத்தி வருகிறோம். கொரோனா காலத்தில் எத்தனையோ போராட்டங்களை நடத்தினோம், ஆனால் ஒன்றில்கூட விதிமுறைகளை மீறவில்லை. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் விதிகளை மீறியதற்கான ஆதாரங்களை நான் காட்டத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories
விநாயகர் சதுர்த்தியின் அரசியல் பின்னணி | குட்டி Documentaries | வீடியோ
‘‘கரோனா காலத்தில் விநாயகர் சதுர்த்தி புத்துணர்வு தரக்கூடியது” - ஹேமந்த் குமார், பா.ஜ.க | Talk to Asiaville
“அம்பேத்கரை Politicise பண்ண வேண்டும்” - தொல்.திருமாவளவன்
"என்னைவிட ஆயிரம் மடங்கு மனு நூலை தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர்" - தொல்.திருமாவளவன்