சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாகும் ‘துக்ளக் தர்பார்’!
'துக்ளக் தர்பார்’ படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், ‘லாபம்’, ‘மாமனிதன்’ , ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ’துக்ளக் தர்பார்’ ’கடைசி விவசாயி’ உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதில் ‘துக்ளக் தர்பார்’ படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கியுள்ளார். ராஷி கன்னா, பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிபரப்பு உரிமை சன் டிவி வசம் உள்ளது.
இப்படத்தை சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் 'துக்ளக் தர்பார்’ படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘வெள்ளை யானை’ ஆகிய படங்கள் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.
சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்பு, ’துக்ளக் தர்பார்’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இதுவரை சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகியுள்ளன. விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகரின் படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில், விரைவில் வெளியாகவுள்ள ‘மாஸ்டர் செஃப்’ என்கிற ரியாலிட்டி ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
