கிருமிகளை அழிக்கும் கழுகுகள் ஏன் அபசகுனமாக பார்க்கப்படுகிறது? தமிழகத்தில் கழுகுகளும், பாதுகாப்பும்?
பிணந்தின்னிகள், கொன்று தின்னிகள் என்று பார்க்கப்பட்டாலும், கழுகுகளின் நன்மைகள் ஏராளம். நம் ஊர்களில் வலசை வரும் பல நாட்டுக் கழுகுகளைத் தக்கவைக்கப்படாமல் தவற விடுகிறோமோ? என்ற அச்சம் எழுகிறது. கழுகுகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய விரிவான அலசல்
கழுகு என்றாலே, புலிட்சர் விருதுபெற்ற கெவின் கார்ட்டரின் புகைப்படம் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு. பஞ்சத்தால், இறக்கும் நிலையில் இருந்த குழந்தையின் உடலை, உண்ணக் காத்திருக்கும் கழுகுடன், அந்த புகைப்பட கலைஞர் பதிவு செய்திருப்பார். எனவே கழுகுகளை நினைத்தாலே பிணம் தின்னும் உயிரினம் அல்லது கொன்று தின்னும் உயிரினம் என்று எனக்கு தோன்றியிருக்கிறது. இது பற்றி விரிவான தகவல்களைச் சேகரிக்கும் போதுதான், சில ஊர்கள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் பறவைகள் கழுகு இனத்தை சேர்ந்தவை என்பதும், அனைத்து கழுகுகளும் கொன்று தின்னும் உயிரினம் அல்ல என்றும் தெரியவந்தது. கழுகுகள் இயற்கையைத் தற்காத்துக்கொள்ளும் துப்புரவாளர்கள் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
கொரோனா காலத்தில், நோயைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி பேசாமல், கழுகுகளைப் பற்றிப் பேசி என்ன பலன் என்று உங்களுக்குத் தோன்றலாம். வைரஸ், பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்துவதில் கழுகுகளின் பங்கு மிகப்பெரியது.
உலகம் முழுவதும் 23 வகை பாறு கழுகு இனங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இவற்றில் 9 இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவை. வெண்முதுகுப் பாறு, கருங்கழுகுப் பாறு, மஞ்சள்முகப் பாறு, செந்தலைப் பாறு, வெண்தலைப் பாறு, தாடிப் பாறு, வெண்கால் பாறு, ஊதாமுகப் பாறு, இமாலயப் பாறு ஆகியனவாகும்.

தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் கழுகுகள் வருவதுண்டு. அவற்றில் எவ்வளவு பெரிய உடலையும், கூட்டமாக இணைந்து அரைமணி நேரத்திற்குள் உண்டு தீர்க்கும் திறன் கொண்டவை பாறு இன கழுகுகள்தான்.
பாறு கழுகுகள்?
தமிழ் நாட்டின் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் காணப்படும் பாறு கழுகுகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் அழிவைச் சந்தித்திருந்தன. தற்போது சத்தியமங்கலம் பகுதியில் வெண்முதுகுப் பாறு 135, செந்தலைப் பாறு 5, கருங்கழுகுப் பாறு 17 கண்டறியப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது பறவைகள் நல ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ஒரு காலத்தில் ஆயிரக் கணக்கான அளவிலிருந்தவை தற்போது நூறு என்ற அளவில் எட்டிப்பிடிப்பதே ஆச்சரியம் என்ற அளவில் குறைந்திருப்பது கொஞ்சம், அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
பாறு கழுகுகளை 'அபசகுனம்' கொண்டவை என்றும் சித்தரிப்பதுண்டு.
பாறு கழுகுகள் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும், அவற்றைக் கூட்டமாக அமர்ந்து அரைமணி நேரத்தில் தின்று தீர்த்துவிடும். ஒரு நாளில் 1 முதல் 1.5 கிலோ அளவிற்கு அவை இறந்த உடல்களைத் தின்றுவிடுகின்றன. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாமல் கூட இருந்துவிடும்.
பெரும்பாலும், உயரமான மரங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகள், வானில் உயரப் பறக்கும் திறன் பெற்றுள்ளன. எவ்வளவு உயரப் பறந்தாலும், கீழே இறந்து கிடக்கும் உடல்களைக் கண்டுபிடித்துவிடும்.
தமிழ்நாட்டில் உள்ள பாறு கழுகுகள் பற்றி 'அருளகம்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டிருந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த பாரதிதாசன் அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, “பாறு கழுகுகளுக்கு, சக்திவாய்ந்த சீரண சக்தி இருக்கிறது. அதன் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால், கொடிய வைரஸ்கள் உள்ளே சென்றுவிட்டால் கூட கழுகைப் பாதிப்படையச் செய்வதில்லை. இது முழுக்க அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் மட்டுப்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கோமாரி நோய், காணை நோய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுகளால் அவை இறந்தாலும், அந்த உடல்களைக் கழுகுகள் உண்பதால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை மற்றொரு விதத்திலும் பார்க்கலாம், இறந்த உடல்களை அப்படியே விட்டுவிட்டால் அதிலிருந்து நோய்கள் பரவும். பாறு கழுகுகள் அவற்றை உண்பதால், அந்த நோய் அடுத்தகட்டத்திற்குப் போகாமல் தடுக்கப்படுகிறது என்பதையும் நாம் சொல்ல முடியும்.
பெரும்பாலும், பாறு கழுகுகள் அடர்ந்த காடுகள் இல்லாத நாடுகளையே விரும்புகின்றன. கழுகுகளால் அடர்ந்த காடுகளில் உணவு கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
தமிழ்நாட்டில் மனிதர்கள் நடத்திய மறைமுக தாக்குதல், பாறு கழுகுகளின் அழிவிற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியா என்று இரண்டு வகைகளில் பாறு கழுகுகளின் அழிவைப் பிரித்துப் பார்க்கலாம். வட இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இல்லை. எனவே மாடு இறந்தால் எதாவது ஒரு இடத்தில் சென்று கழைந்து விடுகின்றனர். அது கழுகுகளுக்கு உணவாகும்.
சில வருடங்களுக்கு முன்பு மாடுகளுக்கு வலி நிவாரணியாக diclofenac என்ற மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இது வலியை மரத்துப் போகச் செய்யும் ஒரு மருந்து. ஆனால் அந்த மருந்து நோயைக் குணப்படுத்தாது. இதைக் கொண்டு பலரும், மாடுகளுக்கு எந்த நோய் தென்பட்டாலும் diclofenac மருந்தைச் செலுத்தத் துவங்கினர். இந்த மருந்தை உண்ட மாடுகள் செத்துப் போகின்றன. மாட்டிறைச்சியை மனிதர்கள் உண்ணாததால், ஏதேனும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போடப்படுகிறது. அந்த மருந்தின் எச்சம் மாட்டில் இருக்கும். அதை உண்ணும் கழுகுகளின் உடலில் செரிமானத்தைத் தடுப்பதுடன், சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்துவிடும். இதனால் கழுகுகள் எளிதில் இறக்க நேரிடுகிறது. இது அறிவியல்பூர்வமான தரவுகள்.
தமிழ்நாட்டில் அருகில் இருக்கும் கேரளாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் அதிகமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இறந்த மாடுகளை வெளியில் போடாமல் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதனால் பாறு கழுகுகளுக்கு உணவு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகிறது. மனிதர்களுக்கு நோய் பரவக்கூடாது என்று இறந்த மாடுகளைப் புதைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் புதைக்கும் பழக்கத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். இதனால் கழுகுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இரண்டாவதாகப் புலி போன்ற விலங்குகளைக் கொல்வதற்கு விஷம் தடவிய உடல்களைக் காட்டுப்பகுதியில் போட்டுவிடுகின்றனர். இதை உண்ணும் போது கழுகுகள் கொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கழுகுகளை அபசகுனமாகப் பார்க்கும் பழக்கமும் உண்டு. இதனால் கேட்பாரற்று, முக்கியத்துவம் இல்லாத உயிரினமாகக் கழுகுகளின் வாழ்க்கை மாறிவிட்டது. கழுகுகள் அமரும் மரம் விரைவில் பட்டுப்போகும் என்று பலரும் குறிப்பிடுவதுண்டு. இதில் அறிவியல்பூர்வமான விஷயங்களும் இருக்கின்றன. கழுகின் மலம் அதிக அளவில் சுண்ணாம்பாகவே வெளிவரும். ஒரே மரத்தில் கழுகுகள் தொடர்ச்சியாக அமர்ந்திருந்து கழிவுகளை வெளியேற்றினால், சுண்ணாம்பின் தன்மையால் மரம் சில காலத்தில் பட்டுப்போகக் காரணமாகிறது. மழை பெய்தால், அந்த மலம் கீழே வழிந்து நீர்த்துப் போய்விடும். தொடர்ச்சியாக வறட்சி ஏற்பட்டால், சுண்ணாம்பின் தன்மை அதிகமாகி இதுபோன்ற சூழலையும் ஏற்படுத்துகிறது.
பாறு கழுக்களைப் பாதுகாப்பது என்பது அனைவரும் கைகோர்த்துச் செய்யக்கூடிய வேலை. இதற்கான பாதிப்பு என்பது பலவகையிலிருந்து வருகிறது. எனவே அரசு மற்றும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். diclofenac மருந்தை அரசு தடை செய்தாலும், அதே திறன் கொண்ட மற்ற மருந்துகள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. அவற்றையும் தடைசெய்ய வேண்டும்.
காட்டுப்பகுதியில் இறக்கும் யானைகள், எருது போன்ற உயிரினங்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் அப்படியே காட்டிற்குள் விட்டுவிடலாம். சில காரணங்களால் அவற்றின் மீது இருக்கும் அசௌகரியத்தை மிகைப்படுத்திப் புதைக்கின்றனர். அதைத் தவிர்க்கலாம். அசௌகரியம் இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குத் தீர்வை தேடாமல் எத்தனை நாள் இதையே சொல்லிக்கொண்டிருப்பது.
காட்டிற்கு மட்டுமல்ல, கடலில் ஒரு உயிரினம் இறந்தாலும், இதைதான் அரசு செய்கிறது. திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கினால் அவற்றை மீட்டு, மண்ணில் புதைக்கின்றனர். இரண்டு மூன்று துண்டுகளாக அறுத்து மீண்டும் கடலின் ஆழத்தில் சென்று போடலாம். அவை மற்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கும்.
தமிழ்நாட்டிலேயே 59 வகையான கழுகுகள் வருகின்றன. அவற்றில் பாம்பை உண்ணக்கூடிய கழுகுகள் கூட இருக்கிறது. மீன் மட்டும் உண்ணும் கழுகுகள் இருக்கின்றன. இவற்றில் எகிப்தியன் கழுகுகள் மட்டும் தனித்துவமானவை. அதிலும் மஞ்சள் முகப் பாறு கழுகுகளும், தாடிப் பாறுகளும் தனித்துவமானவை. அவை தனியாகவே சென்று உணவைத் தேடுகின்றன. மற்ற கழுகுகள் பெரும்பாலும் கூட்டமாகவே சென்று உணவை உட்கொள்ளும். எனவே அவற்றுக்குப் பெரிய அளவிலான விலங்கே தேவைப்படும்.
வேட்டையாடி கழுகுகள்
பாறு கழுகுகள் வெறும் பிணங்களை உண்பதாக இருக்கிறது. பாம்பு, மீன் உண்ணும் கழுகுகள் உள்ளன. இவை குறிப்பிட்ட அந்த உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
இவற்றைத் தவிரப் பருந்துகள் உள்ளன. இவை மயில், காட்டுக்கோழி, புறாக்கள், கோழிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். அதேபோல் சிறிய அணில்கள், காகங்கள் போன்றவற்றையும் கூட பருந்துகள் வேட்டையாடுகின்றன.
தமிழ்நாட்டிற்கு வரும் பிற கழுகுகள்
தமிழ்நாட்டில் பாறு கழுகுகளைத் தவிர மற்ற கழுகுகளும் உள்ளன. இவை பல இடங்களிலிருந்து சில காலம் உணவிற்காகத் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைகின்றன. உணவு வேட்டை முடிந்ததும், அவற்றின் இனப்பெருக்கத்திற்காகச் சொந்த இடங்களை நோக்கித் திரும்பும்.
தமிழ்நாட்டில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிக அளவில் கழுகுகள் வலசை வருவதாகப் கூறுகிறார், பறவைகள் ஆர்வலர் திருநாரண்ணன். அவரிடம் இது பற்றிக் கேட்டபோது, “கழுகுகள் என்பதைவிட 'வேட்டையாடிகள்' என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். நான் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 12 வருடங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். கரும் பருந்து எனப்படும் கழுகு வகைகள், தென்மேற்கு பருவமழைக்குப் பின் சென்னையை நோக்கி வருகிறன. இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் 700 கரும்பருந்து கழுகுகளைப் பதிவு செய்திருக்கிறோம். இவை ஒரு அற்புதமான துப்புரவாளர்கள்.
கரும் பருந்துகள் மனிதர்களுக்காகச் சுத்தம் செய்து பாதுகாக்கின்றன. எப்படி பிணந்தின்னி கழுகுகள் (பாறு கழுகுகள்) காட்டிற்கு முக்கியமோ, அதேதான் இந்த வகை கழுகுகள் நாட்டிற்கு முக்கியமானவை. ஒரு இடத்தில் கழுகுகள் இருந்தால், அந்த இடத்தின் சூழல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
பிணந்தின்னி கழுகுகள், காட்டில் இறந்த விலங்குகளை முழுவதும் உண்டுவிட்டு பாக்டீரியா, வைரஸ்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும். பிணந்தின்னி கழுகுகள் ஒரு சமயம் அதிக அளவில் அழிவைச் சந்தித்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி வனப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய மோயாறு நிலப்பகுதியில் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் போது பள்ளிக்கரணை பகுதியில் 9 வகையான வலசை வேட்டையாடி கழுகுகள் வருகிறது. அந்த கழுகுகள், இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு உணவிற்காக மட்டும் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. அவை பள்ளிக்கரணை பகுதியில் வரும் மற்ற பறவைகளை வேட்டையாடி உணவாக்குகின்றன. பள்ளிக்கரணை பகுதி இல்லை என்றால் கழுகுகள் இருக்காது, கழுகுகள் இல்லாமல் பள்ளிக்கரணை நன்றாக இருக்காது

கொரோனா வைரஸ் போன்றவை கூட, எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் வனத்தை அழிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வைரஸ்கள் எல்லாம் பரவுவதற்கு முக்கிய காரணம் வனங்களை அழிப்பதுவே, என்று ஆய்வுகள் கூறுகின்றன. வைரஸ்கள் புதிது புதிதாக வந்துகொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது.
வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கழுகுகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் நாம் அதை இரண்டாம் நிலை பாதுகாப்பு என்று மட்டுமே பார்க்கிறோம். அவற்றை முதன்மையான ஆதாரமாகப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இருவரும் குறிப்பிட்டதில் முக்கியமான கருத்து வைரஸ்களை அழிப்பதில், கழுகுகளின் பங்கு மிகப்பெரியது என்பதுதான்.
இயற்கை ஆர்வலர்கள் சிலரிடம் பேசும்போது கூட, இயற்கையை அழிப்பது சரியான வாழ்வியல் சூழலை இழக்கச் செய்கிறது. ஒவ்வொரு பறவைகள், விலங்குகள் அவற்றின் இயல்பின்படி, மனிதனுக்கு உறுதுணையாகவே இருக்கின்றன. ஆனால், தற்போதைய காலத்தில் காடுகள் அழிப்பு, மனிதனின் புதிய வழக்கங்கள் போன்றவை இயற்கையை நம்பியிருக்கும் உயிரினங்களின் வாழ்க்கையை அழிக்கிறது. மனிதன் சுகாதாரம், சுகாதாரம் என்று தேடுத்தலில் பல நோய்களைத் தானாகவே தேடிக்கொள்கிறான். நோய் கிருமிகளை அழிக்கும் உயிரினங்களை அழித்து, தானாக மருந்துகளை தேடிக்கொண்டிருக்கிறான், என்கின்றனர்.
