“நம் நாட்டை பொறுத்தவரையில், நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது, பயனற்றது”
தேர்தலில் வாக்களிக்கும், புதிய வாக்காளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. பொதுவாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில், அதிக அளவில் தங்களை ஈர்க்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவாக இருக்கிறது. இறுதி முடிவுகள் வெளியாகும்போதுதான், யார் வெற்றிபெறுவது என்பது உறுதியாகும்.தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்களும், 7,246 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
18-19 வயதிற்குட்பட்ட இளம் வாக்காளர்கள், 13,09,311 பேரும் (இவர்கள் புதிய வாக்காளர்கள்), 20லிருந்து 29 வயதிற்குப்பட்டவர்களில் 1,23,95,696 வாக்காளர்களும் உள்ளனர். இதன் அடிப்படையில், இளம் வாக்காளர்களின் வாக்கு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வாக்காளர்களுக்கு யாரைத் தேர்வு செய்வது? எந்த கட்சிக்கு வாக்களிப்பது? நோட்டாவுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்பது போன்ற பல கேள்விகள் இருக்கலாம். அதேசமயம் தங்களுக்கென்று ஒரு கொள்ளையும் வைத்திருப்பர். இந்த கேள்விகள் அனைத்தையும், பத்திரிகையாளர் பிரியன் அவர்களிடம் முன்வைத்திருந்தேன்.

கே: புதிதாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது?
முன்பு போன்று இந்த காலம் இல்லை. இந்த தேர்தலில், 13 லட்சம் பேர் புதியதாக வாக்களிக்க உள்ளனர். 18 வயதிலிருந்து 29 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் மட்டும் 1 கோடியே 37 லட்சம் பேர் உள்ளனர். 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 1 கோடியே 37 லட்சம் என்பது முக்கியமான இடத்தை பிடிக்கிறது.
இந்த வாக்காளர்களுக்கு யாரும், அடிப்படையாக அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் எளிதில் விவரங்கள் கிடைத்துவிடுகிறது.
இளம் வாக்காளர்களுக்குள் பல விதத்தில் வாக்காளர்கள் தேர்வு இருக்கும். ஒன்று தத்துவாத்த ரீதியில் தேர்வு செய்கின்றனர். உதாரணமாக சீமானின் தமிழ தேசியத்தின் மீதான ஆர்வம் உடையவர்களை குறிப்பிடலாம்.
இந்துத்துவா போன்ற கருத்துகளில் உடன்பட்டு, பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் இருக்கலாம். சமூக நீதி போன்ற கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் அத்தகைய கட்சியை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, இங்கு பாதுகாப்பு முக்கியம் என்று நினைபவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. இளைஞர்கள் இப்படிதான் வாக்களிப்பாளர்கள் என்று குறிப்பிட முடியாது.
ஆனால், இளம் வாக்காளர்களை பணம் கொடுத்து கவர முடியாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணம் வாங்குவதை விட, 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாங்குவது மிகக்குறைவு. பணம் வாங்குவது, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுவது தவறு என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கின்றனர். புதிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க விரும்பும் இளைஞர்களும் அதிகமான உள்ளனர்.
எதார்த்த நிலை இது தான் என்று நினைத்து அதிமுக மற்றும் திமுகவிற்கு வாக்களிக்கவும் வாய்ப்புள்ளது. அதிமுகவை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் திமுகவை தேர்ந்தெடுப்பர். இளஞர்களிடையே ஒரு மாற்றத்திற்கான முனைப்பு இருக்கும்.

நோட்டாவுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?
நம் நாட்டை பொறுத்தவரையில், நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது, பயனற்றது. உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், 50 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்தால், மீதமிருக்கும் 45 வாக்குகள் திமுகவிற்கு விழுந்தாலும், திமுக வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்படும். சட்டபடி நோட்டாவிற்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்தாலும், எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
நோட்டாவிற்கு அதிக அளவில் வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுவரைக்கும் நம்நாட்டில் அப்படி நடக்கவில்லை. எனவே நோட்டாவிற்கு வாக்களித்தால், தனிப்பட்ட விரும்பம் தீர்வாகுமே தவிர ஒரு ஜனநாயக கடமை ஆற்றியது போன்று இருக்காது. உங்கள் தனிப்பட்ட விரும்பம் மட்டுமே நிறைவேறும். நோட்டாவிற்கு வாக்களிப்பவர்கள் திமுக, அதிமுக மீது கோவத்தில் இருந்தால், சுயேச்சை வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். எத்தனையோ நல்ல சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களின் விவரங்கள் கூட சமூகவலைதளங்களில் அதிக அளவில் கிசைக்கின்றன. எனவே இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.
வாக்களிக்காமல் தவறவிடும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வாக்களிக்காமல் தவறவிடுவதால் யாருக்கு லாபம்?
வாக்களிக்காமல் தவறவிடுவது, மோசமான ஆட்களை ஆட்சிக்கு கொண்டுவரும். எல்லோருமே வாக்களிக்க வேண்டும். நகரத்தில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கும் மனோபாவம் குறைவாக இருக்கிறது. விடுமுறை கிடைத்துவிட்டது என சொந்த வேலைகளை பார்த்துக்கொண்டிருக்க கூடாது.
மற்ற மாநிலங்களில் வாக்கு சதவீதம் ஏறிக்கொண்டிருக்கிறது. படிப்பறிவு குறைவான மாநிலமான மேற்கு வங்கத்தில் கூட 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் 80 முதல் 82 சதவீதம் வாக்குகள் தமிழகத்திலும் பதிவாகும். ஆனால், கடந்த தேர்தல்களில் சென்னை போன்ற நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாகவே இருந்தது. எனவே படித்தவர்கள் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கவில்லை என்றால், ஊழல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டுவரச் செய்யும்.
