’பெட்ரோல், டீசல்’ தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா? - டிடிவி தினகரன்
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் இந்த உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், மேகேதாட்டு அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ “பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை வதைக்கும் பெட்ரோல்,டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில், அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க, தற்போது அதனை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும் போது தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா?
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வராமல்,விலைவாசியை எப்படி குறைக்க முடியும்?எனவே,பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories
பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது? - மு.க.ஸ்டாலின்
அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியுமோ? - டிடிவி தினகரன்
மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல் - டிடிவி தினகரன்