“சாத்தான்குளம் தந்தை - மகன் முதலாமாண்டு நினைவு நாளில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம்” போலீசார் தாக்கி முருகேசன் உயிரிழந்தது குறித்து டிடிவி தினகரன்
காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்குறிச்சிக்குச் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வரும் போது இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸாரிடம் விசாரணையில் சிக்கினார். அப்போது முருகேசனுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் தாக்கியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன், “சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறை போக்கைக் கடைபிடிப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாமாண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது
உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
மேலும், மக்களிடம் வன்முறையைக் கையாளாமல் நடந்து கொள்வதற்கு தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
