“கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்” - பிரதமர் மோடி
மத்திய அரசு சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் 75% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் 2021 ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, 79வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி.
அப்போது அவர், ”கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகமே கார்கில் போரை வியந்துள்ளது. கார்கில் என்றாலே நம் வீரர்களின் ஒழுக்கத்தையும் தியாகத்தையுமே குறிக்கும். கார்கில் போர் நாளை இந்தியா ’அம்ருத் மகோத்சவ்’ என்று கொண்டாடுகிறது. இந்த நாளில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் 75% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எல்லாருடைய ஆலோசனைகளையும் என்னால் பயன்படுத்த முடியாது என்பதால் நல்ல ஆலோசனைகள் இருந்தால் அதனைச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவிடுகிறேன். இந்த மாதம் சுமார் 30,000 கருத்துகள் வந்துள்ளன. அதன் மூலம் நம் நாட்டின் இளம் தலைமுறைகளின் எண்ணத்தை அறிய முடிகிறது.
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஆகவே, நாம் ஒவ்வொரு துளி மழை நீரையும் பாதுகாக்க வேண்டும். அதுவே நம் பாரம்பரியமாகும். அடுத்தடுத்து நமக்கு பண்டிகைகள் வரவிருக்கின்றன அதற்கு இப்போதே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகள் கொண்டாடும்போது கொரோனா நம்மைவிட்டு முழுமையாகச் செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்.
தற்போது, ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கியுள்ளன. நாம் நமது வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் நமது தேசியக் கொடியை ஏந்திச் சென்றபோது ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ந்தது. நாம் நமது வெற்றிக் கணக்கைத் தொடங்கிவிட்டோம். தேசிய கைத்தறி நாள் வரவிருக்கிறது. முடிந்த அளவு கைத்தறி ஆடைகளை அணியுங்கள்” எனப் பேசினார்.
