'ஆன்லைன் வகுப்பு: உடல், உள்ள நலனைக் கெடுக்கும் வழிமுறை!' செப்., பள்ளிகள் திறப்பின் அவசியம்?
ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்காமல் போவதாகவும், பலர் பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்துவதாகவும் கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே ஆன்லைன் வகுப்புகளை நிறுத்திவிட்டு பள்ளிகளை திறக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதை அவர்கள் வரவேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக, நேற்றைய தினம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வேளையில், பள்ளிகள் திறப்பு தேவையா என்று கேள்வி எழுப்பும் ஒருசாராரும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைக் கட்டாயம் திறக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் குறிப்பிட்டு வருகின்றனர். பள்ளிகள் திறப்பை ஆதரிப்போர், அதே சமயம் பாதுகாப்பிற்கு அரசு சரியான என்ன நடவடிக்கை வைத்திருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பவும் மறக்கவில்லை. அதையும் முன்வைக்கின்றனர். அரசின் நிலைப்பாடு? பள்ளிகள் திறப்பின் அவசியம்? விரிவாக
தமிழ்நாடு அரசின் முடிவு என்ன?
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தணிந்ததும், பெருமளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்றைய தினத்தில் 1,985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வெளியிடப்படும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் 18 வயதிலிருந்து மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனவே பள்ளிகளைத் திறப்பது தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற கருத்துத்தும் நிலவுகிறது.
தமிழ்நாடு அரசு உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டபின், சில கட்டுப்பாடுகளை விதித்ததுடன், பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும். செவிலியர் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு, மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் முன்னதாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவது என்பது ஒருவகையில் மகிழ்ச்சியான விஷமாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் ஆன்லைன் வகுப்புகள் நிலை பற்றி செய்தியாளர் வித்யா, மாணவர்களிடம் கேட்டபோது “பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
இதுபற்றி கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி, “பள்ளிகள் திறப்பிற்கு முன்கூட்டியே பயிற்சி வழங்கப்படுகிறது. செவிலியர்கள் பலர் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளனர். பள்ளியைத் திறக்காமல் விட்டால், மாணவர்களின் படிப்பு தடைப்படும். படிப்பில் மிகப்பெரிய இடைவேளை ஏற்பட்டுள்ளது. அதிகமானோர், படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர். குழந்தைகளுக்கான கல்வி உரிமையில் கூட 72 ஆயிரம் பேர் அளவுதான் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறுவதும் குறைந்துள்ளது. எனவே தக்க பாதுகாப்போடு பள்ளிகள் திறப்பதே சிறந்தது”
2014-ம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவு படி, தமிழகத்தில் 7800 அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. பெரும்பாலான பெண் குழந்தைகள் மாதவிடாய் துவங்கியதும் பள்ளிக்குச் செல்வதை நிறுத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், முழுமையாகத் தீர்வு காணப்படவில்லை. இதற்குப் பதிலளித்த கல்வியாளர் முருகையன், “கிராமப்புறங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. பல பள்ளிகளில் கழிவறை கூட இல்லை. போர்க் கால அடிப்படையில் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் கழிவறை, தண்ணீர் போன்றவற்றையாவது ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தனி நிதிநிலை பட்ஜெட் போடப்படுவது போன்று, கல்விக்குக் கூட தனி நிதிநிலை பட்ஜெட் போடலாம்”என்றார்.
இதற்கு முன்னதாக சில விஷயங்களை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கொரோனா தொற்றின் தாக்கம் பரவத்துவங்கியதிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடைமுறைக்கு வந்தன.
நேரடி வகுப்புகள் அளவு, ஆன்லைன் வகுப்பில் கல்வி கொடுக்க முடியுமா என்றால், அது நிச்சயம் இல்லை. ஒவ்வொரு விதத்திலும், ஆன்லைன் வகுப்பின் தரம் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு பி.எஸ்.பி.பி-யின் ஆன்லைன் வகுப்பில் நடத்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் போன்றவை கூறலாம்.

அதைத் தவிரக் கல்வி ரீதியாகவும், உடல் ரீதியாகவுமே மாணவர்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் 59.2 சதவீதம் மாணவர்கள் ஸ்மார்ட் போன்களை, சமூகவலைத்தளங்களில் மெசேஜ் அனுப்பப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தது. மாணவர்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சார்ட் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மற்றவர்களுக்குத் தகவல்களை அனுப்பி வந்துள்ளனர்.
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளில் 30 சதவீதம் பேர் சொந்த ஸ்மார்ட்போன்களை கொண்டிருந்தனர். அதிலும் 10 வயதுக் குழந்தைகளில் 37.8 சதவீதம் பேர் சொந்தமாக பேஸ்புக் அக்கவுண்டும், அதே வயதுடைய 24.3 சதவீதம் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
அனைத்து வயது குழந்தைகளும் லேப்டாப், டேப், இணையம் போன்றவை சாதாரணமாகக் கையாளும் திறன் கொண்டுள்ளனர். இவ்வாறு மாணவர்கள் ஆன்லை வகுப்புகளில் முறையாகக் கலந்துகொள்ளாமல் இருப்பதாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.
“ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட, பலவற்றைக் கற்றுக்கொண்டுவிட்டனர். வகுப்பு நேரத்தில் Mute செய்வது, Video off செய்து வைத்திருப்பது போன்றவை செய்கின்றனர். அதேபோல் ஆசிரியர்களும் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது பெற்றோர் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர்களுக்குப் பாடம் நடத்தும்போது சுதந்திரம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடம் எடுப்பதைப் பெற்றோர் பார்க்கலாம், ஆனால் சில பெற்றோர் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்குக் குழந்தை பதில் சொல்லவில்லை என்றால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்கிறார் கல்வியாளர் முருகையா.

லக்னோவிலிருந்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ஆன்லைன் வகுப்புகள் கவனிக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவுகள் அதிக அளவில் ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 54-58 சதவீதமான குழந்தைகளுக்குக் கண்கள், உடல் போன்ற பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த கல்வியாளர் முருகையா “நம் ஊர்களிலேயே சிலர் இந்த ஆய்வை மேற்கொண்டு, இதே கருத்தை முன்வைத்திருந்தனர். ஆன்லைன் வகுப்புகள் ஆரோக்கியமான செயல்பாடு அல்ல என்பதை முன்பிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் இது ஆத்திரத்திற்குக் கண்டுபிடித்த ஒரு புதிய முறை. தனியார்ப் பள்ளிகள் வருவாயை ஈட்டுவதற்காக இதை ஆரம்பித்து வைத்தனர். அந்த நடைமுறையே இன்றும் தொடர்கிறது.
ஆன்லை வகுப்புகளால் கண் பாதிப்பு ஏற்பட்டது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது, பலர் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க முடியவில்லை என்று தற்கொலை செய்துகொண்டனர்.
அதேபோல் பல இடங்களில் இணைய வசதிகள் இல்லை. சரியான வசதிகள் குக்கிராமங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இதைத் தொடர முடியாது. பல நெறிமுறைகளை வகுத்தாலும், அது பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற சூழல்களால்தான் பத்ம சேஷாத்ரி பிரச்சனைகளே ஏற்பட்டது. எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்காத வரையில் நடைமுறைப்படுத்துவது தவறான அணுகுமுறை.
பிரதமர் கொரோனா ஒரு புதிய வழிமுறையை கற்றுத் தந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். என்ன வழிமுறை அது? மாணவர்களின் உடல்நலனையும் உள்ள நலனையும் கெடுக்கும் வழிமுறையைத்தான் கற்றுத்தந்திருக்கிறது. டெக்னாலஜி வளருவதைக் குறை சொல்லவில்லை. குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படும் போது இது சரியான முறையாக எனக்குத் தெரியவில்லை” என்றார்.
மறுபுறம் பள்ளிகளுக்கு அனுப்ப அச்சப்படும் மக்களும் இருக்கிறார்கள். சில பெற்றோர் கூறுகையில், “வீட்டில் வயதானவர்கள் உள்ளனர். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவருகையில் வீட்டிற்குள் கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்பட நேரிட்டால், வயதானவர்கள் என்ன செய்வார்கள்” என்று கேள்வி எழுப்பினர்.
அதேபோல், 12-ம் வகுப்பு முடித்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், கொரோனா தொற்று காலத்தில் அவர்களுக்கு சேவை செய்ய அனுப்புவார்கள் என்ற அச்சத்தில், ஒரோண்டு காலம் படிக்காமல் தவிர்த்த மாணவர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் இந்த ஆண்டில்தான் கல்லூரியில் சேர உள்ளனராம். எனவே பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் இருவேறு கருத்துகளே உள்ளது. ஆனால் மாணவர்களின் நலன் என்பது, தரமான கல்வி மட்டுமே. அதை நேரடி வகுப்புகள் மூலம் பெறுவதை விட சிறந்தது எதுவாகவும் இருக்க முடியாது. ஆன்லை வகுப்புகள், அனைத்தையும் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் நடத்தையையும், அனுபவத்தையும் நிச்சயம் கொடுத்துவிடாது. எனவே நேரடி வகுப்புகள் என்பது கட்டாயம் அவசியம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
