மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கைகள் கட்டப்பட்டிருக்கிறதா? எண்ணூர்-மணலி பகுதியில் அதிகரிக்கும் பிரச்சனை!
CPCL, Madras Fertilizers Ltd (MFL), தமிழ்நாடு பெட்ரோபிராக்ட்ஸ் லிமிடெட், NTECL வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் TANGEDCO வின் வட சென்னை அனல் மின் நிலையம் 50 சதவீதத்திற்கு அதிகமான காற்று மாசு ஏற்படுத்தியுள்ளது.
வட சென்னையில் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுப் பலமுறை எழுந்துவிட்டது. எனினும் அவற்றில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த முறை என்ன குற்றச்சாட்டு?... சென்னை எண்ணூர் - மணலி பகுதியில் உள்ள 6 தொழிற்சாலைகள் சட்டத்திற்குப் புறம்பாகக் காற்று மாசு ஏற்படுத்தி வந்த நிலையில், அதைப் பற்றி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளவில்லை என்பதுதான்.
முன்னதாக TANGEDCO நிறுவனம் செய்யும் தவறுகளை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டுகொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. தற்போது மாசுக்கட்டுப்பாடு வாரியம் வடசென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து வெளியிடும் மாசுகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னென்ன நிறுவனங்கள்? எவ்வளவு மாசு?
CPCL, Madras Fertilizers Ltd (MFL), தமிழ்நாடு பெட்ரோபிராக்ட்ஸ் லிமிடெட், NTECL வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் TANGEDCO வின் வட சென்னை அனல் மின் நிலையம் 50 சதவீதத்திற்கு அதிகமான காற்று மாசு ஏற்படுத்தியுள்ளது.
இதில் MFL, CPCL, NTECL மற்றும் TANGEDCO ஆகியவை அதிக அளவில் காற்றுமாசு வெளியிட்ட முக்கி குற்றவாளிகளாக உள்ளனர். அதிலும் சல்பர் டை ஆக்சைடு, நுண் துகள்கள் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடுகள் ஆகியவற்றை இந்த தொழிற்சாலைகள் மூலம் காற்றில் கலக்கப்படுகிறது. MFL நிறுவனத்தால் ஒர் ஆண்டில் 67 சதவீதம் வரை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதன் மூலம் நுண் துகள்கள் 96 சதவீதம் அதிகமான வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் கொடிய விஷமான ஹைட்ரஜன் ஃப்ளோரைடை 2020-ம் ஆண்டில் 48 சதவீதம் அதிகம் வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இதைக் கட்டுப்படுத்த தவறும்பட்சத்தில் இறப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 58 சதவீதம் மாசுபாடு விதிமுறைகளை மீறியுள்ளது. TANGEDCO 70 சதவீத நேரத்தில் நச்சு வாய்ந்த SO2 வெளியிட்டுள்ளது. NTECL வல்லூர் 45% நேரம் உமிழ்வு விதிமுறைகளை மீறியுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு நிறுவனங்களும் கணக்கிலடங்கா மாசுகளை வெளியிட்டு வருகின்றன.
ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த கார்த்திக் குறிப்பிடுகையில், “எண்ணூர்-மணலியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு 34 சிவப்பு எச்சரிக்கை கொண்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதன் புகைபோக்கியின் வழியாக வெளிவரும் வாயுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைச் சேகரித்து 6 தொழிற்சாலைகளை மட்டும் தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டோம்.
அதில் 53 சதவீத நேரங்களில், அவர்கள் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த ஆண்டும் இதே ஆய்வை மேற்கொண்ட போது 59 சதவீதம் நேரத்தில் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எதிராகச் சண்டை போட முடியாது என்றுதான், அனைத்து தொழிற்சாலைகளையும் சேர்த்து இத்தகைய பரிசோதனையில் ஈடுபட்டோம்” என்றார்.
சமீபத்தில் சட்டமன்றத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்தது. அதன்படி, 60 கிராம் அளவிற்குக் கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் 30.09.2021 முதலும், 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதலும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக மரம் நடுதல், சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைத்தல் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு, வடசென்னை பிரச்சனை பற்றி கார்த்திக் பேசுகையில், “சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அதில் எந்த பலனும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் சட்டம் இயற்றிவிட்டு ஏற்கனவே இருக்கும் சட்டங்களைப் பின்பற்றாமல் இருப்பது எந்தவித பலனும் கொடுக்காது” என்றார். காற்று மாசு மட்டும் அல்ல பிளாஸ்டிக் கழிவுகள் மாசு உள்ளிட்ட அனைத்துமே மாசு கட்டுப்பாடு வாரியமே கண்காணிக்க வேண்டும். ஆனால், அந்த துறை சரியாக இயங்கவில்லை என்பதைப் பல சுற்றுச்சுழல் ஆர்வர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
தற்போதைய ஆய்வில் மிக முக்கியமாகத் தெரியவந்துள்ளது, எண்ணூர்-மணலி பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உடல் வலிமை என்பது குறைந்துகொண்டே வருகிறது. “குழந்தைகளுக்கு விளையாடும் இடம் இல்லை. முழுவதும் மாசடைந்துள்ளது. பல குழந்தைகள் செயலற்ற திறனுடனே இருக்கின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், பெரிய பெரிய லாரிகள் வந்து செல்கின்றன. அதனால் சில விபத்துகளும் நடக்கிறது” என்கிறார் கார்த்திக்.
