'மாணவர்களின் போராட்டத்தை மறைக்கப் பணம் கொடுத்தனர்' ஆசிரியர் மகாலட்சுமி Exclusive பேட்டி!
ஆசிரியர் மகாலட்சுமி சில நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டது பற்றிய பேட்டி எடுக்கையில், பழங்குடியினர் நலத்துறையில் நடைபெறும் முறையற்ற பணிநியமனங்கள் பற்றி விரிவாகப் பேசினார். அதேபோல், அவரது பணியிடை நீக்கம் திரும்பப் பெற்றதற்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது.
ஆசிரியர் மகாலட்சுமி... இவரைப் பற்றி, இந்த மாதத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்த நிலையில், தற்போது அவரது இடைநீக்கம், மாணவர்களின் போராட்டம், அதன்பின் பணியிடை நீக்க உத்தரவை பின் வாங்கியது உள்ளிட்ட சம்பவங்கள் பல அரங்கேறிவிட்டது. ஆசிரியர் மகாலட்சுமி பணியாற்றும் பள்ளி பழங்குடியினர் தங்கிப் படிக்கும் உண்டு உறைவிட பள்ளி. தற்போதைய நிகழ்வு, செய்திகளில் பெரிய அளவில் வெளியாகாத நிலையில், விவரம் அறிந்ததும் ஆசிரியர் மகாலட்சுமி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.
சம்பவம் பற்றி பத்திரிகை செய்திகளில், அவர் மாணவர்களை ஓர் இடத்தில் ஒன்றுகூட வைத்தது, பிரியாணி வழங்கியது உள்ளிட்டவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டிருந்தது. முதலில், அதிலிருந்தே துவங்கினார், அவர்.
“இச்சம்பவத்தின் பின்புலமே வேறு. சட்டவிரோதமாகப் பணி உயர்வு வாங்கிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் எங்கள் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் என்மீது புகார் தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணியில் இணைந்துள்ளார். அவர் வேறு துறையிலிருந்து தலைமையாசிரியராகப் பணி உயர்வு வாங்கியுள்ளார். இதனால், நீண்ட காலமாக ஆசிரியர் பணியிலிருந்து தலைமையாசிரியர் பணிக்காகக் காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர்.

எனக்குத் தலைமையாசிரியர் பொறுப்பு தேவையில்லை. எனக்குப் பின்னால் வந்தவர்கள் அதே மனநிலையுடன் இருப்பார்களா என்று கூறமுடியாது. எனவே ஆசிரியர்கள் இணைந்து பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடமே அனுமதி வாங்க வேண்டும். எனவே முதலில் ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் சேகரிடம் கடிதம் கொடுத்தோம். அவர் அதை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு அனுப்பாமல், அவர் முன் வைத்தே கிழித்துவிட்டார். அதன்பின், 'உனக்கு இப்போதுதான் ஞானம் பிறந்ததா?... 2019-ம் ஆண்டிலிருந்து காலியாக்கத்தானே இருக்கிறது. காசு குடுத்து வாங்கியிருக்கலாமே' என்று கன்னாபின்னா என்று கத்தினார்.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், 'ஏன் சார் கிழித்தீர்கள்' என்று மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தார். இவர்கள் இருவரும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநருக்குத் தெரிந்துதான், தலைமையாசிரியர் பணியை பெற்றார்களா என்பதே சந்தேகம்தான். எனவே இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் அவர்களுக்குத் தெரியப்படுத்திய பின், வழக்குத் தொடுக்கலாம் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதற்குத் தலைமையாசிரியர் அனுமதி கொடுத்திருக்க வேண்டும், மாறாக தவறு இருந்தால் சுட்டி காட்டியிருக்கலாம். இரண்டையும் செய்யாமல் கிழித்து போட்டார். இச்சம்பவம் அனைத்தும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்றது.
ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியருடன் இரண்டு சமையல்காரர்கள், பள்ளிக்கு வந்தார்கள். அவர்கள்தான், இவருக்கும் பணம் கொடுத்து பொறுப்பை வாங்கி கொடுத்ததாக கூறுகின்றனர். ஒருவர் பெயர் சிவராமன், மற்றொருவர் பெயர் நாராயணகுமார். அந்த சமையல்காரர்கள் இருவரும் என்னை பார்த்து 'நீ எங்க போவ... இயக்குனர் அலுவலகத்திற்கு தானே போவ... நீ போ... நான் தலைமைச் செயலகத்திற்கே செல்வேன்' என்று நாராயணகுமார் மிரட்டினார். இதை உயர் பள்ளி தலைமையாசிரியர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். 'இப்போவே உன்மேல கம்ளையின்ட் குடுக்கவா...? நீ இங்க யாரையும் வேலை செய்ய விடமாட்டிங்கிற... இந்த பள்ளியையே சுத்தி சுத்தி வர...' என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். நான் தாராளமாக சென்று கொடுங்கள். 'நான் இந்த பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றி வந்ததால்தான் உயர்நிலைப் பள்ளியாக மேம்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியாக மாறியதால்தான் மற்றொரு தலைமையாசிரியர் பணி உருவாகியுள்ளது. இதற்கு மேல் இன்னும் பலருக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்க போய் சொல்லுங்க' என்று கூறினேன்.
என்னிடம் 'நீயும் 6 லட்சம் ரூபாய் எடுத்துவா. உனக்கும் இந்த பொறுப்பு வாங்கி தருகிறேன்' என்று சொன்னார். காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்குமா என்றேன். 'கிடைக்கும்' என்றார். நான், 'உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு கிடைக்குமா?' என்று கேட்டேன். 'தாராளமாக வாங்கி தரேன் 10 லட்சம் எடுத்துவா' என்றார். பழங்குடியினர் நலத்துறை எப்படி இருக்கிறது என்பது இந்த சம்பவத்திலேயே நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். அவர் ஒரு சமையல்காரர், இப்படிப் பேசுகிறார் என்பதில் தான் பல விஷயங்கள் உள்ளன.
விவகாரங்கள் குறித்து காவல்நிலையத்திற்குச் செல்ல நேரம் ஆகாது. ஆனால் பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடும் என்று அமைதியாக இருந்தேன்.
கடந்த வாரத்தில் ict பயிற்சிக்கு ஐந்து நாட்கள் சென்றிருந்தேன். 14லில் இருந்து சனி, ஞாயிறு தவிர 20-ம் தேதி வரை இந்த பயிற்சியில் கலந்து கொண்டேன். சனிக்கிழமை பயிற்சி இல்லாததால், அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றேன். அதற்கு முன் மாணவர்களுக்கு சில பிரச்சனை ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, 16-ம் தேதி காலையில், புளிச்சோறுதான் மாணவர்களுக்குக் கொடுத்துள்ளனர். அது அரசு வழங்கியுள்ள உணவுப் பட்டியலில் இல்லாத உணவு. இருந்தாலும், அதை நல்லமுறையில் செய்து கொடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கிய உணவில் கெட்ட நாற்றம் வீசியுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் கீழே கொட்டியுள்ளனர். சிலர் இந்த சூழலில் பட்டினியாக இருந்துள்ளனர். எனவே மாணவர்கள் சமையல்காரர்களிடம் கேட்டுள்ளனர். சமையல்காரர்கள் தரப்பில், வார்டன் என்ன கொடுக்கிறாரோ அதைதான் நாங்கள் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சமூக ஆர்வலர் ஒருவர் சம்பவம் தொடர்பாக விவரிக்கையில், “பள்ளி விடுதியின் வார்டன், அங்கு இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால், என்ன சமைத்தார்கள் என்பதைப் பற்றி வார்டன் கேட்டிருக்க வேண்டும். வியாழக்கிழமை, காலையில் கிச்சடி தான் உணவுப் பட்டியலில் உள்ளது. எனவே மாணவர்கள் வார்டன் மற்றும் தலைமையாசிரியராக இருக்கும் ரோசலினுக்கு அழைத்துள்ளனர். அவர், 'நீங்க படிக்க வந்தீர்களா, சாப்பிட வந்தீர்களா?, எப்போ பாத்தாலும், சாப்பாடு பத்தியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்' என்று பதிலளித்துள்ளார். மாணவர்கள் 'ஏன் மிஸ் இப்படி பேசுறீங்க. அரசு கொடுப்பதைத்தானே கேட்கிறோம். நல்ல சாப்பாடு போடத்தானே கேட்கிறோம்' என்று கேட்டதும். படிக்கிற வேலையை மட்டும் பார்க்கக் கூறியுள்ளார். மாணவர்கள் தரப்பில், சாப்பிடாமல் எப்படிப் படிப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 'நீங்க எப்போ பார்த்தாலும், மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறீர்கள்.. புள்ளைங்களா, வேற என்னவாம்.. இது மாதிரியா உங்களை வளர்த்தார்கள்..' என்று அடுக்கடுக்காக பேசியுள்ளார். பிள்ளைகள், '90 மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 கிலோ பருப்பு வழங்கினால், எப்படிச் சமைக்க முடியும்' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “50 மாணவர்களுக்கே நாள் ஒன்றுக்கு 5 கிலோ காய்கறி இருக்க வேண்டும். 90 மாணவர்களுக்கு எத்தனை கிலோ சமைக்க வேண்டும்?. வெறும் இரண்டு கிலோ காய்கறிகள் மட்டும் கொடுத்தால் எப்படி சமைப்பார்கள்?. வார்டன், சமையல்காரர்கள்தான் தூண்டிவிட்டார்கள் என்று அவர்களைத் திட்டியுள்ளார். இந்நிலையில், மதிய சாப்பாட்டிற்கும் சரியான காய்கறிகள் எதுவும் சமைத்துக்கொடுக்காமலிருந்துள்ளனர்.
அதன்பின்னரே, மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட இயக்குநருக்கு அழைத்துள்ளனர். அவர் அதை மாவட்ட ஆட்சியர் குழுவில் பதிவிட்டுள்ளார். உடனே பயிற்சி மாவட்ட ஆட்சியர், அந்த பள்ளிக்குச் சென்று நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 17-ம் தேதி 7 பேர் கொண்ட குழு பள்ளிக்கு சென்றுள்ளனர். அன்றைய தினம் ஆசிரியர் மகாலட்சுமி பயிற்சிக்கு சென்றிருந்தார்.
பள்ளியிலிருந்த இரண்டு ஆசிரியர்களை வெளியில் அனுப்பிவிட்டு, மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்கள் கூறியதை பதிவு செய்த அவர்கள், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விசாரணையின்போதே, உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் ரோசாலின் அங்கிருந்து தாசில்தார் அலுவலகத்திலிருந்து அழைத்தாக கூறிவிட்டு, சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து ஆசிரியர் மகாலட்சுமி தரப்பில் கூறுகையில், “நான் பயிற்சி முடித்ததும், பள்ளிக்குச் சென்றேன். மாணவர்கள் முன்கூட்டியே பெரியார் பிறந்த நாளில் பிரியாணி வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதற்கு முந்தைய வருடங்களிலும் சிறப்பாகவே கொண்டாடுவோம். கடந்த ஆண்டு மட்டும் முடியவில்லை. எனவே இந்த ஆண்டில் எதாவது செய்ய வேண்டும் என்று பள்ளிக்குச் சென்றேன். 130 மாணவர்களுக்குப் பிரியாணி தயாரித்துவிட்டோம். 10 ரூபாய் கேக் தனியாகவும் வாங்கிவிட்டு, பொதுவாக கேக் வெட்டுவதற்கு ஒரு கேக்கும் வாங்கிவிட்டுச் சென்றேன்.
நான் இவை அனைத்தும் எடுத்துச் சென்றதும், தாசில்தார் ரமேஷ் பின்னால் வந்து இறங்கினார். தாசில்தார் பள்ளியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஒவ்வொன்றாக யார் இவற்றை செய்தது என்று ஒவ்வொரு வேலைகளையும் கேட்டார். அது அனைத்தும் பள்ளி மேலாண்மை குழு செய்துள்ளது என்று தெரிவித்தோம். அவருக்குப் பள்ளி மேலாண்மை குழு பற்றித் தெரியவில்லை என்று தோன்றுகிறது. அவர்கள் எப்படி செய்வார்கள் என்று கேட்டார், குழுவிலிருந்து யாரிடமாவது உதவி கேட்டுச் செய்வோம் என்றோம்.
இறுதியில் தாசில்தார் மாணவர்களை வைத்தே கேக் வெட்ட கூறினார். மாணவர்கள் கேக் வெட்டியதும், பிரியாணி கொடுக்கக் கூடாது என்று என்னிடம் தெரிவித்தார். நானும் சரி என்று கூறிவிட்டேன். இருந்தாலும், மாணவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பிரியாணி வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த சூழலில் அவர்களுக்கு கொடுக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. எனவே அவர்கள் கேட்டபடியே பிரியாணியை கொடுத்தேன்.
கேக் வெட்டும்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தங்களுக்கும் கேக், பிரியாணி வேண்டும் என்று ஓடி வந்தார்கள். அவர்களுக்கும் எப்படிக் கொடுக்காமல் இருப்பது. 4 பேர் மட்டுமே இருந்தனர். தாசில்தார் கேக் வெட்டும் போது சின்ன பசங்க யார் யார் இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்குக் குழந்தைகள் எழுந்து நின்றனர். ஆனால் அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. தாசில்தார் குழந்தைகளை மிரட்டி அனுப்பினார்.
அதன்பின், 18-ம் தேதி பள்ளிக்குச் செல்லும் போது திட்ட அலுவலர் பள்ளிக்கு வந்ததாக தெரிந்தது. நான் மாணவர்களை மாடிக்கு அழைத்துச் சென்று 10-ம் வகுப்பிற்கு அறிவியல் எடுத்துக்கொண்டிருந்தேன். தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த மூன்று பாடங்களையும் நான்தான் நடத்தி வருகிறேன். திட்ட அலுவலர் மாணவர்களிடம் விவரம் பற்றிக் கேட்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் எதையும் கேட்காமல் சென்றுவிட்டார். என்மீது புகார் கொடுத்துள்ளனர். அதுவும், மாணவர்களை ஒன்று கூட்டியது, பிரியாணி கொடுத்தது, பள்ளியில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதாக புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் என்னிடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை” என்றார்.
அதன்பின், சமூக ஆர்வலர் தரப்பில், “19-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அப்போது அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு பகுதிகளுக்கு ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்தனர். அதே நாளில்தான் தாசில்தார் ரமேஷ், மகாலட்சுமி மீதான புகார் மனுவை விசாரித்து அனுப்பியுள்ளதாகக் கூறுகின்றனர். ஞாயிற்றுக் கிழமை தாசில்தார் அலுவலகத்திலிருந்தாரா இல்லை, கேம்பில் இருந்தாரா?. ஆனால் அவர் 19-ம் தேதி மனுவை அனுப்பியுள்ளார். 16-ம் தேதி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் பள்ளிக்கு செல்லவில்லை, ஆனால் புகார் கொடுத்துள்ளார். 17-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பள்ளியை ஆய்வு செய்துள்ளனர், இருந்தாலும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் புகார் மனுவை பாஃர்வார்ட் செய்துள்ளார். 18-ம் தேதி திட்ட அலுவலர் பள்ளிக்கு சென்றிருந்தும், அது பற்றிய விவரம் எந்த இடத்திலும் குறிப்பிடபடவில்லை. 19-ம் தேதி (ஞாயிறு) தாசில்தார் அலுவலகத்திற்கு வராமலேயே புகார் மனுவை விசாரித்து அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலுமே குளறுபடிதான். 21-ம் தேதி ஆசிரியர் மகாலட்சுமியின், பணியிடைநீக்கம் ஆணை போடப்பட்டது. இந்த விவகாரத்தில் அவ்வளவு வேகமாக வேலை செய்துள்ளனர்” என்றார்.
“நான், தவறான முறையில் பணி வாங்கிய இருவர் மீது புகார் கொடுக்க இருக்கிறேன் என்று தெரிந்ததும் திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடக் கூடாதென்று வேகமாகச் செயல்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (21.09.2021) பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் சேகர் என்பவர் வேறு துறையிலிருந்து பணி மாறுதல் வாங்கி சட்டவிரோதமாக இணைந்துள்ளதாகப் புகார் தெரிவித்தோம். அதை இயக்குனர் ராகுல் சரியாகக் காதில் வாங்கவே இல்லை. அத்துடன் பள்ளியில் இரண்டு கணித ஆசிரியர்களுக்கான பணி காலியிடம் உள்ளது. அந்த பணிக்கு எனக்கு முன்னுரிமை தர வேண்டும், நான் பதவி உயர்வில் இரண்டாவது இடத்தில் உள்ளேன் என்றேன். அவர் எடுத்த எடுப்பில், 'மகாலட்சுமி நீ தானா? உன்னை நான் சஸ்பெண்ட் செய்ய சொன்னேனே' என்றார். தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் மகாலட்சுமியா? என்று எனக்குத் தோன்றியது. உடன் வந்த ஆசிரியர்கள், நான் பள்ளியில் செய்த பணிகள் பற்றி விவரித்தனர். அதற்கு அந்த அதிகாரி, 5-ம் வகுப்பு பிள்ளைகளை வைத்து நீ பாடம் எடுக்கிறாய் என்றார். ஐந்து நாட்கள் பயிற்சிக்குச் சென்ற நான் எப்படி பாடம் எடுக்க முடியும்.


சரியாகப் புதன்கிழமை காலையில், பணியிடை நீக்கத்திற்கான உத்தரவு என்னிடம் வர இருப்பது தெரிந்துவிட்டது. அன்றைய தினம், 3.30 மணிக்கு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வந்தார். இரண்டு பேப்பர் எடுத்து நீட்டினார். பிரித்துப் படிக்கவே விடவில்லை. அப்படியோ மடித்த வைத்தபடியே கையெழுத்து வாங்கிவிட்டார்” என்று மகாலட்சுமி குறிப்பிட்டார்.
மேலும், “என் பேக் (bag) பத்தாம் வகுப்பிலிருந்தது. ஏற்கனவே மாணவர்களிடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கூறிவிட்டேன். நான் பள்ளியிலிருந்து பேக் எடுத்துக்கொண்டு புறப்பட்டதும், மாணவர்கள் செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியையும் வாங்கி வைத்துக்கொண்டு தரமறுத்தனர். நான் வெளியில் வந்து அமர்ந்திருந்தேன். மாணவர்கள் தலைமையாசிரியரிடம் சென்று இதைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் வந்ததும், என்மேல் புகார் கொடுத்துள்ளீர்களே நீங்கள் அன்றைய தினம் பள்ளிக்கு வந்தீர்களா என்று கேட்டேன், கையை அழுத்திப் பிடித்துக்கொண்டு, 'சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கிவிட்ட தானே!, வெளியே போ' என்று கூறினார். 16-ம் தேதி தலைமையாசிரியர் சேகர், OD என்று எழுதப்பட்டிருந்த நிலையில், அதற்கு மேல் அவர் கையொப்பம் போட்டுள்ளார்.
பிள்ளைகளிடம் வாகனத்தின் சாவியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் டீச்சரை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள் என்று தலைமையாசிரியரிடம் கத்துவது வெளியே கேட்டுக்கொண்டே இருந்தது. அவர்கள் மாறி மாறி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தனர். தலைமையாசிரியர் மாணவர்களை வகுப்பில் சென்று அமர கூறினார். ஆனால், மாணவர்கள் டீச்சர் வந்தால்தான் போவோம் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டனர்.
அங்கிருந்து பள்ளியின் கேட்-ல் அனைத்து மாணவர்களும் சென்று உட்கார்த்து விட்டனர். அனைத்தையும் பார்க்கப் படத்தின் காட்சி போன்று இருந்தது. இதற்கு முன்னரும் பல விஷயங்களுக்காக அந்த குழந்தைகள் போராடியுள்ளனர். அதிகாரி ஒருவர் சொல்போனில் தொடர்பு கொண்டு 'ஒரு வாரத்தில் முடித்துவிடலாம். பிள்ளைகளைக் கலைந்துபோகச் சொல்லுமா' என்றார். ஆனால், பிள்ளைகள் என்னையே வெளியில் போக விடாமல் இருக்கிறார்கள், நான் வெளியில் சென்றால், நான் தூண்டிவிட்டதாகக் சொல்வீர்கள், என்று பதிலளித்தேன். மறுபடியும், தலைமையாசிரியர் வந்து பலருக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின் என், இணையர் வந்தார், அவர் நீ இந்த பள்ளியில் இருக்க வேண்டாம் என்று அழைத்துச் சென்றார். பிள்ளைகள் எனக்கு ஆறுதல் சொல்லி 'ஆறு மாதம்தானே சஸ்பெண்ட் சொல்லியிருக்கிறார்கள், ஆறு மணி நேரத்தில் உங்களை வர வைக்கிறோம்' என்று அனுப்பினர்” என்றார்.
முன்னாள் மாணவர் ஒருவர், “அதன் பின்னரும் பிள்ளைகள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தனர். உடனே தாசில்தார், திட்ட அலுவலர் இளங்கோ அனைவரும் 3 மணிநேரத்தில் பள்ளியில் வந்தனர். 7.30 மணியிலிருந்து மாணவர்களிடம் போராட்டத்தைக் கைவிடக் கெஞ்சினர். ஒருவரும் அசையவில்லை. திட்ட அலுவலர் இளங்கோ மாணவர்களிடம் முதலில் கத்தி கத்தி பேசினார். அதில் ஒரு குழந்தை, நாங்கள் அனைவரும் குழந்தைகள் கத்தி கத்தி பேசாதீர்கள் என்று பதிலளித்தார். அதன்பின் பொறுமையாகப் பேசினார்.
முன்னாள் மாணவர்கள், அந்த ஊர் மக்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றாகக் கூடினோம். ஒரு செய்தியாளர் மட்டுமே வந்திருந்தார். அந்த செய்தியாளருக்கும் பணம் கொடுத்து செய்தி போடவிடவில்லை. மற்ற ஊடகங்கள் வர காலம் தாமதமாகும், அதற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று முயன்றனர்” என்றார்.
ஆசிரியர் மகாலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சஸ்பெண்ட் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மாணவர்களின் போராட்டம் பற்றிய செய்தி வெளியாகாமலிருந்தது. சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் எடுத்த வீடியோ#teacherMahalakshmi pic.twitter.com/YoTxdRyqOE
— Asiaville Tamil (@AsiavilleTamil) September 25, 2021
ஆசிரியர் மகாலட்சுமி அந்நேரத்தில் என்ன செய்துக்கொண்டிருந்தார், என்று அவரிடம் கேட்டபோது, “நானும் ஊடகங்களில் எதுவும், இதைக் குறிப்பிடவில்லை. ஆர்வலர்களிடம் மட்டுமே பேசினேன். அத்துடன், பள்ளியிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. அதிகாரி ஒருவர், மறு விசாரணை செய்கிறோம். மாணவர்களைக் கலைந்துபோகச் சொல்லுங்கள் என்று எனக்கு அழைத்துக் குறிப்பிட்டார். நான் மாணவர்களிடம் கேட்டுதான் இந்த சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்தீர்களா? அத்துடன், விசாரணை நடத்தினீர்களா என்று கேட்டேன். அதன்பின் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள், 'போராளிகள் சந்திக்காத பிரச்சனையா?. தைரியமாக இருங்கள். மறு பரிசீலனை செய்துவிட்டோம். அதை நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்றனர். 9 மணி வரைக்கும் மாணவர்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். அதன் பின், பிஸ்கட் மட்டும் வாங்கி உண்டுவிட்டு இருந்துள்ளனர்.
நான் அவர்களுக்கு அழைத்துச் சாப்பிடக் கூறினேன். அவர்கள், சஸ்பெண்ட் ஆடர் ரத்து செய்துவிட்டார்களா என்று கேட்டுக்கொண்டனர். மீண்டும் நான் அவர்களிடம் சாப்பிடக் கூறினேன். நான் அழைப்பில் இருக்கும்போதே கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்ல மாணவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். 24 மணி நேரம் கொடுங்கள் பணியை முடித்துவிடுகிறோம் என்று அதிகாரி குறிப்பிட்டதும், நம்புகிறோம் என்று கூறிவிட்டு, மீண்டும் கைப்பட எழுதி கொடுங்கள் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் போராடியது, குழந்தைகள் பேசிய விஷயத்தை வெளியில் வரவிடாமல் செய்தனர். அதனால், அங்குச் சென்ற செய்தியாளரையும் கைக்குள் போட்டு வைத்தனர். வீடியோக்கள் கூட என்னிடம் இருக்கிறது” என்றார்.
“இதில் முக்கியமான விஷயம் என்பது தலைமையாசிரியர் ரோசாலினுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு பெறத் தகுதியே இல்லை. பிள்ளைகள் போராட்டம் நடத்தியதும், 6வது இடத்தில் இருக்கும் ரோசாலினுக்கு மேல் நிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கியுள்ளனர். எவ்வளவு மேசமான வேலையை இந்த துறை செய்துகொண்டிருக்கிறது. நீலகிரியிலிருந்து ஆசிரியரை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக தற்போது நியமித்துள்ளனர். மேல்நிலைப் பள்ளிக்கான தலைமையாசிரியர் பணிக்கான பணிநியமனம் நடத்தி முடித்தாயிற்று. ரோசாலினுக்காக தற்போது மீண்டும் நியமனம் நடத்தப்பட்டுள்ளது.
பழங்குடி நலத்துறையில் அதிகமான பிரச்சனைகள் உள்ளது. உண்டு உறைவிட பள்ளியில், வார்டன் மற்றும் தலைமையாசிரியர் இருவரும் தனித்தனியாகப் போட வேண்டும். ஆதிதிராவிட நலத்துறை என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்படி என்றால், அந்த துறையில் இருக்கும் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும். கூடுதல் நேரம் விழிப்புடன் வேலை செய்ய வேண்டும். ஒரு கடைநிலை ஊழியரை மதிப்பதே இல்லை. அதுவே பணம் எடுத்துச் சென்றால், மதிக்கிறார்கள். இதற்கு எல்லாம் முழு காரணம் பழங்குடிகள் நலத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்தான், எதையும் கண்டும் காணாமல் இருக்கிறார்” என்றார் ஒரு சமூக ஆர்வலர்.
ஆசிரியர் மகாலட்சுமி மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் கூறுகையில், பள்ளி ஆசிரியர்கள் நியமனம் என்பது நியாயமாக நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அதேபோல், தகுதியின் அடிப்படையில் இல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெறுவதையே ஆசிரியர் மகாலட்சுமி அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையைப் பற்றி மற்றொரு அலசலே நாம் மேற்கொள்ளலாம்...
