”தமிழ்நாடு அரசுக்கு லாட்டரி பற்றிய எண்ணமே இல்லை” - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை. நிதிப் பேரழிவில் மாநிலத்தை அதிமுக விட்டுச் சென்றிருந்தாலும் அதைச் சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்
லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு திரும்பக் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”லாட்டரி சீட்டை மீண்டும் திமுக அரசுக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என, உண்மைக்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என்பதை நிரூபிக்கும் அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவரது நான்காண்டுக் கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலை எத்தகையைச் சரிவினை சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. கொரோனா 2வது அலையைக் திறமையாகக் கையாண்டு, மக்களால் பாராட்டப்படும் முதல்வர் ஸ்டாலின் மீது அதிருப்தி கொண்டு, லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது
தமிழ்நாடு அரசு ஆலோசனைகளின் போது ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேசு எழுந்ததில்லை என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலையை விட்டுச் சென்றிருக்கிறார். சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தார்.
மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை. நிதிப் பேரழிவில் மாநிலத்தை அதிமுக விட்டுச் சென்றிருந்தாலும் அதைச் சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
