'என் புள்ள தின்ன மீதியதான் வீடுல இருக்குறவங்க சாப்பிடனும்': மகாலட்சுமி டீச்சரின் ஊரடங்கு அனுபவம்!
'என் குழந்தைகளிடம் எப்போது 'முட்டை சாப்பிட்டாய்?' என்று கேட்டால், 'மார்ச் மாதம் பள்ளிகள் மூடுவதற்கு முன்' என்று கூறும்போது ஏற்படும் வலி... எனவே என்பிள்ளைகளுக்காக மட்டும் நான் கேட்க முடியாது. ஒட்டுமொத்த உண்டு உறைவிட பள்ளிகளுக்காகவும், விடுதிகளுக்காகவும் சேர்த்தே கேட்டேன்' என்று ஊரடங்கு நாட்களின் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் ஆசிரியர் மகாலட்சுமி
ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடத்தை மட்டும் கற்றுக்கொடுப்பவர்கள் அல்ல, மாணவர்களை சமூகத்தில் கட்டி எழுப்புபவர்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைதான் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இதற்காக ஆண்டுதோறும், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவதுண்டு. சில ஆசிரியர்கள் விருதுகள் பெற்றாலும், நாம் ஒவ்வொரு வரையும் உருவாக்கிய பல ஆசிரியர்கள் வெளியில் தெரியாமலேயே இருக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் பெரிய அளவில் பேசப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் மகாலட்சுமி. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையின் உச்சியில் ஜமுனா மரத்தூருக்கு அருகில் உள்ள மலைக் கிராமமான அரசவல்லி கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
இவரைப் பற்றிய செய்திகள் வெளியானபோது அவரது புகைப்படங்கள் பெருமளவில் கவனம் பெற்றது. குறிப்பாக மகாலட்சுமி அணிந்திருந்த ஆடை. பள்ளி மாணவர்கள் அணியும் சீருடையை தனக்கு ஏற்ற அளவில் தைத்து மகாலட்சுமி அணிந்திருந்தார். அவ்வாறே மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது, விளையாடுவது, குளிக்க வைப்பது, முடி திருத்தம் செய்வது என்று மாணவர்களுடனே பயணித்த வீடியோக்கள் பெருமளவில் பகிரப்பட்டது.
அவரை சிறப்பிக்கும் வகையில் அவள் விகடன், “சிறந்த ஆசிரியர்” என்ற விருதையும் வழங்கியது.
இந்த கொரோனா சூழலில், ஆசிரியர் மகாலட்சுமி என்ன செய்துகொண்டிருக்கிறார்?, அவரது பணி எவ்வாறு தொடர்கிறது என்பதை தெரிந்துகொள்ள அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.

கொரோனா சூழலில், உங்கள் பணியை எவ்வாறு எடுத்துச் செல்கிறீர்கள்?
கொரோனாவிற்கு முன் ஏதேனும் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றால், வீட்டிற்குத் தேடிச் செல்வது, குழந்தை பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொள்வது போன்ற வேலைகள் எப்போதாவது இருக்கும். தற்போது அவ்வாறு இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு வராததால், அவர்களைக் கட்டாயம் சென்று பார்த்தே ஆக வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. எனவே அவர்களைச் சென்று பார்ப்பதுடன், பாடக் குறிப்புகளையும் கொடுத்து வருகிறேன். குழந்தைகளிடம் படிக்க கூறுவதில்லை, எழுத மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். எழுதுவது அவர்களுக்கு ஒருவகையில் புரிதலைக் கொண்டுவரும்.
9 மற்றும் 10-ம் வகுப்பிற்குப் பள்ளிகள் திறக்கப்பட்டதால், எத்தனைப்பேர் பள்ளிக்கு வரவில்லை. அவர்கள் ஏன் வரவில்லை என்று தகவல் சேகரித்து வருகிறேன். அவர்களில் சிலர் குழந்தை திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து 5 குழந்தைகளை மீட்டுவிட்டோம். 3 பேர் பள்ளிக்கு வந்துவிட்டனர். இருவர் திங்கள் கிழமை முதல் பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு குழந்தையை மட்டும் இன்னும் மீட்க முடியவில்லை. காலையில் பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் பள்ளிக்கு அனுப்புவதாகத் தெரிவித்தனர். ஒருவேளை அனுப்பாத பட்சத்தில், குழந்தைகள் மீட்பு மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
9-ம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகள் வேலைக்குச் செல்கின்றனர். ஆத்தூர் பகுதியில் சில குழந்தைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். அதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியிலும் சில குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகரிடமும், பெற்றோரிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீட்பு மையம் என்பது அரசு சாரா அமைப்புதான். அவர்களும் போலீசாரை அழைத்துத்தான், குழந்தைகளை மீட்க வேண்டும். தனியாகச் சென்றால், குழந்தைகளை மீட்க செல்பவர்கள் மீது பெற்றோர் தாக்குதல் நடத்துகின்றனர். போலீசாரும் சில வேளைகளில் ஆட்கள் குறைவாக இருப்பதாக அழைத்தால் வருவதில்லை.
ஆன்லை வகுப்புகளுக்கு வழி இருக்கிறதா? அதை எப்படி கையாளுகிறீர்கள்?
3 குழந்தைகளின் பெற்றோர் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வருகின்றனர். அந்த குழந்தைகள் தற்போது பெங்களூரிலேயே தங்கி இருக்கும் சூழல் உள்ளது. அந்த குழந்தைகளிடம் ஆன்ட்ராய்ட் மொபையில் இருக்கிறது. சேலத்திலிருந்து இரண்டு குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை அரிசிக் கடையில் வேலைக்குச் செய்கிறார், அவரிடமும் ஆன்ட்ராய்டு மொபையில் உள்ளது. அதேபோல் கேரளாவில் வாழைத் தோட்டத்தில் வேலை செய்யும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களிடமும் ஆன்ட்ராய்ட்டு போன் உள்ளது. இவர்களுக்குப் பாடம் நடத்தி, வீடியோவை யூடியூப்பில் அப்லோடு செய்து அனுப்புகிறேன்.
உள்ளூரில் இருக்கும் குழந்தை தொழிலாளர்களை மீட்க முடியும். ஆனால் இவர்களை மீட்க முடியாததால், வேலை செய்வது மட்டுமல்லாமல், படிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் - ஆசிரியர் மகாலட்சுமி
சத்துணவு வழங்குவதை எப்படி நடைமுறைப்படுத்துகிறீர்கள்?
எங்களுடையது உண்டு உறைவிட பள்ளி. ஊரடங்கு காலத்தில் மதிய உணவுத் திட்டத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்தது நான் மட்டுதான். அரசு, மத்திய உணவு உண்ணும் குழந்தைகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டதே தவிர, உண்டு உறைவிட பள்ளிகளைக் கவனிக்கவில்லை. அரசிற்கு எத்தனை வகையான பள்ளிகள் இருக்கிறது, பள்ளிகளில் சாப்பிடக்கூடிய குழந்தைகள் யார், யார் என்ற புரிதல் இருந்தால்தான் சரியாக திட்டமிட முடியும்.
என் குழந்தைகளிடம் எப்போது 'முட்டை சாப்பிட்டாய்?' என்று கேட்டால், 'மார்ச் மாதம் பள்ளிகள் மூடுவதற்கு முன்' என்று கூறும்போது ஏற்படும் வலி... அப்படி இருந்தும், என்பிள்ளைகளுக்காக மட்டும் நான் கேட்க முடியாது. ஒட்டுமொத்த உண்டு உறைவிட பள்ளிகளுக்காகவும், விடுதிகளுக்காகவும் சேர்த்தே கேட்டேன். நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு, நன்றி தெரிவிப்பதற்காகச் சென்று, கூடவே இந்த கோரிக்கையும் முன்வைத்தேன். அதற்காக மிரட்டப்பட்டேன். அதன்பின் தீர்வு காணப்பட்டது. நான் ஒருத்தி இருக்கிறேன் என்றால் என்பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும். அனைத்து திட்டங்களும் பிள்ளைகளை வந்து சேரவில்லை என்றாலும், 50 சதவீதம் மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.
ஒரு குழந்தையிடம் எப்போது கறி சாப்பிட்டாய்? என்று கேட்டால், 'தீபாவளிக்கு' என்று பதில் கிடைத்தது. எனவே அனைத்து பிள்ளைகளையும் சந்தித்து, கறி வாங்கிக்கொடுத்தேன். பள்ளிக்கூடம் இருக்கையில், பிள்ளைகளுக்கு வாரத்தில் ஒருநாள் கறி சமைத்துக் கொடுக்கப்படும். அப்படி இல்லை என்றாலும், மாதத்தில் இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு யாரிடமாவது கேட்டு பிரியாணி போடுவோம். இந்த சூழலில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. எனவே கறி எடுத்துக்கொடுத்து, 'என் புள்ள தின்ன மீதியதான் வீட்டுல இருக்குறவங்க சாப்பிடனும்' என்று பெற்றோரிடம் கூறிவிட்டு வந்தேன்.
அதேபோல் மாணவர்களைப் பார்க்கப் போகும் போது, கேக் ஏதேனும் வாங்கி கொடுப்பேன். பாடங்கள் எடுக்க சில இடங்களில் சென்று தங்கியிருப்பேன், எளிதில் சென்று வரக்கூடிய பகுதிகளில் தங்குவதில்லை.
உங்களது பணியில் ஒத்துழைப்பு வழங்குபவர்கள்?
தற்போது எங்கள் பள்ளியில், சமையல்காரர் ஒருவர் இணைந்துள்ளார். அவர், ஏதேனும் குழந்தைகளைத் தரகர் அழைத்துச் சென்றால், தகவல் கொடுப்பார். வேறு இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள், அவர்கள்தான் வாகனத்தின் நகர்வைக் கண்காணித்து எனக்குத் தகவல் கொடுப்பர். அதேபோல் குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுப்பவர் விஜயகுமார் என்ற மாணவர். அவர் 5-ம் ஆம் வகுப்புவரை இங்குப் படித்துவிட்டு தற்போது வேறு பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்தான் அனைத்து தகவல்களையும் சேகரித்துத் தெரிவிப்பார்.

சில நேரங்களில், அவரே குழந்தை திருமணத்தை நேரடியாக அழைத்து மீட்கக் கூறியுள்ளார். ஆனால் குழந்தை அழைப்பதாகக் குழந்தை பாதுகாப்பு மையத்தில் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். சில இடங்களில் சென்று பணம் வாங்கி வந்துள்ளனர். சில பகுதிகளில் பயம் வந்துவிட்டது என்றாலும், போலீஸ் தரப்பில் உதவுவதில்லை.
எஸ்.பி உடன் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில், பேனர் வைக்க அறிவுறுத்தினேன். அவர்கள், நடவடிக்கை எடுக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் என் தரப்பில் தெரிவித்திருக்கிறேன்.
முதலமைச்சர் முககவசம் அணியக்கூடாது என்ற வகையில் விளம்பரம் செய்கிறார். அதுபோன்று குழந்தை திருமணத்தைப் பற்றியும் விளம்பரம் செய்யலாம். ஒவ்வொரு சீரியலுக்கு இடையிலும் இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பலாம் என்பது என்னுடைய கோரிக்கை.
உங்கள் பணியில் குடும்பத்தின் ஆதரவு?
குடும்பத்தின் ஆதரவு நன்றாகவே இருக்கிறது. என் இணையர் எந்த இடத்திற்குச் சென்றாலும், கூடவே வருவார். பல இடங்களில் நான் தனியாகச் செல்வது சிரமமாக இருக்கும். எனவே இணையரே உடன் வருவார். ஒரு ஊரில் சென்று பாடம் நடத்தினால், அருகில் இருக்கும் 10 ஊர்களைச் சேர்த்தே பாடம் எடுக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில், 80 மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சேர்த்து பாடம் நடத்த முடியாது. எனவே நாங்கள் அவர்களைப் பிரித்துக்கொள்வோம். இருவருமாகக் கவனிப்போம்.
நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை?
நான் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்பது, அதிகாரிகள் மிரட்டல் மற்றும் சங்கத்தினரின். முதலில் நேரடியாகப் பள்ளியில் இருக்கும் தலைமையாசிரியர்கள் மிரட்டுவார்கள். தற்போது, மொட்ட பெட்டிசன் போடுகிறார்கள். ஒருவர் மொட்டை பெட்டிசனில் பெண் குழந்தைகளைத் தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டு எழுகிறார். மன உளைச்சல் ஏற்படும்படி நடந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி, துணிந்திருக்கிறேன். இவற்றை மாற தொடர்ந்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டும். அது அவர்களுக்கு கோவத்தைத் தூண்டுகிறது. பணத்தைக் கொடுத்து, படத்தில் காண்பிப்பதுபோல பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து கையொப்பம் பெறுகிறார்கள். அதையும் தாண்டி சட்ட போராட்டம் ஒன்று உள்ளது இல்லையா?.
நான் வேலைக்குச் சேர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 10 வருடம் முடித்ததும் 'தேர்வு நிலை' என்று ஒன்று வழங்கியிருக்க வேண்டும். அவை எல்லாம் எனக்கு வழங்கவே இல்லை. என்னுடைய கோப்புகளைப் பார்க்காமல் ஒதுக்கி வைக்கின்றனர்- ஆசிரியர் மகாலட்சுமி
அரசியல் ரீதியாக அதிமுக, திமுக ஆட்சியில் உங்களுக்குத் தோன்றுவது?
அதிமுக ஆட்சியில் பயம் அதிகமாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கை போன்ற திட்டங்கள் எந்த காரணமும் இல்லாமல் திணிக்கப்படுமோ என்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும். தற்போது அது குறைந்துவிட்டது. சமீபத்தில் அறிவித்த திட்டங்களும் தேசிய கல்விக்கொள்கையின் சில நடைமுறையாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தேர்வு, மொழி தேர்வு, ஸ்காலர்சிப் நிறுத்துவது, ஆசிரியர்களை நிறுத்துவது போன்றவை திணிக்க முடியவில்லை. எனவே நிம்மதியாக இருக்கிறது.
கடந்த ஆட்சியில் பள்ளிகள் திறப்பு தொடர்பாகக் கொடுக்கப்பட்ட நடைமுறைகளை விட, இந்த ஆட்சியில் நம்பிக்கை கொடுக்கின்றனர். அதேபோல் நன்றாகத் திட்டமிடுகின்றனர். அதை நடைமுறைப்படுத்துவது வேறு, அதைத் திட்டமிடுவது சிறப்பாக இருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் கூட அழைத்து, மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று அழைத்து கேட்கின்றனர். இந்த முயற்சி நம்பிக்கை தருகிறது.
அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. விரைவில் குழந்தைகளுக்கான தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை என்று இருக்கலாம், அது பள்ளி மாணவர்களை மட்டும் கருத்தில் கொள்கிறது. பள்ளிக்கூடத்திற்கு வெளியே இருப்பவர்கள் அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டுவரப்படவில்லை. குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள், என்று அனைவரையும் இணைத்து அமைச்சகத்தை உருவாக்கி வழிநடத்த வேண்டும்.
