தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் என்ன செய்கிறது? பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆய்வு!
தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி நிறுவனத்தால் நெய்வேலியில் இயக்கப்படும் ஒரு அனல்மின் நிலையத்தில் கூட மாசு வெளியீட்டைக் குறைக்கும் FGD கருவி பொருத்தப்படவில்லை.
தமிழ்நாடு அனல்மின் நிலையங்கள் அதிக அளவில் மாசு வெளியிட்டு வருவதாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த அமைப்புடன் CREA மற்றும் ASAR ஆகிய அமைப்புகளும் இணைந்து அனல்மின் நிலையங்களில் மாசை கட்டுப்படுத்தும் Flue Gas Desulfuriser கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் 40 அனல்மின் நிலையங்களில் இரண்டு நிலையங்களில் மட்டும் Flue Gas Desulfuriser பொருத்தப்பட்டுள்ளது. எட்டு அனல் மின் நிலையங்களில் FGD வாங்குவதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது. அதிலும் பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மீதமுள்ள அனல்மின்நிலையங்கள் தாங்கள் வெளியிடும் மாசை குறைப்பதற்கான FGD கருவி வாங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி நிறுவனத்தால் நெய்வேலியில் இயக்கப்படும் ஒரு அனல்மின் நிலையத்தில் கூட மாசு வெளியீட்டைக் குறைக்கும் FGD கருவி பொருத்தப்படவில்லை.
ஆய்வை மேற்கொண்ட CREA அமைப்பைச் சேர்ந்த சுனில் தாஹியா கூறுகையில், “2015-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனல்மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவை நிர்ணயம் செய்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த காற்று மாசு அளவுகளைக் குறைப்பதற்கான கால அவகாசம் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த மார்ச் 21, 2021 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மாசு அளவுகளைக் குறைப்பதற்கான கால அவகாசம் 2024/2025ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டது. மாசு அளவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மட்டும் ஓராண்டிற்கு 76,000 மனித உயிர்களை நம்மால் காப்பாற்றியிருக்க முடியும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகள் நாட்டிலேயே அதிகம் எரிபொருள் எரிக்கும் பகுதியாக உள்ளது. இதில் நெய்வேலி மற்றும் சென்னை உலக அளவில் நிலக்கரிக்கு உருவாக்கும் முதல் 50 இடங்களுக்குள் வருகிறது.
தமிழ்நாட்டில் பல அனல்மின் நிலையங்களில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சல்பர் டை ஆக்சைடு இருக்க வேண்டிய வரையறையைவிட அதிக அளவில் வெளியிடப்படுகிறது.
ஆய்வு மேற்கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆய்வுக்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தது. இதனால் அனல்மின் நிலையங்களால் வெளியேற்றப்படும் மாசு அளவு குறித்து நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் தரும் தரவுகள் மீது நம்பகமில்லாத் தன்மை ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, “மும்பை, டெல்லி, பெங்களூருவை விட அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் அகால மரணங்கள் சென்னையில் தான் அதிகமாக உள்ளது. சென்னை, கடலூர், தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசைக் குறைப்பதற்கு பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசரத் தேவையாகும்” என்கிறார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை?
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது நீண்ட காலமாகவே தொடர்கிறது. நான் முன்பு எழுதியிருந்த, வடசென்னை அனல்மின் நிலையம், கொடைக்கானல் யூனிலீவர் நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற விவகாரங்களில், அதன் செயல்பாடு மோசமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
இது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்தா ஜெயராமன் கூறுகையில், “நாளைய தினம் மாசுக்கட்டுப்பாடு வாரியம் காணாமல் போனால் கூட ஒன்றும் தெரியாது. கூவம் எந்த அளவிற்கு நாறுகிறதோ, அந்த அளவில்தான் நாறிக்கொண்டிருக்கும். மாசுக் கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்ட தினத்தில் கண்காணிக்க வேண்டும் என்ற வரைமுறையையே பின்பற்றுவது இல்லை. அனைத்தையும் நிறுவனங்களுக்கே பொறுப்பு கொடுத்துவிடுவர். வாரத்திற்கு இரண்டுமுறை வெளிவரும் கழிவை எடுத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும், மற்ற மாதிரிகள் சேகரித்து என் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும், என்று எல்லாம் வரைமுறையை வைத்திருப்பர். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்களும் எதையும் கேட்பதில்லை” என்றார்.
இதே குற்றச்சாட்டுகளைத்தான், பல ஆர்வார்கள் குறிப்பிட்டு வருகின்றனர். முறையான கண்காணிப்பு இல்லாமல் இருப்பதே மாசு கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது.
