தொடர் கதையாகும் யானைகள் அழிவு! கலங்க வைக்கும் யானைகளின் வாழ்க்கை
யானைகள் சமீபத்தில் பல கரணங்களால், கொல்லப்பட்டு வருகிறது. தற்போது கோவையில் 3 யானைகள் விபத்தில் இறந்தாலும், இது போன்ற நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யானைகள் இறப்பு தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது. மதுக்கரை, வளையாறு வனப்பகுதி அதிக யானைகள் வசிக்கும் இருப்பிடமாக உள்ளது. அந்த பகுதியில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டம், கேரளாவின் பாலகாடு மாவட்டத்தையும் இணைக்கும் ரயில் பாதை உள்ளது. அது யானைகள், அதிக நடமாட்டம் உள்ள இடம். இந்நிலையில் தான், நவம்பர் 26-ம் தேதி, மூன்று யானைகளை ஒரே விபத்தில் இழக்க நேரிட்டது.
விபத்தில் இறந்த மூன்று யானைகளும் பெண் யானைகளாக இருந்த நிலையில், 25 வயது மதிக்கத்தக்க யானை கருவுற்று இருந்தாக பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. எனவே விலங்கின ஆர்வலர்கள் 4 யானைகள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.
நவக்கரை அருகே ரயில் மோதி உயிரிழந்த யானைகள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக பாலக்காடு சென்ற 5 தமிழ்நாடு வனத்துறையினரை பாலக்காடு ரயில் நிலையத்திலேயே கேரள அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். pic.twitter.com/wJVY2TOfa2
— Satheesh lakshmanan ????சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) November 27, 2021
யானையின் வழித்தடத்தில் ரயில்கள், வேகத்தை குறைக்கப்பட வேண்டும். தினமும் அந்த வழியாக யானைகள் கடந்து செல்லாத பகுதியாகவே கூறப்படுகிறது. ஆனால், அதே ரயில் தண்டவாளத்தில், பல இடங்களில் யானைகள் கடக்கின்றன. ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியிலும், ஏராளமான யானைள் உள்ளன.
சிலர் தரப்பில் ரயிலின் வேகம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஒரு விலங்கின ஆர்வலர் கூறுகையில், “ரயில்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறுவதை விட, யானைகளின் வழித்தடத்தில் மேம்பாலங்கள் அமைக்கலாம். யானைகளின் வழிகளும் மாறுபடுவதில்லை, சாலைகளும் முடக்கப்படாமல் இருக்கும். யானைகளின் வலசை பாதைகளிலேயே தண்டவாளங்கள் அமைப்பதானால் தான், அவை இறப்பதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன” என்று தெரிவித்தார்.
நான் பல வேளைகளில் யானைகள் பற்றி எழுதியுள்ளேன். இன்னும் பல விலங்கினங்கள் பற்றியும் பதிவு செய்துள்ளேன். ஆனால், யானைகள் பற்றி மட்டும் எப்போதும் இடைவிடாமல் எழுதும் அளவும் பிரச்சனைகள் நிறைந்துள்ளது. இவ்வுலகில், யானைகள் மொத்தமாக அழிந்துவிட்டால், காடுகள் அழியும். காடுகள் அழிந்துவிட்டால், மழை நின்றுவிடும். மழை நின்றுவிட்டால் நீங்களும், நானும் தண்ணீருக்கு எங்குச் செல்வோம். சில காலம், நிலத்தடி நீரை நம்பியிருக்கலாம். பின் கடல்நீரைத் தான் குடிக்க வேண்டியிருக்கும். இந்த இடத்தில் 'கடல் நீரைக் குடிநீராக்கலாமே' என்று சிந்திக்கிறீர்களா?, அவற்றைச் சிந்திக்க மட்டுமே, செயல்படுத்த இயற்கையின் துணையில்லாமல் எதுவும் செய்ய இயலாது. எனவே யானைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மிகவும் அவசியமானவை.
யானைகள் உண்ணும் உணவில், பெரும்பாலான பங்கு வெளியேற்றப்படுகிறது. அந்த பகுதி முழுக்க, விதைகளாக நிறைந்திருக்கும். அவை கழிவுகளை வெளியேற்றுகையில், வெவ்வேறு பகுதிகளில் அந்த விதைகள் முளைக்கத் துவங்கும். இவ்வாறு, யானைகள் ஒரு காடுகள் விதைப்பாளராக இருக்கிறது.
சமீபத்தில் இறந்தது பெண் யானைகள் என்றாலும், ஆண் யானைகளின் எண்ணிக்கை இன்று பல மடங்கு குறைவாகவே உள்ளது. இதற்குத் தந்தங்களுக்காக வேட்டையாடுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு போன்ற செயல்பாடுகள் காரணங்களாகக் கூறப்படுகிறது. இது பற்றி வனவிலங்கு ஆர்வலர் சிவா கூறுகையில், “ஏற்கனவே நம்மிடம் ஆண் யானைகள் குறைவாகவே இருக்கின்றன. முதுமலையில், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை வீதமே இருக்கிறது.
சட்டப்படி யானைகளைப் பாதுகாக்க முதல் படியாக வனப் பகுதியை ஒட்டி பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வனப்பகுதியிலும் இடைதாங்கும் மண்டலம் இருக்கும். அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதிப்பது மிகத் தவறு. யானைக்கு, இந்த பகுதிதான் காட்டின் எல்லைப் பகுதி என்று தெரியாது.
யானைக்காக அரசு கண்டறியும் எல்லா தீர்வுகளுமே தவறான வழிமுறையாகவே இருக்கிறது. யானை வெளியில் வரக்கூடாது என்று அகழியைத் தோண்டுகின்றனர். இதனால், இயற்கை தான் அழிகிறது. இது, யானையை எரிச்சலுடைய செய்யும், தவிர யானை ஊருக்குள் வருவது தடைப்படாது. பல வருடங்களாக சோளம், கரும்பு பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் கடந்த 10 வருடங்களாகத் தான், யானைகள் பயிர்களை அழிப்பது அதிகரித்துள்ளது. மனிதனால், யானைகளுக்கு இடையூறு ஏற்படுவதாலேயே யானைகள் மனிதர்களைத் தொந்தரவு செய்கின்றன.” என்று தெரிவித்தார்.
யானைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள், சமீப காலத்தில் அதிகரித்திருப்பதை நீங்கள் பல்வேறு செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிக்க கூடும்.
யானைகளுக்கு என்ன பாதுகாப்பு?
யானைகள், பல வகையில் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அது சரியான நடவடிக்கையா என்பது பற்றி மறுபரிசீலனை செய்வதில்லை. சமீபத்தில் ரிவால்டோ யானை, தமிழ்நாடு அரசின் விருப்பப்படி, காட்டிற்குள் அனுப்பப்பட்டது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்து வருகிறது. யானையின் நிலை பற்றி தற்போதைய அரசு தரப்பு தகவல்படி, பாதுகாப்பாக உள்ளது என்றே கூறுகின்றனர்.
ரிவால்டோ யானையைக் காட்டுக்கு அனுப்பக்கூடாது என்று கூறும் ஒரு வனவிலங்கு ஆர்வலர், “அது ஏற்கனவே காயமடைந்த யானை. காட்டிற்குத் திரும்ப அனுப்பினால், அது இறக்க நேரிடும். ரிவால்டோ யானைக்குச் சிகிச்சை கொடுத்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அதன் துதிக்கையிலிருந்த அடைப்பைச் சரிசெய்யவில்லை. நம்மிடம் யானைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவோ, மயக்க மருந்து கொடுக்கவோ மருத்துவர்கள் இல்லை. எனவே யானையை முகாமிற்குக் கொண்டுவந்து பராமரிக்க வேண்டும்” என்ற கருத்தை தற்போதுவரை முன்வைத்து வருகிறார். எனவே யானையின் உண்மை நிலை என்பது என்னவென்று, உறுதிப்படுத்துவதே சிரமான விஷயமாக உள்ளது.
அதேபோல் யானையைப் பாதுகாத்து மனிதர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் நிலையில், அந்த யானைகளின் சுதந்திரத்தைப் பறிப்பதாக அமைகிறது.
யானைகளுக்கு வழங்கப்படும் கடும் பயிற்சியில், “நடுவில் குச்சியை வைத்துவிட்டு நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் அடிக்கப்படும். இந்த நாட்களில் யானைக்கு உணவுகள் வழங்கப்படாது. அந்த குச்சியை எடுத்து பாகனிடம் கொடுக்குவரை அடித்துத் துன்புறுத்தப்படும். ஒருகட்டத்தில் அந்த குச்சியை எடுத்து பாகனிடம் கொடுக்கும். அவ்வாறு கொடுத்ததும், பசியைத் தூண்டு விதத்தில் சிறிய அளவில் உணவு கொடுப்பர். பாகன் கட்டளையிடுவதைச் செய்தால் உணவு கிடைக்கும் என்ற மனநிலையை உருவாக்கி கட்டுக்குள் கொண்டு வருவர். அடம்பிடிக்கும் யானைகள் இதில் அதிக அளவில் தாக்கப்படும்” என்று வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “இந்தியாவில் 25 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் யானைகள் இருக்கும். தமிழ்நாடு, அசாம், கர்நாடகா மற்றும் கேரளாவில் தான் அதிக அளவில் யானைகள் இருக்கின்றன. ஆணுக்குப் பெண் விகிதம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு ஆண் யானைக்கு 20 முதல் 30 பெண் யானைகள் உள்ளன. பிடிக்கப்படும் பெரும்பாலான யானைகள் ஆண் யானைகளாகவே இருக்கின்றன. ஆண் யானைகள் அனைத்தையும் பிடித்தால், பிறப்பு என்பது மிகவும் குறைந்துவிடும்” என்ற கருத்தை முன்வைக்கும் அவர், யானைகளை தற்போது நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடும் விழைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
விபத்துகள் அல்லாமல் கொல்லப்படும் யானைகள்!
யானைகள் தொடர்ந்து தந்தங்களுக்காக வெவ்வேறு விதத்தில் வேட்டையாடப்பட்டு வருகிறது. இது பற்றிய விவரங்கள் மிகச் சமீபத்தில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு யானை கொல்லப்பட்டால், அதன் துர்நாற்றம் 1 கிலோமீட்டர் சுற்றளவில் வீசும். அப்படி இருக்கும் பட்சத்தில் வனத்துறையினர் அதைக் கண்காணிக்கத் தவறுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளது. அவ்வாறு தவறும்பட்சத்தில், தந்தங்களைக் கடத்துவோர் அவற்றை வெட்டி விற்றுவிடுகின்றனர்.
அவ்வாறு வெட்டி விற்கப்படுவதால், பல ஆண் யானைகள் கூட தந்தங்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
வனவிலங்கு ஆர்வலர் சந்திரசேகர் கூறுகையில், “இது போன்ற அலட்சியங்களுக்கு முக்கிய காரணம், வனவிலங்கு துறைதான். வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.
யானைகளின் இயற்கை மரணத்தை நாம் எதையும் செய்ய முடியாது. யானைகளை வேட்டையாடுவது, யானைகளுக்கு இடையூறு கொடுப்பது போன்றவற்றை துறை சார்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.
மேலும், வனவிலங்கு வரும் இடங்களில் சோலார் பேனல் வைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. அதிக வால்டேஜ் கொண்ட மின்சாரங்களே வனப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. இதை வனத்துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் இணைந்து முறைப்படுத்த வேண்டும்.
மின்துறை, வனப்பகுதிக்கு அருகில் மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை வரை மின்சாரத்தை நிறுத்தி வைக்கலாம். சோலர் மின்சாதனத்தைப் பயன்படுத்தி மக்கள் உபயோகிக்க வழிவகை செய்யலாம். யானைகள் கடக்கும் இடங்களில், இரவு நேரப் பயணத்தை நிறுத்தி வைக்கலாம்” என்று மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக விவரிக்கிறார்.
யானைகளை இயற்கை மரணங்கள், விபத்துகள், கொலைகள் ஆகியவற்றால் நாம் இழந்துகொண்டிருக்கிறோம். இதில், விபத்து மற்றும் கொலைகளால் மரணங்களை நம்மால் தடுத்திட முடியும். அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பது அரசின் கையில் உள்ளது.
