'அனுமதித்தால் விரும்பத்தகாத விளைவுகளே மிஞ்சும்!' சவால்விடும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு
'தற்போது ஆக்சிஜனுக்கான தேவை இல்லை. தமிழக அரசும், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை தேவை ஏற்படலாம். அதற்காக முன்கூட்டியே அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் தயார் நிலையில் மட்டும் வைத்திருக்கலாம்' என்கிறார் ஸ்டெர்லைட் போராட்டக் குழு பாத்திமா பாபு
“கொரோனாவை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க திட்டமிடுகிறார்கள்” என்று மே மாதம் 12-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தபோது எதிர்ப்பு குழுவினர் தங்கள் கருத்தைப் பலமாக முன் வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது “ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசரம் இல்லை” என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்தைப் போராட்டக் குழுவினரிடையே மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் என்ன நடக்கிறது?
2018-ம் ஆண்டிற்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்படவில்லை. வேதாந்தா நிறுவனம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று ஒவ்வொரு வாசலிலும் ஏறித் தட்டிப்பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைக்கத் துவங்கியது. கொரோனா தொற்றின் முதல் அலை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி சற்று விடுமுறை எடுத்துக்கொண்ட உடன் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை எந்த அச்சமும் இல்லாமல் மேற்கொண்டு வந்தனர். அதேபோல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தல் பணிகளிலும் கொரோனா என்ற அச்சத்திற்கு இடமளிக்காமல் கொண்டாடி வந்தனர். அனைத்திற்கும் பலனாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் துவங்கியது.
அடுத்தடுத்து உத்திரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல், தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் பலரும் அங்கும், இங்குமாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, ஆலையை இயக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. நீதிமன்றம் அரசிடம் கருத்துக் கேட்டது. இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு இறுதியில் ஆலையைத் திறக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்தது. அதன்படி, மே மாதம் 12-ம் தேதி ஆலை திறக்கப்பட்டு உற்பத்தி துவங்கியது.

வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், நாள் ஒன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் ஆலை இயங்க துவங்கிய நாளிலிருந்து இயங்குவதாக அறிவித்த இரண்டு ஆலைகளில் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டது. மற்றொன்று பழுதாகியுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது சரிசெய்யப்பட்டது போன்றும் உற்பத்தி துவங்கப்பட்டது போன்றும் தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஜூலை 31-ம் தேதிக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி இல்லை. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதங்கள் இயக்க அனுமதிக்கும்படி, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதற்குத் தமிழகத்திலிருந்து பல எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. எனவே இது பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வரும் சூழலில் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா இன்னும் முடிவடையாத நிலையில், 3வது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் அவசரப்படக் கூடாது” என்று குறிப்பிட்டார். இந்த பதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி ஸ்டெர்லைட் போராட்டக் குழுவை வழிநடத்திவரும் பேராசிரியை பாத்திமா பாபு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஸ்டெர்லைட் ஆலையை அவர்கள் திறக்க வேண்டும் என்று கோரிய போது, அன்றைய தேவை அதிகமாக இருந்தது. இன்று அது குறைந்துள்ளது. அவர்கள் ஆரம்பித்தபோதே தெரியும், அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இங்கு வரவில்லை என்று. அன்றைய நிலையில் எதிர்த்தோமே தவிரத் திறக்கக் கூடாது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஆக்சிஜன் தேவை இருந்ததால், தடையாகவோ, மனிதாபிமானமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது என்று எண்ணினோம்.
தற்போது ஆக்சிஜனுக்கான தேவை இல்லை. தமிழக அரசும், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை தேவை ஏற்படலாம். அதற்காக முன்கூட்டியே அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் தயார் நிலையில் மட்டும் வைத்திருக்கலாம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை நடத்திவரும் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியை பாத்திமா பாபு
மற்றொரு விஷயம், ஸ்டெர்லைட் ஆலையில் மின்சாரம் கடுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1 டன் ஆக்ஸிஜன் பிரித்தெடுக்க 700 யூனிட் மின்சாரம் தேவைப்படும். வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் தயாரித்த ஆக்சிஜனுக்கு 1 டன்-க்கு 6300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் உற்பத்தி தொடங்கிய நாளாகிய மே 13-லிருந்து ஜூலை 8 வரை வேதாந்தா 14,675 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்தது. அதற்கு 1,32, 48000 யூனிட் மின்சாரம் செலவழித்துள்ளது. இதற்கு மருத்துவமனைகளில், சிறிய அளவிலான கருவிகள் அமைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்.
அவர்கள் இலவசமாகத்தானே ஆக்சிஜன் தருகிறார்கள் என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் மின்சாரம் எங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுகிறதே. மற்ற செலவினங்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் குறைத்துவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்குகின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்தை, நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்த போது கேட்டோம். அவர், ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31-ம் தேதி மூடப்படும் என்று உறுதியாகத் தெரிவித்தார். மக்களாகிய எங்களுக்கு அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட் போராட்டக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்துக் கொடுத்த மனுவில், “இரு ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களில் ஒன்று தான் இயக்கத்தில் உள்ளது. மற்றொன்று இன்னும் இயக்கத்துக்கு உட்படுத்தப் படக் கூடிய நிலையில் இல்லை. இயங்கிக் கொண்டிருக்கும் கூடமும் , மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருந்த போது கூட, மிகச் சிறிய பங்கைத் தான் தர முடிந்தது. மாநில அரசு, ஆக்சிஜனுக்கு மிக நெருக்கடியான காலகட்டத்தில் எங்காவது ஆக்சிஜன் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று தேடி அலையும் போது கூட வேதாந்தா 10% தான் தர முடிந்தது.
நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் தர அவர்களால் முடியுமேயானால் நாட்டின் ஆக்சிஜன் பற்றாக்குறை எனும் சுமை குறையுமே என்று மனிதாபிமானத்தோடு தூத்துக்குடி மக்கள் ஒப்புதல் தந்தார்கள். ஆனால் நாளொன்றுக்கு 1050 டன் என்பது ஒரு அப்பட்டமான பொய். அந்த இலக்கை அவர்கள் அடையவே முடியாது. உற்பத்தி தொடங்கிய நாளாகிய மே 13லிருந்து ஜூலை 8 வரை வேதாந்தா 14,675 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்தது. ஆனால் அவர்களால் 1639 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டுக்கு உரியதாகத் தரமுடிந்தது. 13,000 டன்னுக்கும் அதிகமாக, ஆக்சிஜன் வெளியேறி வீணாகப் போனது.
வேதாந்தா அன்றாடம் 30 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாகச் சொல்லிக் கொள்கிறது. இதே அளவு ஆக்சிஜன் இதைவிடக் கூடுதல் செயல்திறன் கொண்ட Inox அல்லது Praxair இடம் இருந்து தருவித்தால், நாளொன்றுக்கு 168,000 யூனிட் மின்சாரம் சேமித்துவிட முடியும்.
அதாவது, வேதாந்தாவின் உற்பத்தியால் ஒரே நாளில் 1700 வீடுகளுக்கு ஒரு மாதம் பயன்படக்கூடிய மின்சக்தி விரயமாகிறது.
பொய்மையில் ஊறிப்போன ஸ்டெர்லைட் ஆலை, அமைச்சர்களிடம் முழுமையான தகவல்களைத் தந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு இந்த ஏமாற்று வேலையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடைசி தினமான ஜூலை 31-யை தாண்டி அவர்கள் இயங்க அனுமதித்தால் விரும்பத்தகாத விளைவுகளே மிஞ்சும். அரசு, மாவட்ட நிர்வாகம், பொது மக்கள் அனைவருக்கும் அது தெரியும். தேர்தல் சமயத்தில் நீங்கள் தூத்துக்குடி மக்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநில அரசின் முடிவும், மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதைத் தூத்துக்குடி மக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
