14 ஆண்டு சிறை தண்டனை முடித்த கைதிகளை மாநில அரசுகளே விடுவிக்கலாம் - உச்ச நீதிமன்றம்
433-ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டுக் கால தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது
‘தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை’ என்று ஹரியானா அரசு 2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 13ம் தேதி கொள்கை திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்குப் பாகுபாடில்லாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி இந்தத் திட்டத்தைத் திருத்தி அமைக்கும் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதுவரை, சிஆர்பிசி விதிமுறைகளைப் பின்பற்றி குற்றவாளிகளை ஹரியானா அரசு விடுவிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்தது. பின்னர் அவர்கள், ‘ஹரியானா அரசின் 2008 கொள்கைத் திட்டத்தை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தனர்.மேலும், ‘433-ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டுக் கால தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம், 14 ஆண்டுகளுக்குக் குறைந்த தண்டனை பெறும் வழக்கில் உள்ள கைதிகளை, முன்கூட்டியே விடுவிக்க மாநிலத்தின் ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் அவர், மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வழக்குக்களின் கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிக்காமல் விடுவிக்கக் கூடாது’ எனத் தீர்ப்பளித்தனர்.