பாலியல் தொழிலை ஆன்லையின் மூலம் விளம்பரப்படுத்தும் தரகர்கள்! தடையில்லாமல் நடக்கும் வியாபாரம்! எப்படி?
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், பாலியல் தொழிலுக்கான விளம்பரங்கள் இணையதளம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்கள் வெவ்வேறு சமூகவலைத்தள பக்கத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் வொர்க்கர்ஸ்.... பாலியல் தொழில் புரிவது சட்டப்படி குற்றமாகும். மனிதாபிமான அடிப்படையில், சிலர் குறிப்பிடுகையில், “அவர்களும் மனிதர்கள் தான். அன்றாட வயிற்றை நிரப்ப வேறு வழியின்றி இதைச் செய்கின்றனர். இதற்கு அரசு சரியான தீர்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்” என்று கருத்தைத் தெரிவிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில், பார்க்கையில் பெரும்பாலானவர்கள் அமைதி காத்தாலும், சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத தொழிலாகவே பாலியல் தொழில் உள்ளது.
பாலியல் தொழிலில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆயிரம். கடந்த கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகள் பற்றி விரிவான ஆவணப்படத்தை ஏசியாவில் குழு உருவாக்கியிருந்தது. அந்த வீடியோவில் பேசியிருந்த பாலியல் தொழில் தரகர், “கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து ஒரு மாதத்திற்குப் பெண்கள் அழைத்துவரப்பட்டு, சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதுபோன்று பல இடங்களில் உள்ளது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்குக் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். பெண்கள், ஒரு நாளைக்கு எத்தனை வாடிக்கையாளர்கள் வந்தாலும், தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஷயத்தில் விதிவிலக்கு இல்லை. ஆனால் தற்போது எழுந்திருப்பது பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களை மட்டுமல்லாமல், பொதுச் சமூகத்தில் பிரபலமான மற்றும், பல துறைகளில் பணிபுரியும் பெண்களைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. அதாவது இது ஒரு சைபர் கிரைம் குற்றமாக மாறி வருகிறது.
பொதுவாகவே பெண்கள் தங்களின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், அதை எடுத்து மார்பிங் செய்து பரப்பிவிடுவார்கள் என்ற சிந்தனை சமூகத்தில் உள்ளது. அதை மறுக்கவும் முடியாது. அதேபோல், பெண்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றும் புகைப்படங்களை எடுத்து, மற்ற தளங்களில் பதிவேற்றி அதை வெவ்வேறு விதத்தில் விளம்பரம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரபலமான ஒன்றிய உயிரினங்களில் @DinosaurOfficial என்ற டிவிட்டர் பக்கத்திலேயே இதன் முதல் பதிவை நான் கண்டறிந்தேன். அந்த பக்கத்தை இயக்குபவர் சில தளங்களில் உள்ள ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு பாலியல் தொழில் செய்யப்படும் அவலத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவரிடம் இது பற்றிய கூடுதல் விவரங்கள் கேட்டபோது, “உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த விளம்பரங்களின் கொடுக்கப்பட்டுள்ள சில ஏஜன்ட்களின் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டால், பெண்களின் புகைப்படங்கள், விபச்சாரம் நடைபெறும் ஏரியாவின் பெயர், Landmark போன்றவை நமது Whatsapp-க்கே வந்துவிடுகிறது” என்று தெரிவித்தார்.
“விபச்சார விடுதிகளால் நிரம்பி வழியும் தமிழ்நாடு”
— டைனோசர் ???? (@DinosaurOffcial) October 16, 2021
ஆம் உண்மைதான். அதுவும் இணையதள விளம்பரங்கள் மூலம் ஏஜண்ட்களின் மொபைல் எண் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் Photoகள் பகிரப்பட்டு எந்தவித பயமுமின்றி சர்வசாதரணமாக இந்த தொழில் நடப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.@tnpoliceoffl 1/10 pic.twitter.com/PFysv87g9s
தொடர்ந்து, விளம்பரம் செய்யப்படும் பக்கத்தை நான் ஆராய்ந்தேன். ஒரு குறிப்பிட்ட வெப்சைட்டை திறந்ததும், அதில், “18 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும்.
பணத்திற்கு ஈடாக பாலியல் சேவைகளைக் குறிக்கும் எந்த விளம்பரத்தையும் வெளியிட அனுமதியில்லை.
ஆபாசப் படங்கள் பதிவேற்ற அனுமதியில்லை.
எந்தவொரு பயனரும் குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சி வெளியிட்டால் தகுதிநீக்கம் செய்யப்படும்” உள்ளிட்ட வரைமுறைகள் அடுக்கடுக்காக போடப்பட்டுள்ளது.

உள்ளே சென்று பார்த்தால், அதில் பதிவேற்றப்பட்ட பெண்களின் புகைப்படம் வேறு தளங்களில் பார்த்தது போன்று தோன்றியது. எனவே அவற்றைத் தொடர்ந்து ஆராயத் தொடங்கினேன். அப்போதுதான். 2016-ம் ஆண்டு மிஸ் இந்தியாவில் இறுதிக்கட்ட போட்டி வரை சென்ற பெண் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததைப் பார்க்க முடிந்தது (அவரது சுயமரியாதையைப் பாதிக்கலாம் என்பதால், அவர் பற்றிய கூடுதல் விவரம் இங்குப் பதிவு செய்யவில்லை).

அதனைத் தொடர்ந்து தமிழ் பெண்கள் என்று குறிப்பிட்டு சில புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், ஒரு சிலவற்றை பேஸ்புக் பக்கங்களிலிருந்தும், டிவிட்டர் பக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கிறது.
இந்த புகைப்படத்திலிருக்கும் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து google search-ல் Upload செய்து தேடினால், வேறு சில வெப்சைட்டுகளிலும் அவரது புகைப்படம் இருப்பதாகக் காட்டுகிறது. அந்த வெப்சைட்டுகள் அனைத்துமே பாலியல் தொழிலுக்கான வெப்சைட் என்றும், மசாஜ் செய்யும் நிறுவனங்களின் வெப்சைட்டு என்ற விதத்திலும், பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பெயர் அனிதா, நித்தியா, பிரியா என்று வெவ்வேறு விதத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தின் அருகிலிருக்கும் எந்த லிங்கை கிளிக் செய்தால், AD ALREADY EXPIRED OR DELETED என்று செய்தி கிடைத்தது.

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகபட்டினம், பொள்ளாச்சி, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் எல்லாம் அவர்களது தொழில் இருப்பதாகப் பதிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்குக் கீழும் குறிப்பிடப்படும் சில வாசகங்கள்தான் வேதனையிலும் வேதனை. “நீங்கள் புக் செய்துவிட்டால், அவள் உங்களுடையவள், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” “உங்களுடன் நேரத்தைச் செலவிட்டு முழு திருப்தியை கொடுப்பார்கள்” என்று சில புகைப்படங்களுடன் கூடிய வாசகத்தில் பார்க்க முடிகிறது.

அதேபோல், மாதவிடாய் காலங்களில் நேரடி உடலுறவு ஈடுபட முடியவில்லை என்றால், மஸாஜ் பார்லர் போன்றவற்றில் பணி செய்ய வைக்கப்படுவர் என்றும், நேரடி உடலுறவு தவிர, பாலியல் ரீதியில் பேசுவது, வீடியோ அழைப்புகளில் முழு உடலைக் காண்பிப்பது பேசுவது போன்ற சேவைகள் தங்களிடம் இருப்பதாக அந்த இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு இணையதளத்தில் விற்பனைகள், வேலைவாய்ப்புகள் என்ற அமைப்புகள் போடப்பட்டுள்ளதுடன், Personal என்ற ஆப்சனுக்கு உள்ள சில லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், Dating என்ற வகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும், பெண்களின் உடலைச் சுட்டிக்காட்டி ஒருநாள் அவர்களுடன் செலவழிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோரால் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களிலிருந்து பெண்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, பாலியல் விளம்பரம் செய்யப்படுகிறது. இவை அனைத்துமே எந்தவித அச்சமும் இல்லாமல் இயங்கிவருகிறது.
பாலியல் தொழில் தொடர்பான சட்டவிதிகள்?
இந்தியாவில் விபச்சாரம், சட்டப்படி குற்றமான செயலாகக் கருதப்படவில்லை. ஆனால் இந்திய சட்டப்படி ஒருவரைக் கடத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல், ஒருவர் வணிக ரீதியில், பாலியல் உறவு கொள்ள அழைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது. ITPA கீழ் 9 முதல் 7 வரை, விபச்சாரத்தை ஒழிக்கும் நோக்கத்தில் குறிப்பிடவில்லை. அதே சமயம், வியாபாரமாக்குதலைத் தடுக்கும் விதத்தில் உள்ளது.
மும்பையில் மூன்று பெண்கள் பாலியல் தொழில் செய்ததாக மீட்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “இந்தியாவில் அவர்கள் எந்த இடத்திலும் சுதந்திரமாகச் செல்ல அனுமதி உள்ளது. ஒரு பொதுச் சட்டத்தால் வழங்கப்படும் வேறு எந்த உரிமையையும் விடக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உயர்ந்த பீடத்தில் நிற்கின்றன. 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட பிடா சட்டத்தின் நோக்கமும் பாலியல் தொழிலை ஒழிப்பதல்ல” என்று குறிப்பிட்டார்.
அவ்வாறு இருக்க பாலியல் தொழில் குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் வியாபார நோக்கில் ஒருவரைக் கவருவது, குற்றமாகவே கருதப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்ட விவகாரம் வெறும் பாலியல் தொழில் சார்ந்த குற்றம் என்று மட்டும் கூற முடியாது. பாலியல் தொழிலுக்காக, மற்ற பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்.
பெண்களை ரகசிய கேமராக்கள் கொண்டு புகைப்படம் எடுப்பது, தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வண்ணம் புகைப்படம் எடுப்பது போன்றவை IPC 354 c சட்டத்தில் Voyeurism என்ற சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் குற்றமாகும். குற்றம் புரிந்தவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு இழைத்தால், மூன்று ஆண்டிலிருந்து 7 ஆண்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஒருவரின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தையோ, தனிப்பட்ட விவரங்களையோ ஆன்லைனில் வெளியிட்டால் ஐடி சட்டப்பிரிவு 72 கீழ் தண்டனைக்கு உரியக் குற்றமாகவும், இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பெண்கள் தங்களின் புகைப்படங்கள் தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
