அழகான தாவரம் என்று எதை நடவு செய்தாலும் ஆபத்துதான்! முதுமலையைச் சூழ்ந்துள்ள தாவரத்தால் ஆபத்தா?
கண்ணுக்குக் குளிர்ச்சியான இந்த தாவரம் முதுமலையில் பரவ காரணம் 'யானைகள்' என்று சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது ஒரு அழகான தாவரம்...! இதற்கு முன் நின்று விதவிதமான புகைப்படங்களை எடுத்து, நீங்கள் கூட பகிர்ந்திருக்கலாம். நீங்கள் இதைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில், நம் மேற்குத் தொடர்ச்சி மலையை அழகாக்கும் மஞ்சள் நிற பூக்கள் கொண்ட தாவரம் ஆபத்தானவை என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
சீமைக் கருவேலம் மரம் மட்டுமல்ல இந்தியாவில், இன்னும் பல அயல் தாவரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் பாதிப்பைத் தரக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'சென்னா ஸ்பெக்டபிலிஸ்' (senna spectabilis). இந்த தாவரம் கண்ணுக்குக் குளிர்ச்சியானதும் கூட. வெயில் காலங்களில் அழகிய மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும். அதைப் பார்க்க மிகவும் ரம்மியமான தோற்றமாகவே இருக்கும். ஆனால், இந்த தாவரம் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் ஆய்வார்கள்.
சீமைக் கருவேலம் போல இந்த தாவரமும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது. இது Caesalpinioideae என்னும் துணை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதை பாப்கான் மரம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்த பூக்களின் நிறம் மற்றும் தோற்றம் நம்மூர்களில் இருக்கும் கொன்றை மரத்தைப் போன்று இருக்கும். சென்னா ஸ்பெக்டபிலிஸ் தாவரமும் அந்த குடும்ப வகையைச் சேர்ந்ததுதான். இந்த தாவரத்தில் ஆக்கிரமிப்பு திறன் மட்டும் மிகவும் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சென்னா ஸ்பெக்டபிலிஸ் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தைக் கொண்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அலங்காரத் தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது (1980களில் என்று கூறப்படுகிறது). ஈரமான இலையுதிர் காடுகளில் மிக விரைவில் வளரும் தாவரம், மேற்குத் தொடர்ச்சி மலையைக் கொண்ட அடுத்தடுத்த மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் உள்ள முதுமலை யானைகள் சரணாலயத்திலும், கர்நாடகாவில் பாண்டிப்பூர் புலிகள் சரணாலயத்திலும் பெருமளவில் காணப்படுகிறது. தமிழகத்தில் மற்ற பல இடங்களிலும் இந்த தாவரம் இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். சென்னையில் கூட சில இடங்களில் தாவரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல் கார்குடி, நிலக்கோட்டை, சிங்காரா ஆகிய பகுதிகளில் பெருமளவில் இந்த தாவரம் காணப்படுகிறது.
தாவரத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் “சென்னா ஸ்பெக்டபிலிஸ் இலையுதிர் காடுகளில் அதிக அளவில் வளர்கின்றன. பல பாலூட்டிகள் இந்த தாவரத்தை உண்ண விரும்புவதில்லை” என்று குறிப்பிட்டனர்.
முதுமலையில் பரவும் வேகத்திற்குக் காரணம் 'யானைகள்' என்று சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்ட சூரி சேகல் பல்லுயிர் பாதுகாப்பு மையம் தரப்பில், முதுமலையில் நடத்தப்பட்ட ஆய்வில் “7 வகையான விலங்குகளின் மலத்தை ஆய்வு செய்ததில் சென்னா ஸ்பெக்டபிலிஸ் தாவரத்தின் விதைகள் கண்டறியப்பட்டுள்ளது. யானை, காட்டு எருமை, பசு, மான், முள்ளம்பன்றி, மர நாய், வீட்டுக் கால்நடைகள் ஆகியவற்றின் மலத்தைக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த தாவரம் மிக வேகமாக வளரும் குணம் கொண்டுள்ளது. அதிலும் யானையின் வயிற்றிலிருந்து வெளியேறும் மலத்திலிருந்து விரைவில் முளைக்கின்றன. மரங்கள் நிற்கும் இடத்தில் எந்த இயல் தாவரத்தையும் முளைக்க அனுமதிப்பதில்லை. எனவே இவற்றின் இளம் மரங்களை வளர விடாமல் தடுப்பது, தொடர்ந்து சென்னா ஸ்பெக்டபிலிஸ் பரவாமல் தடுக்க வழிவகை செய்யும்” இவ்வாறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதுமலையில் இந்த தாவரங்களின் பாதிப்பு குறித்து ஆய்வு மாணவர் அனூப் அவர்களிடம் பேசியபோது, “வயநாடு பகுதியில் சென்னா ஸ்பெக்டபிலிஸ் வனத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வனத்துறையின் அலுவலகத்திற்கு அருகில் சில மரங்கள் மட்டும் நடவு செய்தனர். தனியார் நிறுவனம்தான் வனத்துறைக்கு இந்த தாவரத்தின் விதையை கொடுத்தது. வனத்துறை சார்பாக பொதுமக்கள் சிலருக்கு இதன் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல இடங்களில் பரவ துவங்கியது.
தற்போதுவரை சென்னா ஸ்பெக்டபிலிஸ் தாவரத்தின் தீமையைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆசியாவில் அதிக அளவில் யானைகள், புலிகள் போன்றவை மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உள்ளன. வனத்துறைக்கு இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. எப்படிப் பரவுகிறது என்றும் தெரியவில்லை.

காட்டுத் தீயால் பாதிக்கப்படும் பகுதிகளில் சென்னா ஸ்பெக்டபிலிஸ் தாவரம் எளிதில் பரவிவிடுகிறது. இதன் இலைகளை வேறு எந்த உயிரினங்களும் உண்பதில்லை. வேர்களின் இணைப்பான மைக்கோரைசேவை பூஞ்சையை முழுவதும் அழித்துவிடும். மற்ற தாவரங்கள் வளரவிடாமல், சூரிய ஒளியை முழுவதும் தடுத்துவிடும்.
தாவரத்தின் கிளையை வெட்டினால், கெட்ட நாற்றம் வரும். ஒருவேளை இதை யாராவது அகற்றினால் கண் எரிச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.
சென்னா ஸ்பெக்டபிலிஸ் அகற்றிவிட்டாலும், அதன் சிறிய துண்டு இருந்தால் அதிலிருந்து முளைக்க ஆரம்பிக்கும். எனவே இதை முழுவதும் அகற்றுவது மிகவும் கடினம். இதன் விதைகள் எவ்வளவு நிலத்தில் புதைந்துள்ளது என்பதை நம்மால் கண்டறிய முடியாது. இருந்தாலும், முடித்தவரை விதைகளை அகற்றிவிட வேண்டும். பூக்கள் பூக்காத வண்ணம் கிளைகளை வெட்டவும், புதிதாக வரும் மரத்தை ஆரம்பத்திலேயே அகற்றவும் வேண்டும்” என்று தெரிவித்தார்.
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்களிடம் கேட்டபோது “தமிழகம் முழுவதும் சென்னா ஸ்பெக்டபிலிஸை நடவு செய்துள்ளனர். நம்மை விட பெங்களூர் போன்ற இடங்களில் அதிக அளவில் நடவு செய்துள்ளனர். இந்த தாவரத்தின் குடும்ப வகையே அப்படியானதுதான். இதில் காய்களின் வளர்ச்சியும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
அழகாக இருக்கிறது என்று இதை ஒரு இடத்தில் நடவு செய்துவிட்டால், அது எதிர்காலத்தில் பிரச்சனையாக மாறிவிடும். தமிழ்நாட்டிலேயே வனத்துறைதான் இதை அதிக அளவில் அறிமுகப்படுத்தியது. தனியார்களும் அழகான தாவரம் என்று இதைப் பல இடங்களில் வாங்கி நடவு செய்தனர். அழகானது என்று வாங்கி நடவு செய்வது அனைத்தும் ஆபத்தானதுதான்.
காட்டு தீ பரவும் இடங்களில் எளிதில் வளரும் என்ற தகவல்?
அந்த இடங்கள், இதுபோன்ற தாவரங்களுக்கு மகிழ்ச்சியான பகுதி. விரைவில் முளைத்து வந்துவிடும். அதன் விதைகள் 40 வருடங்கள் ஆனாலும் நிலத்தில் அப்படியே இருக்கும். அவை காலநிலை மற்றும் நிலத்தின் தன்மை மறி, சூரிய ஒளி அதிகரிக்கும் போது காடு போன்று முழைத்து வந்துவிடும்.
இதன் பூக்களினால் பாதிப்பு?
பூக்களினால் எந்த பதிப்பும் இருக்காது. தேனீக்கள் தேன் எடுக்கப் பூக்களில் அதிக அளவில் வரும். ஒரே ஒரு பிரச்சனைதான் இயல் தாவரங்களை வளர அனுமதிப்பதில்லை. இது இடம் போட்டிதான். மற்றபடி ஒன்றும் இல்லை.
இதன் பரவல் கட்டுப்படுத்துவது?
அகற்றுவதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. ஆனால், அகற்றுவது நமக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. அதைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. எந்த அயல் தாவரங்களாக இருந்தாலும், அகற்றுவது என்பது சரியானது இல்லை. அதைப் பயன்படுத்துவது மட்டுமே சரியான தீர்வு. இதைத் தளை உரமாகப் பயன்படுத்தலாம். இயற்கை உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து முயலலாமே.
இந்த தாவரமும் ஆவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆவர குடும்பத்தைச் சேர்ந்த பல தாவரங்கள் தோல் வியாதிகளுக்கு மருந்தாக மாற்றப்படுகிறது. அதேபோல் இதையும் பயன்படுத்த ஆய்வு செய்யலாம். அதை விடுத்து ஜேசிபியை கொண்டு தாவரத்தை அகற்ற நினைத்தால், அடுத்த ஆண்டு இதுபோன்ற மற்றொரு காடு உருவாகியிருக்கும்.
உள்ளூர் விலங்குகளை இந்த தாவரம் பாதிக்காதா?
பல விலங்குகள் இதனை உண்ணுகின்றன. சீமைக் கருவேலம் மரத்தைக் கூட யானை சாப்பிடுகிறது, மான் சாப்பிடுகிறது. அதன் முற்றிய காயை நாமும் சாப்பிடலாம். தித்திப்பாகவே இருக்கும். எனவே எல்லோரும் பழகிக்கொள்வார்கள்.
அதிலிருந்து வெளியேறும் வாசனை?
சென்னா ஸ்பெக்டபிலிஸ் ஆவார குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், பொதுவாகவே அந்த குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் ஒருவகை வாசனை இருந்துகொண்டே இருக்கும். இதில் பெரிதாக ஒன்றுமில்லை” என்று குறிப்பிட்டார்.
