'விரைவில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகம் முழுவதும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து முடிவுகள் எட்டப்பட்டதும், அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் வேகம் குறைந்து வருகிறது. பல மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழகம் முழுவதும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து முடிவுகள் எட்டப்பட்டதும், அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். மேலும், சிஎஸ்ஆர் பொறுப்பு நிதி மூலம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
