'டாஸ்மாக் கடைகளிலோ, மால்களிலோ கட்டுப்பாடுகள் கிடையாது!' பள்ளிகளுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு?
'மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள், குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே ஆரம்பச் சுகாதார மையத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும். சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டாலும், பள்ளிக்கு அனுப்பக்கூடாது.' என்கிறார் முருகையன் பக்கிரிசாமி
செப்டம்பர் 1-ம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டது. இது, நீண்ட காலமாகப் பள்ளி பக்கம் செல்லாத பிள்ளைகளுக்கு ஒருவகையில் மகிழ்ச்சியைத் தந்தாலும், கொரோனா தொற்று பள்ளி மாணவர்களிடையே கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்படுமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கத்தால், 2020 மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அப்போது பள்ளிக் கல்வியில், கல்வியாண்டு முடியும் தருவாயில் இருந்ததால், அதன்பின் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் தாமதமாக ஆன்லை வகுப்புகள் துவங்கப்பட்டது. 2020-21-ம் கல்வியாண்டிலும் சில நாட்கள் 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கத் துவங்கியது. எனினும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தால், ஊரடங்கு போடப்படவில்லை. கொரோனா தொற்று மிகவும் அதிகரித்த பின்னர், ஊரடங்கு போடப்பட்டது. அதற்குள் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்று பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பின், அடுத்த கல்வியாண்டு துவங்கியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் பல திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்தியதுடன், பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குவது குறித்த அறிவிப்புகளும் வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன.
“ஆசிரியர்களும், மாணவர்களுக்கும் கட்டாயம் சானிடைசர் வழங்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு குழு அமைத்து அல்லது சுகாதார பணியாளர்களின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.
அறிகுறிகள் தென்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது.
நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாய தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும்.
வகுப்பில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தது.
அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் ஒரு வாரக் காலத்திற்கு மேலாக வகுப்புகளைத் துவங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமத்தி உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு முழுக்க உள்ள பல்வேறு இடங்களில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று தலைமைச் செயலாளர் இறையண்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் மூடப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடப்படுவது அவசியமா? என்பது பற்றி கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர், “முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகையில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் 40 லட்சம் மாணவர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதில் 70 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். அதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், சென்னையைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறிந்து, மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை வழங்கியுள்ளனர். மாணவியின் தந்தை கர்நாடகாவிற்குச் சென்றுவந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே அவர் மூலமாகக் கூட அந்த மாணவிக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம். மாணவியின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பள்ளிக்கூடம் வழியாக மட்டும் பரவும் என்று கூற முடியாது. பல பேர், பெற்றோருடன் திருமணம் போன்ற நிகழ்விற்குச் சென்று வருகின்றனர். எனவே அதன் வழியாகவும் தொற்று பரவலாம்.
தனியார்ப் பள்ளிகள் திறக்கப்பட்டு, கட்டணத்தைப் பெற்றுக்கொண்டபின், பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறது, என்ற கருத்தைப் பலதரப்பிலிருந்தும் முன்வைக்கின்றனர். எனவே பள்ளிகளை அவசரப்பட்டு மூட வேண்டாம் என்பது என் கருத்து.
மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள், குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே ஆரம்பச் சுகாதார மையத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும். சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டாலும், பள்ளிக்கு அனுப்பக்கூடாது.
பள்ளிகள் திறக்கும் முன்னரே 3வது அலை வரப்போகிறது என்று எச்சரிக்கப்பட்டது. எனினும் சுகாதாரத்துறை, மருத்துவக் குழு போன்றோரின் அறிவுறுத்தலின்படியே பள்ளிகள் திறக்கப்பட்டது. எனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்படும் நோய்த் தொற்றுக்குச் சரியான மருத்து என்பது பள்ளிகளை மூடுவதாக இருக்காது, அதைத் தடுப்பதாகவே இருக்க வேண்டும்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 12 வயதிலிருந்தே தடுப்பூசி போடத் துவங்கிவிட்டனர். நம் நாட்டில் பரிசோதனை நிலையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. பிரதமர், நாம் உயர்தரமான முறையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் சிறுவர்களுக்கு மருந்துகள் செலுத்தும் பணி துவங்கவில்லை. மற்ற நாடுகளில் பயன்படுத்தும் தடுப்பூசியையாவது சிறுவர்களுக்குச் செலுத்தத் திட்டமிடலாம். பலரும் கூறுவது போன்று, கொரோனாவிற்கு டாஸ்மாக் கடைகளிலோ, மால்களிலோ கட்டுப்பாடுகள் கிடையாது. பள்ளிகளுக்கு மட்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம், முதலில் வேகமாகக் கண்காணிக்கப்படுகிறது. அதன்பின்,அதன் வேகம் குறைகிறது. அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து கண்காணித்து அனைத்தையும் சரிவரச் செய்ய வேண்டும். இந்த பணிகளில் அனைத்து துறையின் ஒருங்கிணைப்பு வேண்டும்.
பள்ளிகள் மூடுவதை, பொது சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி முடிவெடுக்கலாம். எந்த ஒரு நிலையிலும் உயிர்தான் முக்கியம். அதைத் தவிர எதையும் முடிவெடுக்க முடியாது.
