படித்த இளைஞர்களுக்கு வேலை? SC/ST மாணவர்களுக்கு உதவித் தொகை குறைப்பால் ஏற்படும் பாதிப்பு?
'தொகை முன்கூட்டியே கிடைக்காமல் இருக்கும் போது மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் போகிறது. இதனால் இடைநிற்றல் அதிகமாகிறது. இடைநிற்றல் வர்ணாசிரமத்தின் சதிதான். ' என்று விசிக துணை பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார்.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் கல்வி பெறுவதற்காகவே பள்ளிகளிலும், கல்லூரிகளும் உதவித் தொகை திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுவும், போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப் எனப்படும், பள்ளிப் படிப்பிற்கு பிந்தைய உதவித் தொகை திட்டம் பல மாணவர்களை மேற்படிப்பிற்குக் கொண்டு சேர்த்துள்ளது.
ஆனால் சமீபத்திய ஒரு கணக்கீடு என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. அதாவது, 2016-ம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்குச் சேர்ந்த எஸ்.சி/எஸ்.டி மாணவர்களைக் கணக்கிடும் போது, 50 சதவீத மாணவர்கள் தற்போது குறைந்துள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ள போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தைக் கடுமையாக்கியதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்திய எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் கட்டணம் திரும்பி வழங்கப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளில் கல்விக்கட்டணம் திருப்பி வழங்க அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2011-12 கல்வியாண்டில் 45,315 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,23,199 பேர் இணைந்துள்ளனர். இது 270 சதவீதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
அதன் பிந்தைய உதவித் தொகை சிக்கல்களால் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. 2020-2021-ம் கல்வியாண்டில் 17,518 பேர் மட்டுமே இணைந்தாக இந்து செய்தித்தாளின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பிற்கு பிந்தைய உதவித்தொகையையே போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உதவித் தொகை 7 பிரிவுகளின் வழங்கப்படுகிறது. அவை அனைத்திலும் கல்விக் கட்டணம் மிகவும் முக்கியமானதாகும்.
அதிமுக அரசின் தகவல்படி, 2021-2013-ம் கல்வியாண்டில் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் உதவித் தொகைக்காக 353.55 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 2017-2018-ம் ஆண்டுகளில் 1526.46 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அத்துடன் மத்திய அரசு உதவித் தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை என்றும், சுயநிதி கல்லூரிகள் அதிக அளவில் ஊக்கத்தொகை அறிவித்துள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த உதவித் தொகை குறைக்கப்பட்டு வந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் 2020-ம் ஆண்டு, மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப்பை ரத்து செய்யவும் திட்டமிட்டது. தமிழகத்திலிருந்து விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், போராட்டமும் நடத்தப்பட்டது.
அதன்பின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்த தவார்சந்த் கெலாட் கூறுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்காக ரூ.59,000 கோடியைக் கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அரசு சார்பில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியிலிருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.
முந்தைய காலத்திலிருந்த திட்டத்தைப் பின்பற்றி 1,100 கோடி மட்டும் செலவிடப்பட்டது. இதனால் மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டது. சரியான நேரத்தில் மாநிலங்களால் உதவித் தொகை அளிக்கப்படவில்லை. இதனால் பட்டியலின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது.
மோடி அரசு இதை மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் அனுப்பப்படும். போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் 2014- 15 ஆம் ஆண்டில் 17 சதவீத மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், தற்போது 23 சதவீத மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போதைய கொரோனா காலத்தில் படிக்கும் மாணவர்களின் அளவு வேகமாகக் குறைந்துவருகிறது. பல பெற்றோர் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பதைப் பாதியில் நிறுத்தும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் அதிகமானோர் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப் ரத்து செய்வதாக ஒன்றிய அரசு முடிவு செய்ததும் போராட்டம் நடத்தினோம். அதன்பின் நிதி அமைச்சரைச் சந்தித்து இது பற்றிப் பேசியிருந்தோம். அத்துடன், நாடாளுமன்றத்தில் விவகாரம் தொடர்பாகப் பேசினோம். எனவே போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப்பை ரத்து செய்யாமல் அதன் அளவை குறைத்தனர். அதன்படி, கல்வி தொகையில் 60 சதவீதம் மத்திய, மாநில அரசு செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகையை மாணவர்களே செலுத்த வேண்டும் எனவும் திட்டமிட்டனர். அதேபோல் முதலில் மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும் பின்னால்தான், அரசு தரப்பில் உதவித் தொகை கொடுக்கப்படுமாம். இது குழறுபடியை ஏற்படுத்துவதால், முதலிலேயே கொடுக்கும்படி கோரிக்கை வைத்தோம்.
தொகை முன்கூட்டியே கிடைக்காமல் இருக்கும் போது மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் போகிறது. இதனால் இடைநிற்றல் அதிகமாகிறது. இடைநிற்றல் வர்ணாசிரமத்தின் சதிதான். உதவி தொகை, அறிவித்தபின் அதை ஒதுக்கவில்லை. அதேபோல் மாணவர்களுக்கும் சென்று சேரவும் இல்லை. மாணவர்களுக்குக் கொடுக்கும் நிதியை வேறு பக்கமாகத் திசை திருப்புகிறார்கள்.

2014-ம் ஆண்டிலிருந்து எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப் குறைந்துக்கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடைசி பட்ஜெட் கூட்டப்பட்டபோது 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை பாஜக ஆட்சியில் 3 ஆயிரம் கோடிக்கு கீழ் குறைத்தனர். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் நிதியில், அனைத்து மாணவர்களையும் சேர்க்கிறார்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களையும் இதில் சேர்க்கிறார்கள்.
போஸ்ட் மெரிட் ஸ்காலர் திட்டத்தை, அம்பேத்கர் அவர்கள் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களிடம் போராடி வாங்கினர். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தனர். ஸ்காலர்சிப் பெறுவதற்கும் நீட் போன்று இங்கும் நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள். அதில் வெற்றிபெற்றால் தான் ஸ்காலர்சிபில் ஒரு பகுதி தரப்படுகிறது. அதுவும் முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை. இது பலருக்கும் தெரிவதில்லை.
இதைப் பற்றி அவர்கள் பேசும்போதே, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். சில மாநிலங்களில் மத்திய அரசின் இந்த முடிவினை மாற்றும் வகையில் சொந்த மாநிலத்திலிருந்து மாணவர்களுக்கு நிதி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். நாங்களும் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து, மத்திய அரசு நிதியை நிறுத்தினாலும், மாநில அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
உயர்கல்வியைப் படிக்கக் கூடாது என்பதுதான் மனுதர்ம சனாதனம். பொறியியல் கல்லூரியில் மட்டுமல்ல மற்ற கல்வியிலும் எஸ்.டி/எஸ்.சி மாணவர்களின் அளவீடு குறைந்திருக்கும். குருகுல கல்வியில் பிராமணர்கள் மட்டும் படித்தனர். தற்போது, அனைவரும் படிக்க வருவதால் அதைத் தடுக்க உதவித் தொகையை நிறுத்தியுள்ளனர். அதற்கு அப்போதைய மாநில அரசும் ஒத்துப்போனது. தற்போதைய தமிழக அரசு இந்த உதவித்தொகை திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு, போராட்டங்களுக்குப் பின் சில திட்டங்கள் அறிவித்தாலும், அதற்கான செயல் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. வெறும் வாயில் அறிவித்துவிட்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது தவிர, ஆக்கப்பூர்வமான நடைமுறைகள் இங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஒரு ஏமாற்று வேலையை மட்டுமே செய்கிறார்கள்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சங்க தமிழன், “படித்தால் மட்டும் போதாது, படித்த இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும். பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்றால் படிக்கும் அளவு குறையும். உதவித்தொகை சரிவரக் கிடைக்க வேண்டும்.

நம் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை என்றால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். தேவையையொட்டி தான் எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. பொறியியல் மாணவர்களுக்கு எந்த இடத்திலும் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் தலித் மக்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது அவர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்பைச் சந்திக்கின்றனர். சில கல்லூரிகளில் எஸ்டி/எஸ்சி மாணவர்கள் சேருவதே இல்லை. கல்லூரி மாணவர்கள் சேர்ந்தால் அரசு ஊக்க தொகை கொடுக்கிறது. மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்பை தான் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
