வலம்புரி சங்கினால் வளம் பெருகுமா? எப்படி மோசடி செய்கின்றனர்?
கடல்வளம் பாதுகாப்பு அமைப்பால், மிக மிக அரிதாகக் கிடைக்கும் சில வலம்புரி சங்குகளை விற்பனை செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் காணப்படும் வலம்புரி சங்குகள் மீது கடவுள் நம்பிக்கையைத் திணிப்பது போன்ற பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலம்புரி சங்கு! அது ஆன்மீக பொருள் என்ற சிந்தனை பரவலாக இருக்கிறது. சில பிரபலங்கள் கூட வலம்புரி சங்கு தங்களுடன் இருந்ததால்தான் வாழ்க்கையில் முன்னேறியதாக நம்பும் அளவுக்குப் பேசியுள்ளனர். உண்மையில் வலம்புரி சங்கிற்கு சக்தி இருக்கிறதா?... இவ்வாறு சிந்திக்கச் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் காரணம். வலம்புரி சங்கு என்றால் என்ன? என்ன நிகழ்ந்தது?
திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் திருக்கோயிலில், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஆசிரமத்தில் வலம்புரி சங்கு மகிமை மிக்கதாகவும், அதில் பாலைவிட்டால் தையிராக மாறும் என்றும், அதேபோல் அரிசியில் புதைத்தால் மேலே வந்துவிடும் என்றும் கூறி விற்பனை செய்துள்ளனர். இதனை நம்பி பலரும், லட்சக் கணக்கில் பணம் செலவழித்து வலம்புரி சங்குகளை வாங்கியுள்ளனர்.
இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சங்கில் எதோ ஒரு வேதிப்பொருள் தடவி பாலை திரிய வைத்ததும், சங்கின் கீழ் பகுதியில் மின் மேட்டார் செட் செய்து, சங்கை அரிசியிலிருந்து மேலே எழ வைத்ததையும் கண்டறிந்தனர். அத்துடன் மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மட்டும்தானே என்று நாம் கடந்து வந்துவிட முடியாது. பல இடங்களில் வலம்புரி சங்குகள் என்று பிரபலமான சாமியார்களே விற்பனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலம்புரி சங்கு?
வலம்புரி சங்கு என்பது ஆயிரத்தில் ஒன்றுதான் உருவாகும். அதைப் பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்தால், ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது போன்ற சிந்தனைகள் உள்ளது. உண்மையில் வலம்புரி சங்கு என்பது ஒரு அரிதான விஷயமாக இருந்தாலும், அது மரபணுக்களின் சடுதிமாற்றத்தால் கருமுட்டையின் வளர்ச்சியில் அவ்வாறு மாற்றமடைவதாக அறிவியல் குறிப்பிடுகிறது.

அதேபோல் உலக கடல்வளம் பாதுகாப்பு அமைப்பால், மிக மிக அரிதாகக் கிடைக்கும் சில வலம்புரி சங்குகளை விற்பனை செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் காணப்படும் வலம்புரி சங்குகள் மீது கடவுள் நம்பிக்கையைத் திணிப்பது போன்ற பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களில் வலம்புரி சங்குகள் பற்றிய சில வரிகள் உள்ளன. அவை கூட ஆன்மீக விஷயங்களில் வலம்புரி சங்குகளின் பங்கை அதிகப்படுத்தியிருக்கலாம்
“மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை’-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்” என சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் பாடலில் வருகிறது.
தற்போதைய காலத்தில் யூடியூப் சேனல்களில் கூட வலம்புரி சங்குகளின் விற்பனை பற்றியும், அதன் மீதான நம்பிக்கைகள் பற்றியும் வீடியோக்களை அதிக அளவில் பார்த்திருக்க முடியும். அந்த வீடியோவில் வெளியிடப்படும் வலம்புரி சங்கு அரிசியின் மேல் மிதக்க வைக்க, திருவண்ணாமலை மோசடியில் ஒரு வகையான பேட்டரியை பயன்படுத்தியிருந்தனர். அந்த பேட்டரி இல்லாமலும், வலம்புரி சங்கு நகரும் என்றால் அது நம் கண்ணிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் அதன் அறிவியலையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

சங்கு என்பது கூம்பு நத்தையின் உடை அல்லது வீடு என்று குறிப்பிடலாம். அதாவது, கூம்பு நந்தையின் மேல் இருக்கும் பாறை போன்ற அமைப்புதான் சங்கு. அந்த கடல் கூம்பு நத்தை இறந்த பின், சங்கு காலியாக இருக்கும். மீனவர்கள் அந்த நத்தையுடனும் சங்கைப் பிடிப்பதுண்டு. கூம்பு நத்தை இறந்தபின், காலியாகும் சங்கினுள் துறவி நண்டு (hermit crab) வசிக்கத் துவங்குகிறது. அந்த வகை நண்டுகள் பயந்த குணம் கொண்டவை. அத்துடன், அதன் மேலும் அவற்றுக்கு ஓடுகள் இருப்பதில்லை. துறவி நண்டு வளர வளர, அதற்கு ஏற்ற வகையிலான சங்குகளுக்குள் சென்று தங்கிக்கொள்ளும். அந்த சங்கை எடுத்து வந்து பரிசோதித்தால், அதில் நகர்வுகள் தென்படுவதைப் பார்க்க முடியும். மற்றபடி, வெறும் சங்கு என்பது நகர்வது இல்லை என்பதுதான் உண்மை என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
சங்கிலிருந்து ஒலி!
வலம்புரி சங்கு மட்டுமல்ல, இடம்புரி சங்கு உள்ளிட்ட அனைத்து சங்குகளிலிருந்து இரைச்சலான ஒரு ஒலியைக் கேட்க முடியும். அதற்குக் காரணம் சொல்லும் ஆய்வாளர்கள், இதுபோன்ற ஒலியை நீங்கள் டீ குடிக்கும் கோப்பைகளை எடுத்து காதில் வைத்தால் கூட கேட்க முடியும். மூடப்பட்ட ஒரு பொருள் சுற்றிலும் இருக்கும் ஒலியைக் கவருவதாலேயே இவ்வாறு கேட்கிறது. மாறாக எந்த சங்கிலிருந்தும் ஓம்... போன்ற ஒலிகள் எதுவும் எழுவது இல்லை. சங்கினுள் பகுதியில் சிறிய பிரிவுகள் போன்று இருக்கும். அதில் ஒலிகள் பட்டு எதிரொலிப்பதாலேயே பல்வேறு விதத்தில் ஒலிகள் கேட்கிறது.
இயற்கையான ஒரு பொருள்
இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் சங்கு. சங்கு முழுவதும் சுண்ணாம்பால் உருவானது என்றாலும், ஹைட்ரோகார்பனை விடப் பல மடங்கு கடினமானதாகச் சங்குகள் இருக்கிறது. இயற்கையிலேயே அழகான தோற்றம் இருப்பதால் மாலைகள், காதணிகள் போன்றவை தயாரிக்கக் கடலை நம்பியிருக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றினுள் வாழும் கூம்பு நத்தைகள் சமைத்து உண்ணப்படுவதும் உண்டு.
கடலில் இருக்கும் பல பொருட்கள் அரியவகை பொருளாகவே நாம் பெரும்பாலும் பார்த்து வருகிறோம். உண்மையில் அப்படியில்லை. கடலுக்கு அடியில் இருக்கும் ஏராளமான சங்குகளை நாம் கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். மனிதர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சென்று மட்டுமே ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சடுதி மாற்றம் அடைந்த வலம்புரி சங்குகள் அதிக அளவில் உள்ளதாகவும், அதைதான் இந்தியாவிற்கு எடுத்து வந்து மோசடி செய்வதாகவும் சில மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories
கேஸ் விலை இரண்டாயிரம் வித்தாலும் யாரும் ஒன்றும் கேட்கப் போவதில்லை!
ஜோதிடத்தால் கொலை செய்யப்பட்ட உயிர்கள்... அதிர்ஷ்டமா? உழைப்பா? எது வலியது!
பிச்சைக்காரர்களை ஒருநாள் உழைப்பாளர்களாக மாற்றிய நிறுவனம்! 'பலரும் முயற்சிக்கலாம்'
அடர் வனம் என்பது அபத்தமா? மியாவாக்கி திட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்பும், ஆதரவும்| ஒரு அலசல்