காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்ன? பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இளம் தலைவர்
“கொரோனா இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. என்னுடைய விருப்பம், தொண்டர்கள் விருப்பம் என்பது தலைவர் ராகுல்காந்தி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் என்ன விரும்புகிறார் என்று தெரியவில்லை.” ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரஸ் தற்போது கடும் பின்னோக்கிய நிலையில் உள்ளது. கட்சியின் இந்நிலைக்குப் பல காரணங்களும் விவாதங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், தொழிற்பண்பாளர் காங்கிரஸ் பிரிவின் தலைவருமான ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் அவர்களுடன் அபிஷேக் நாகன் நடத்திய நேர்காணல் தொகுப்பு.
பொது வாழ்க்கையில் ஈடுபட இந்தியா வந்தீர்கள், அரசியல் குடும்ப பின்னணி உங்களுக்குப் பொறுப்பைப் பலப்படுத்துகிறதா?
நான் தற்போது தான் தேர்தல் எதிர்கொண்டு வெற்றி வாய்ப்பை நெருக்கி வந்துள்ளேன். அமெரிக்காவில் வந்ததும், திரைப்படம் போன்று கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றேன் என்பது போன்று எதுவும் இல்லை.
மக்கள் பார்வையில் பாரம்பரியம் என்று தோன்றவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் சாதிக்கும், சின்னத்திற்கும், முதலமைச்சர் அல்லது பிரதமர் வேட்பாளருக்கு ஓட்டு இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் யார் வேட்பாளர்களாக நிற்கிறார்கள் என்பதையே முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.
மாநிலக் கட்சிகளிலிருந்து வாரிசுகளும் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் காங்கிரஸிலிருந்து மட்டும் வாரிசுகள் அரசியலுக்கு வருவதாக முத்திரை குத்தப்படுகிறதா?
காங்கிரஸ் கட்சியின் மீது பாஜகதான் இவ்வாறு குறிப்பிட்டு வருகிறது. வாரிசு அரசியல் என்பதன் மீது நம்பிக்கையில்லை. முதல் தேர்தலில் ஒருவர் பாரம்பரியத்தைக் கொண்டு வாக்குகள் பெறலாம். அவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ன செய்கிறார் என்பதைப் பார்த்தே அடுத்து வாய்ப்புகள் வழங்குவார்கள். எனவே எனக்கு அதில் பெரிய அளவில் நம்பிக்கையில்லை.
ராகுல்காந்தி அவர்களின், வியூகங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடையாமல் இருக்கிறதா?
கொரோனா தொற்று பற்றி ராகுல்காந்தி எச்சரித்ததைப் பார்த்து நான் உட்படப் பலரும் ஆச்சரியமடைந்தோம். அவருடைய வியூகங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடையவில்லைதான்.
மோடி தான் மட்டும் பெரிய தலைவர் என்ற விம்பத்தை வைத்துள்ளார். அந்த விம்பம் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், தன்னால் தான் செய்ய முடியும் என்பதை ஆழமாக முன்வைத்து வருகிறார்.
அவரை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. நாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் அமைச்சர்கள் சமூகவலைத்தளங்களில் வந்து பதிலளிப்பார்கள். அப்படி ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இன்னும் நேரம் இருக்கிறது.
பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளுக்குச் சென்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியை நலிவடையச் செய்துள்ளது என்று நினைக்கிறீர்களா?
மற்ற கட்சிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் அது எளிதில் வெளியில் வருகிறது. காங்கிரஸ் கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜோதிமணி அவர்கள் எந்த பின்புலம் இல்லை என்றாலும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்க முக்கிய காரணமாக இருந்தவர், தலைவர் ராகுல் காந்திதான். அவர் எப்போதுமே, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்.
கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எதிர் எதிர் முகம், தமிழ்நாடு, மே.வங்கம் ஒரே கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இருக்கின்றனர். இது மக்கள் வெளியிலிருந்து பார்க்கையில் செயல் முரண்பாடாக இருக்கிறதே?
அந்தந்த மாநிலத்திற்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு, அதன் அடிப்படையிலேயே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதேபோல்தான் கூட்டணியும் அமைகிறது. கேரளாவில் மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சியுள்ளது. அங்கு இரண்டுபேரும் இணைந்து செயல்பட்டால் எதிர்க் கட்சியே இருக்காது. அது அங்குள்ள மக்களுக்கும் நன்றாக இருக்காது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும்.
அடுத்துவர இருக்கும் 7 மாநில தேர்தலில் ஒரு மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. இது மிகவும் கடினமாகச் சூழலாக இருக்க வாய்ப்புள்ளது. மோடி, அமிஷா வியூகங்களை எதிர்க்கக் காங்கிரஸ் என்ன திட்டம் வைத்திருக்கிறது?
இது காங்கிரஸ் தலைமையிடமே கேட்கவேண்டும். பஞ்சாபில் தற்போது நல்ல சூழலிலேயே காங்கிரல் இருக்கிறது. கேப்டன் அமிர்ந்தர சிங் தான் பஞ்சாபில் மிகப்பெரிய தலைவர்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தலைவரை தெரிவு செய்ய வேண்டும். அதை விரைவில் செய்வார்கள். முன்னதாக காங்கிரஸ் பலவீனமாக இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். அந்த மாநிலங்களில் திருமதி.பிரியங்கா காந்தி சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். உத்திரபிரதேஷத்தில் நல்ல வாய்ப்பு இருக்கும். ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு இருந்ததைவிட நல்ல இடத்தை பிடிப்போம்.
உத்திரபிரதேஷத்தில் ஜித்தன் பிரசாத்தை இழந்தது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கலாமா?
ஜித்தன் பிரசாத்து கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிராமண சாதியினரை ஒரு அமைப்பாக இணைத்து ஒரு இடத்தை பிடிக்க நினைத்துள்ளார். அதுவும் கிடைக்கவில்லை. அவர் பாஜகவிற்குச் சென்றிருக்கிறார் என்றால், அங்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துதான். எனவே காங்கிரஸில் பெரிய இழப்பு எதுவும் இல்லை. பாஜகவிற்கு பெரிய லாபம் எதுவும் கிடைப்பதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லை என்ற பார்வை உருவாகியுள்ளதே?
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் வந்ததும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர் வந்ததும், உத்திரபிரதேஷத்தில் ஒரு எழுச்சி எழுந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்..
பொறுப்பு கிடைப்பதில் பிரியங்கா காந்திக்கு வழி எளிதாக்கவும், சச்சின் பைலட் போன்றோருக்கு கடினமானதாகவும் இருந்தது என்ற பார்வை?
பிரியங்கா காந்திக்கு வழி எளிதாக இருந்தாலும், அவருக்கு அந்த அளவு அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஜெயச்சந்திர பிரசாத் மேற்கு வங்கத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அங்குத் தோல்வியைச் சந்தித்தும், கேள்வி கேட்கவில்லையே. இதுவே பிரியங்கா காந்தி பொறுப்பாளராக இருந்து தோல்வியைச் சந்தித்தால் கேள்வி கேட்கப்படும்.
அவருக்குப் பொறுப்பு கொடுக்கப்படும் போது, அதனுடன் எதிர்பார்ப்பும் சேர்த்தே கொடுக்கப்படுகிறது. 100 சதவீதத்திற்கு அதிகமான அழுத்தம் இருக்கும்.
கடந்த 50 ஆண்டுகளில், மாநில அளவில் காங்கிரஸ் தலைவர் உருவாகுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லையா? மூப்பனாராக இருக்கட்டும், திருமுணால் காங்கிரஸாக இருக்கட்டும் இவ்வாறு இந்த பட்டியலில் இன்னும் பலர் உள்ளனர்...?
மூப்பனாருக்கு என்ன வாய்ப்பு கொடுக்கவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர் மனைவி சோனியாகாந்தி, தமிழகம் வந்து மூப்பனாரை அழைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனார்கள். அவரை தமிழகத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதையே செய்தார்கள்.
தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனையாக இருப்பது, கூட்டணிக் கட்சியுடனேயே தேர்தலை எதிர் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைகிறதோ அப்போது தலைவர்கள் இணைவார்கள்.
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகமான அணுகுமுறை இல்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவது? அதேபோல் எமெர்ஜென்சிக்குபின் இதுபோன்ற சூழல் ஏற்படுவது?.
எந்த கட்சியில் இதுபோன்ற சூழல் இல்லை என்று கூறமுடியுமா. இதை எப்படி காங்கிரஸ் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும். ஆம் ஆத்மி கட்சியில் கூட ஜனநாயகம் என்பதே இல்லையே. அக்கட்சியின் முக்கியஸ்தர் விலகும் போது கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டே வெளியேறினார். அதற்கு எமெர்ஜென்சி காரணமாக?. எனக்குத் தெரிந்து தலைவர் ராகுல்காந்தியை விட மிகப்பெரிய ஜனநாயகவாதி என்று யாரும் இல்லை. அவர் தனிப்பட்ட விதத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை, பலரிடம் ஆலோசித்தே முடிவு செய்வார்.
ராகுல்காந்தி, குடும்பத்திலிருந்து தலைவர் வரக்கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டது உள்பட, காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது?
கொரோனா இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. என்னுடைய விருப்பம், தொண்டர்கள் விருப்பம் என்பது தலைவர் ராகுல்காந்தி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் என்ன விரும்புகிறார் என்று தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதா?
காங்கிரஸ் தலைவருக்குக் கண்டிப்பாகத் தேர்தல் நடத்தப்படும். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு கூட தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய சொந்த கருத்து. மாநில தலைவர்களுக்குக் கூட தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதற்கு மாநில மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேசிய கட்சிகள் உணரவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்துவரும் காலங்களில் தமிழக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னென்ன திட்டங்கள் வகுத்துள்ளது?
தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சி ஆட்சியில் உள்ளது. அவர்களுடன் இணைந்து செய்கின்றனர். அடுத்தடுத்த காலங்களில், தேர்தல் நடவடிக்கை பொறுத்து செயல்பாடுகள் இருக்கும். தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் எத்தனைப்பேர் பலனடைந்துள்ளனர். அதில் எப்படி நடைமுறையில் உள்ளது என்பதை நீங்களே பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை இருக்கிறது என்பதை வகுத்தே காங்கிரஸ் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
