'கல்யாண மண்டபத்த புக் பண்ணு, மக்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடு' என்பதுதான் மழை நீர் மேலாண்மை!
சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அரசின் விரிவாக்கத் திட்டங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்துவதாக இருந்தாலும், அது இயற்கை பேரிடரில் சிக்க வைப்பதாகவே மறுபுறம் இருக்கிறது. இவற்றைச் சரி செய்வது எப்படி?
ஏன் சென்னை வெள்ளத்தில் மூழ்குகிறது?. இதை வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மட்டும் விவாதிக்கிறோம். சில ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கும் நிலையில், தற்போது கூட சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்பதுதானே உண்மை. ஒவ்வொரு முறையும், தண்ணீர் ஏற்பட்ட பின் விவாதிப்பதை விட, அதற்கு முன்னரே நாம் பலவற்றைத் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒவ்வொருவரும், 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கிற்குப் பின், இந்த பகுதி தண்ணீர் தேங்குமா?, அப்படித் தேங்கினாலும், நம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடுமா?, என்று சிந்தித்தே வீடு தேடுகிறோம். தண்ணீர் பெருகாத இடத்தில், வாடகை உயர்வு, போன்ற ஒரு வியாபார லாபமும் உள்ளது என்பதை இங்கு மறுக்க முடியவில்லை.
இவற்றை எல்லாம் கடந்து ஆற்றில் ஓடும் நீர், வீட்டில் புகுந்து ஓடுவது சரியா?, இவற்றைத் தடுப்பது யாருடைய கடமை?, இவ்வாறு கேட்கையில், ஆயிரம் பதில்கள் கிடைக்கிறது. ஆனால், அவை நடைமுறைப்படுத்த அரசு முனைப்புடன் இல்லை, அதிகாரிகள் ஆர்வமாக இல்லை, மக்களுக்குக் குரல் கொடுக்க நினைவில் இருப்பதில்லை.
Floating market of #Chennai India. #ChennaiRains #RedAlert #ChennaiRain pic.twitter.com/6gmj9fSutH
— Priyanka Chopra (@Priyank74578673) November 7, 2021
இயற்கையில் நிலம், நீர்ப்பரப்பு, மழை போன்றவை அனைத்தும் மனிதன் இவ்வுலகில் பயணிக்கத் துவங்கும் முன்னரே இருக்கும் பொதுவானவை. மனிதன் எப்போது தோன்றியிருப்பான், நாகரீகம் எப்போது உருவானது என்பதற்குச் சான்றுகள் அதிகம் உள்ளன. அந்த சான்றுகள் அடிப்படையில், நீர் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வழியை மனிதன் நாகரீக வளர்ச்சியால் ஆக்கிரமித்துக் கொண்டதால் மட்டுமே ஒவ்வொரு வெள்ளத்திற்குப் பின்னரும், வீட்டில் பயன்படுத்தி வந்த பொருட்களைக் குப்பையில் தூக்கி வீசிவிட்டு, புதிய பொருட்கள், புதிய பகுதி என்று நீர் வழிகள், நீர்நிலைகளுக்குள் மீண்டும் குடிபுகுகிறோம்.
இவ்வளவு தண்ணீருக்கும் ஒரு மனிதனின் பேராசையல்ல காரணம், ஒட்டுமொத்த அரசு, மக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. எதனால் என்பதன் விரிவான தொகுப்பு
சென்னை தண்ணீரில் மூழ்கக் காரணம்?
1991-ம் ஆண்டு மத்திய அரசும், கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் இணைந்து கடலோரங்களைப் பாதுகாப்பிற்கு வழிமுறையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும், வரை படம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1996-ல் கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்குச் சமர்ப்பித்தது.
வரை படம், சென்னையில் உள்ள அலையாத்தி காடுகள், நீர் நிலைகள், மணல் குன்றுகள் போன்றவற்றை குறிப்பிட்டே வரையப்பட்டிருந்தது. பின்னர் அந்த வரை படம் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

சென்னையில் பெட்ரோகெமிக்கல் பூங்கா அமைப்பதற்காக வரையப்பட்ட பகுதிகள், சென்னையில் பாதுகாக்கப்பட்ட சூழலியல் பகுதியில் வருவதால், அதைக் காணாமல் ஆக்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் 1997-ல் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் மீண்டும் உருவாக்கப்பட்டது. அதில், பெட்ரோகெமிக்கல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்ட பகுதியைத் தவிர்த்து, கலோர பாதுகாப்பு பகுதி வரையப்பட்டுள்ளது.
அதேபோல், எண்ணூர் கழிவெளி பகுதியையும் எந்தவித அனுமதியும் இல்லாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. “ஒட்டுமொத்த வடசென்னைக்கும், கழிவெளி பகுதி பயனாக இருக்கிறது. ஆர்.கே.நகர், திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளிலிருந்து, வெளியேறும் மழை நீர், பக்கிங்காம் கால்வாய் அல்லது கொசஸ்தலை ஆற்றில் வந்து சேரும். பல பகுதிகளிலிருந்து மழை நீர் வருகையில், தண்ணீர் நிற்பதற்கான சரியான பகுதி எண்ணூர் கழிவெளி பகுதி. கழிவெளியை மூடினால், தண்ணீர் முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துவிடும். இத்தகைய மாற்றத்தால், ஏறக்குறைய 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்தா ஜெயராமன்.
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதி அடையாறு ஆற்றிலிருந்து வெளியேறும் நீரைத் தக்க வைப்பதுடன், அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தற்காத்துக்கொள்ள அரணாக இருக்கிறது. இத்தகைய நிலப்பரப்பில் பெருமளவு தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளம் தென் சென்னை மக்களைப் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பலரும் முன்வைக்கின்றனர்.
An aerial view of flood affected areas in Saibaba Nagar, #Pallikaranai????️#ChennaiRain #chennaifloods pic.twitter.com/PhHVZWxpQA
— Rajkumar.S (@PTRajkumar97899) November 8, 2021
இயற்கை ஆர்வலர் யுவன் குறிப்பிடுகையில், “இந்தியாவில், தேசிய சதுப்புநில செயல் திட்டம் என்று ஒன்று உள்ளது. வரைபடத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேலான சிறிய மற்றும் பெரிய ஏரிகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டு மன்னர்கள், போரில் வென்று வந்தால், நீர்நிலைகளைக் கட்டியுள்ளனர். தண்ணீரைத் தேக்கி வைப்பதும், தண்ணீருக்கு வழிவிடுவதும் முக்கியமான செயல்திட்டமாக இருந்தது. நீர் நிலைகளுக்கு மரியாதை இருந்தது. பூண்டி ஏரியும் அவ்வாறே கட்டப்பட்டுள்ளது.
வேளச்சேரி பகுதியைப் பார்த்தால், ஒரு நீச்சல்குளத்தில் உட்கார்ந்துவிட்டு மூழ்கிவிட்டேன் என்று கூற முடியாது. அது தண்ணீர் இருக்க வேண்டிய பகுதி. அடையாறு ஆறு, சுற்றுப்பகுதியிலிருந்த சதுப்புநிலத்தில் தண்ணீர், நிரம்பி வெளியேறுகையில், வேளச்சேரி ஏரிக்கு நீர் வரும். அந்த பகுதியில் கட்டிடங்கள் நிரம்பிவிட்டதால், தண்ணீர் செல்ல வழியே இல்லாமல் போகிறது.
சென்னையில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதும் உண்டு, தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் உண்டு. மண்ணை மண்ணாக விட்டால், அதில் தண்ணீர் சேமிக்கப்படும். அதற்கு வழியில்லாமல் செய்வதுதான், சிமெண்ட் போட்டு அடைப்பது. ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களில் நீரியல் அறிவை பயன்படுத்துவது மிகவும் குறைவு. அடையாறு ஆறு எங்குத் துவங்குகிறது?, அதன் நடுப்பகுதியில் எப்படிப் பயணிக்கிறது? என்பன உள்ளிட்டவை பார்த்துத் தெரிந்து கொள்ளாமல், அலுவலகத்தில் அமர்ந்து என்னென்ன அழகுபடுத்தலாம் என்று செய்தால், நிச்சயம் அது சரியாக அமையாது.
கடந்த ஆட்சியில் மெரினாவிலிருந்து, பெசன்ட் நகரை இணைப்பதற்குக் கடல்வழி சாலையை உருவாக்குவதாக அறிவித்தார்கள். வரலாறு படிக்காமல் இதுபோன்ற திட்டங்கள் செய்தால், 10 வருடத்தில் கடல்வழி சாலையைக் கடலால், அடித்துச் செல்லப்படும். அடையாற்றில் ஏற்கனவே உடைந்த பாலம் ஒன்று நிற்கிறது. அறிவியலோ, வரலாறோ தெரியாமல் அங்குள்ள மக்களுடன் இணைந்து செயலாற்றாமல் இருந்தால், இதுபோன்ற பல சூழல்களைச் சந்திக்க நேரிடும்.
Marina beach today. The rain made no difference of Bay of Bengal #ChennaiRains #MarinaBeach #ChennaiCorporation #Chennai pic.twitter.com/qew5dpxTZA
— srikumar (@srikumarbalaa) November 7, 2021
அடுத்த 10 வருடத்திற்கு அனைவரும் சிரமப்பட வேண்டியதுதான். வேளச்சேரி, பள்ளிக்கரணை இடங்கள் எல்லாம் சதுப்புநிலங்கள் கொண்டவை. அந்த சதுப்புநிலங்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நகரமயமாக்கலில், இதை நிரப்பினால் பிரச்சனையிலிருந்து நாம் பல வருடங்கள் கழித்து மீளலாம்.
இதற்கான தீர்வு என்பது, சென்னையில் 80 சதவீத மக்களுக்கு எத்தனை ஆறு ஓடுகிறது என்பதே தெரியவில்லை. பெரும்பாலான பேருக்கு, சதுப்புநிலம் பற்றித் தெரியாது. சென்னையின் நில அமைப்பு பற்றித் தெரியவில்லை. இவைபற்றிய ஆழமான புரிதல் இருந்தால், விரைவில் தீர்வை உருவாக்கலாம்” என்கிறார் யுவன்.
இந்நிலையில், நேற்று (08.11.2021) 'சென்னை வெள்ளமும் நம் படிப்பினையும்' என்ற தலைப்பில் டிவிட்டர் ஸ்பேஸ் விவாதம் நடைபெற்றது இதில் பேசிய, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், “சென்னை போன்ற அற்புதமான நகரம் இல்லை என்றே சொல்லலாம். சென்னைக்கு என்று நான்கு நதிகள் உள்ளன. இந்த நான்கு நதிகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் நமக்கு உள்ளது. இதைத் தவிர 50 பெரிய கால்வாய்கள் நமக்கு உள்ளன. 542 சிறிய ஓடைகள் சென்னையில் உள்ளன. இரண்டு மிகப்பெரிய சதுப்புநிலங்கள் கூடுதல் பலமாக இருக்கிறது.
மழை பெய்யும் போது சிறிய ஓடை தண்ணீர் பெரிய ஓடைக்குக் கொண்டு செல்லும். பெரிய ஓடை தண்ணீர், நதிக்குக்கொண்டு செல்லும், நதி கடலில் கொண்டு சேர்க்கும். இதுவே சென்னையில் இயற்கையில் தண்ணீர் வடியும் முறையாக செயல்படுகிறது.
எல்லோரும் வைக்கும் வலுவான கருத்து என்பது, 2015-ல் அதிகப்படியான மழை பெய்யக் காலநிலை மாற்றம் காரணம் என்று கூறுகிறீர்கள். அவ்வாறு என்றால் 2005, 1973, 1935லும் இதுபோன்ற மழை பெய்தது. அப்படி என்றால், அதுவும் காலநிலை மாற்றத்தால் பெய்தது தானா? என்று கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து தீவிர நிகழ்வுகளும் பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றம் என்பது, இதுபோன்ற தீவிர நிகழ்வுகள் ஏற்படும் இடைவெளியைக் குறைக்கிறது.
7-ம் தேதி இரவு சென்னையில் துவங்கிய மழையில், நேற்று காலை வரை நுங்கம்பாக்கத்தில் 23 செ.மீட்டரும், மாலை வரை 29 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது. ஒரு இடத்தில் 24 மணி நேரத்திற்கு 20 செ.மீட்டரை விட அதிமாக மழை பெய்தாலே, அது தீவிர மழை பொழிவு என்று உலகின் காலநிலை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு முன் அதி தீவிர மழை பெய்தபோது ஏன் இவ்வளவு வெள்ளம் தேங்கவில்லை என்று கேட்கலாம். அப்போது, நீர்நிலைகள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தது. சென்னையில் வில்லிவாக்கம் துவங்கி, மாம்பலம் வரை நீண்ட LONG TANK என்ற ஏரி இருந்தது. இன்று, அதை முழுவதும் ஆக்கிரமித்து சேத்துப்பட்டு ஏரியாகச் சுருங்கியுள்ளது. நாம் அனைத்து, இயற்கை அமைப்பையும் மாற்றி அமைத்துள்ளோம். ஆற்றின் கரையோரத்தில் ஆற்று நீர் படுகை இருக்கும். அப்பகுதி என்பது, அதிகபடியான வெள்ளம் ஏற்படுகையில், கண்டறிய முடியும். ஆற்று நீர் படுகையில் எந்த கட்டிடமும், ஆக்கிரமிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ள வடிகால் பகுதி பல ஆண்டுகள் பயன்படாமல் இருக்கலாம். திடீரென்று ஒரு வருடத்தில் மழை பெய்யும் போது, அப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் வெள்ளம் ஆற்றில் கடந்து செல்லும், நாம் என்ன செய்திருக்கிறோம் என்றால், அம்பா ஸ்கைவாக் கூவம் ஆற்று நீர் படுகையில் கட்டியுள்ளோம். மியாட் மருத்துவமனையின் மதில் சுவர், அடையாறு ஆற்றின் நீர் படுகையில் கட்டப்பட்டுள்ளது. எனவேதான் 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் சுவர் இடிந்துவிழுந்தது. சென்னை விமானநிலையத்தின் இரண்டாவது ஓடுதளம் அடையாறு ஆற்றுக்குள் 400 மீட்டர் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. எனவேதான் முடிச்சூர் மூழ்கிப்போய்விட்டது.
பழவேற்காடு சதுப்புநிலம் மிக முக்கியமான பகுதி. ஆரணியாறு, கொசஸ்தலை ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் ஒரே நேரத்தில் கடலுக்குச் செல்ல முடியும். ஆனால் 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது, 50 ஆயிரம் கன அடி நீர் கூட கடலுக்குச் செல்ல முடியவில்லை. காரணம், எண்ணூர் அனல்மின் நிலையமும், காமராஜர் துறைமுகம் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
வெள்ளச்சேரி என்றே வேளச்சேரியைச் சொல்வோம், பள்ளிகர்ணை சதுப்புநிலம் அவ்வளவு தண்ணீரை உறிஞ்சும் பஞ்சு போன்று இருக்கும். எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும். இயற்கையாகத் தண்ணீர் வடிந்து செல்லும், வழி நமக்கு இருந்தது. அதை நாம் முழுவதும் அழித்துவிட்டு மழை நீர் வடிகால் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
சென்னைக்கு என்று elevation map நம்மிடம் இல்லை. அது இருந்தால்தான், எந்த இடம் தாழ்வானது, எந்த பகுதி உயரமானது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல், தண்ணீர் வடிகால் அமைக்க முடியும்.
அரசுகளுக்குப் பேரிடர் மேலாண்மையைப் பற்றித் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். 'கல்யாண மண்டபத்தை புக் பண்ணு, மக்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடு' இது மட்டுமே. 2015-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு என்று அறிவித்த அரசுதான், 2016- ஏப்ரலில் வரலாறு காணாத வறட்சி என்று சொன்னார்கள். 6 மாதத்தில் எப்படி வரலாறு காணாத வறட்சி ஏற்படும். 2015-ம் ஆண்டு டிசம்பர் 1லிருந்து 3 வரைக்கும், சென்னையில் ஆறுகள் வழியாக 300 டி.எம்.சி நீர் கடலுக்கு வீணாகச் சென்றுள்ளது. அதைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு சதுப்புநிலத்திற்கும், நீர் நிலைக்கும் வித்தியாசம் தெரியாத அரசாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் சதுப்புநிலத்தை ஆளப்படுத்தி தண்ணீர் சேமிப்பதாக அறிவித்தனர். 15 ஹெக்டேர் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது வெறும் 600 ஏக்கர் மட்டுமே உள்ளது. இதன் தேவைகள் பற்றி அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவே இல்லை.
தற்போது கடல்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடல்நீர் உள்ளே புகுந்துவிடும். சென்னையில் பல தீவுகள் உருமாறிவிடும். தாழ்வான பகுதிகள் நிரந்தரமாகத் தண்ணீர் இருக்கும் பகுதியாக மாறிவிடும்” என்றார்.
சென்னையில், மழை பெய்யும் அளவு சற்று குறைந்தாலும், தண்ணீர் முழுவதும் வடிந்துவிடவில்லை. தொடர்ந்து, தேங்கியே இருக்கிறது. பல இடங்களில் தண்ணீரை இயந்திரம் கொண்டு உறிஞ்சி, வேறு பகுதியில் வெளியேற்றினாலும், சரியான தீர்வாக அது இருப்பதில்லை.
குறிப்பாக வேளச்சேரி பகுதியில் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது பற்றிய ஒரு புகைப்படம் தற்போது அதிக அளவில் வைரலாகிறது. அதில், நாம் சென்னையில் எவ்வளவு தூரம் ஆக்கிரமித்து, வழிவிடாமல் இருக்கிறோம் என்பது புரிந்துகொள்ள முடியும்.
An eri is an irrigation tank. Tanks don't flood during rains. They fill up. If you build your home inside a lake, your home will fill up -- not flood. Water doesn't care for CMDA approvals. #ChennaiRains pic.twitter.com/Z2Sl6xw1ug
— NityanandJayaraman (@NityJayaraman) November 8, 2021
மற்றொரு முக்கிய விஷயம் என்பது, மழை நீர் மேலாண்மை அமைப்பு சென்னையில், சரிவரக் கையாளப்படவில்லை. இதுவும், பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது. சில பகுதிகளில், ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேலாண்மை அமைப்பு சிறப்பாக இருப்பதையும், அதன்பின் கட்டப்பட்ட பல கட்டுமானங்கள், பயன்படுத்த முடியாத வகையில், சேதமடைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

Related Stories
அச்சமூட்டும் கனமழை - சென்னையில் மீண்டும் வெள்ளம் வருமா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏழை மக்களின் நிலை என்ன? மேல்தட்டு மக்களை மட்டும் கருத்தில்கொள்கிறதா அரசு?
எந்தெந்த பகுதிகளில் மழை? சென்னையின் நிலவரம்?
அதி தீவிர மழையில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறோம்! என்ன காரணம்?