துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப்பதக்கம்
இந்தியா இப்போது வரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில் 39 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் ராஹி. உலக சாதனையை சமன் செய்வதில் இருந்து ஒரு புள்ளி மட்டுமே குறைவு. வெள்ளிப் பதக்கம் வென்றவரை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்றார் ராஹி சர்னோபத்.
குரோஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கம் இதுவாகும். இந்தியா இப்போது வரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
மற்றொரு இந்திய போட்டியாளர் மனு பேக்கர் இறுதிப்போட்டியில் இருந்தார். ஆனால் அவர் 11 புள்ளிகளை மட்டுமே எடுத்ததால் 7 ஆவது இடத்தைப் பிடித்தார். மனு பேக்கர் ஏற்கனவே 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், பெண்கள் ஏர் பிஸ்டல் அணியுடன் வெண்கலத்தையும் வென்றுள்ளார்.
