சீமைக் கருவேலம் : பேய் மரமா? எப்படி பிரச்சனைக்குரிய மரமானது?
“சீமைக் கருவேலம் மரம் அயல் தாவரம் தான், ஆனால் பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அது நல்ல தாவரம்தான். வீடுகளில் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, சீமைக் கருவேலம் மரத்தின் பயன்பாடு குறைந்துவிட்டது” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுப்பையா பாரதிதாசன்
ஒரு மனிதன் தனியாக வெளிநாட்டில் சென்று வேலை செய்தால், அவன் விரைவில் நாடு திரும்பிவிடுவான். ஆனால் ஒரு குழுவாகச் சென்றால், சில காலத்திற்குப் பின் அந்நாட்டிலேயே தங்கிவிடலாம், அங்குள்ள பகுதிகளில் தங்கள் மக்களைக் குடியமர்த்தலாம், அனைத்தையும் உரிமை கொண்டாடலாம் என்ற எண்ணம் தோன்றும் (ஆங்கிலேயர்கள் இந்தியா வருகையையும் இதில் சேர்க்கலாம்). அவ்வாறுதான் புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா என்னும் வளம் தின்னும் தாவரங்களும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, முதலில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், அதிக அளவில் விதைக்கப்பட்ட பின்... 'நரிக்கு கிடக்க இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு பிடிக்கும்' என்ற சொல்போல, தற்போது வளங்களைக் கொள்ளையடிக்கின்றன, என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து.
பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் இருந்தாலும் புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis juliflora) மரம் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நிலத்தடி நீர் வளங்கள், விலங்கினங்கள், தாவரங்கள், விவசாயம் என்று அனைத்திற்கும் சேதம் விளைவித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா மரம் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட புரோசோபிஸ் ஜூலிஃப்ளோராவை நம் ஊர்களில் சீமை கருவேலம் மரம் என்று அழைக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆனதால் இது சீமைக் கருவேலம் மரம் என்று பெயர் பெற்றது. தமிழகத்தில் கருவேலம் மரம் என்று வேறொரு தாவரமும் உள்ளது.
அயல் தாவரமான சீமை கருவேலம் மரம், இயல் தாவரங்களை வளர்வதைத் தடை செய்கிறது (அயல் தாவரம் என்பது வெளியூர்களிலிருந்து கொண்டுவரப்பட்டது, கட்டாயப்படுத்தி வளர்க்கப்படுவது. இயல் தாவரம் என்பது அந்தந்த ஊர்களின் மண், காலநிலைக்கு ஏற்றபடி தானாக வளர்வது).

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வறட்சி ஏற்பட்டு, மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர்களின் வீடுகளில் விறகு எரிப்பதற்காக 1876-ம் ஆண்டில் சீமைக் கருவேலம் மரம் நம் ஊர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முதலில் கடப்பாவில் உள்ள கமலாபுரம் தாலுக்காவில் தான் சீமைக் கருவேலம் மரத்தின் விதைகள் விதைக்கப்பட்டன.
ஜோத்பூர் சமஸ்தானத்தில் மாநில மரமாகவே சீமைக் கருவேலம் மரம் அப்போதைய நாட்களில் அங்கீகரிக்கப்பட்டது. உத்திரபிரதேஷம், பஞ்சாப், மத்தியபிரதேஷம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு வேரூன்றத் துவங்கியது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், காமராசர் ஆட்சிக்காலத்தில் சீமைக் கருவேலம் மரம் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பேசப்படுவதுண்டு, ஆனால் அப்போதைய வேளாண்துறை இயக்குனரால் தரிசு நில மேம்பாட்டிற்காகப் பெருமளவில் விதைக்கப்பட்டுள்ளது. காலம் செல்ல செல்லத்தான் அதன் அருமை பெருமைகளை மக்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்துள்ளனர். எனவே இதை தமிழக கிராமபுறங்களில் பேய் மரம் என்று அழைக்க துவங்கினர்.
சீமைக் கருவேலம் என்ற மரம் பற்றி எழுத்தாளர் ப.அருண்குமார் தனது புத்தகத்தில், “நாம் வாழும் சூழலைப் பற்றிய கரிசனம் இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வாதாரங்களாகிய நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுத்தப்படுவதைச் சுரண்டுவதையும் எந்தவொரு கவலையுமின்றிக் கடந்து செல்லும் மனப்போக்கு நம்மிடையே வேரூன்றிவிட்டது.
சூழல் சிக்கல்களைக் குறித்து கவலை கொள்ளாத தமிழகத்து அரசியல் கட்சிகள் கூட, நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சீமைக்கருவேல மரங்களை வேரறுப்போம் என்று குரலெழுப்புவது சீமைக்கருவேலம் என்னும் முற்றுகைத் தாவரம் பற்றிய விழிப்புணர்வு மெல்ல வளர்வதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு ஆய்வின்படி, தமிழகத்தில் உள்ள 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்களைச் சீமைக் கருவேலம் மரம் ஆக்கிரமித்துள்ளது. மரத்தின் இலைகள் சிறியதாகவும், கிளைகளில் முட்களும் காணப்படுகிறது. 12 அடிக்கு மேல் உயரமாகவும், அதிக கிளைகளுடனும் வளரும். இதில் மஞ்சள் நிறத்தில் மலர்கள் இருக்கும். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் நீங்கள் வெட்டி முழுமையாக அகற்றினாலும், வேர்கள் 175 அடி ஆழத்தில் வளருவதால், அதன் மூலம் எளிதில் புதிய தாவரத்தைத் தோற்றுவிக்கின்றன.
சீமைக் கருவேலம் மரத்தால் ஏற்படும் பாதிப்புகள்?
முதலில் 2014-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் தலைமையில் நடந்த ஆய்வை பற்றி நான் குறிப்பிட வேண்டும். வெட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், பறவைகள் சரணாலயம் முழுக்க புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (சீமைக் கருவேலம்) மற்றும் அகாசியா நிலோடிக்கா வகை தாவரங்கள் அதிக அளவில் காணப்பட்டது. இந்த இரண்டு வகை மரங்களிலும் அதிக அளவில் பறவைகளின் கூடுகள் காணப்பட்டது. ஆனால் புரோசோபிஸ் ஜூலிஃப்ளோராவில் 2.82 சதவீதமும், அகாசியா நிலோடிக்காவிலிருந்து 1.47 சதவீதமும் முட்டைகள் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
ஆய்விற்குப் பின் ஊடகங்களுக்குப் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் அளித்த பேட்டியில், 'பறவைகளை அறிமுகமில்லாத மண்டலத்தை நோக்கி, புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா இழுக்கிறது. பறவைகளுக்கு போதுமான வசதிகள் இருப்பதில்லை. எனவே பறவைகள் வெளியில் வரும் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தடி நீர் பாதிப்பு பற்றிப் பல இடங்களில், பலர் குறிப்பிட்டுள்ளனர். சீமைக் கருவேலம் மரத்தின் நீளமான வேர்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வளங்கள் மொத்தமாக கைக்குள் கொள்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாகக் கூறவேண்டும் என்றால், எத்தியோப்பியா நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், “எத்தியோப்பியாவின் அவஸ்த் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வறண்ட நிலப்பரப்பில் உள்ள சுமார் 3.1 முதல் 3.3 பில்லியன் கன மீட்டர் தண்ணீரைச் சீமைக் கருவேலம் மரங்களில் உறிஞ்சுகிறது. ஒரு மரம் நாள் ஒன்றுக்கு 1 லிட்டரிலிருந்து 36 லிட்டர் வரையிலான தண்ணீரை எடுத்துக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜூன் மாதம் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் புற்களின் அளவு குறைவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதில், 54 விழுக்காடு புற்கள் காலநிலை மாற்றம் மற்றும் சீமைக் கருவேலம் மரங்களால் அழிவதாகவும், எனவே புற்களை உண்டுவாழும் விலங்கினங்கள் உணவு பற்றாக்குறையை சந்திக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது.

ஜூன் 8-ம் தேதி கடல் தினத்தை அடுத்து, ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் சென்னையைச் சுற்றியுள்ள, தமிழக வட மாவட்ட கடற்கரைகளில் சீமை கருவேல மரத்தின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், கடலில் உள்ள பல வகை உயிரினங்களின் அழிவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆய்வில் இடம்பெற்றிருந்த இந்த தகவல்பற்றி, இயற்கை ஆர்வலர் யுவன் அவர்களிடம் பேசியிருந்தேன். அவர், “இந்த தாவரத்தை வேலிக்காத்தான் என்றும் குறிப்பிடுவர். மேற்குத் தொடர்ச்சி மலையில், புலிக்கும் மனிதனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் சீமைக் கருவேலம் மரத்தின் பங்கு அதிகம். சீமைக் கருவேலம் மரம், நிலத்தடி நீரிலும், உப்பு நீரிலும் நன்றாகவே வளர்கிறது. உப்பு நீரில் அதிகமாக வளர்வது அலையாத்தி காடுகள்தான். இந்த அலையாத்தி காடுகளின் வளர்ச்சியைத் தடை செய்வதில் சீமை கருவேலம் மரத்தின் பங்கும் உள்ளது. அலையாத்தி காடுகள் வட தமிழகத்தில் பெருமளவில் கடல் அரிப்பைத் தடுக்கிறது. சீமைக் கருவேலம் மரத்திற்கு அந்த திறன் இல்லை.
மீன், நண்டு, இறால் போன்றவை இனப்பெருக்கம் செய்வது அலையாத்தி காடுகளில் தான். அவ்வாறு மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாகச் சீமைக் கருவேலம் மரம் உருவெடுத்துள்ளது. பழவேற்காடு பகுதிகளில் பறவைகள் வருவதையும் சீமைக் கருவேலம் மரம் பாதிப்படையச் செய்துள்ளது.

கடலில் உள்ள உப்பு நீரை மணல்மேடுகள் மற்றும், அலையாத்தி காடுகள் சுத்தம் செய்யும் திறன் கொண்டுள்ளது. உப்புத்தண்ணீரில் வாழும் திறனை மட்டுமே சீமைக் கருவேலம் மரங்களுக்கு இருக்கிறது. வட தமிழகம் என்று கணக்கிடும்போது அனைத்து அலையாத்தி காடுகளையும் சீமைக் கருவேலம் மரங்கள் பாதிப்படையச் செய்கின்றன. இதைத் தடுக்க சரியான நடவடிக்கை எதுவுமே இல்லை. 2008-ல் வேடந்தாங்கலைப் பாதுகாக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. வேடந்தாங்கலில் இருக்கும் முக்கிய மரம், கடம்ப மரம். கடம்ப மரத்தைப் பாதிப்படையச் செய்வது சீமைக் கருவேலம் மரங்கள். இதை வெட்டி அகற்றி கடம்ப மரத்தை வளர்க்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை” என்று குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கல்லூரி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், “கருவேலம் மரத்தின் முள்ளால் ஏற்படும் காயம் என்பது அவ்வளவு எளிதில் குணமாக்க முடியாது. விறகாக எரிக்கும் போது கூட, தோலில் அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது” என்று தெரியவந்தது. உள்ளூர்களில் மேற்கொள்ளப்படும் ஒரு சிறிய ஆய்வின் முடிவில், “சீமைக் கருவேலம் மரத்தின் விதைகள் அதில் இருக்கும் சர்க்கரையின் அளவு காரணமாகச் செரிமானமாகுவதில் பிரச்சனை ஏற்படுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆய்வுகளின் தரவுகள், சீமைக் கருவேலம் மரம் பற்றிய பேச்சுகள், உள்ளிட்டவை பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன் ராஜ் அவர்களிடம் கேட்டபோது, “சீமைக் கருவேலம் பற்றி முறையான ஆய்வுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. சீமைக் கருவேலம் மரத்தினால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறதா என்பது சரியான தகவல் இல்லாமல் சொல்லப்படுவதுதான். சீமைக் கருவேலம் மரம் நிற்கும் இடத்திற்குக் கீழ் மற்ற தாவரங்கள் எதுவும் வளரவிடாது. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிப்படையச் செய்யும்.
சில தாவரங்களும், சில உயிரினங்களும் அதனுடன் சேர்ந்திருக்கப் பழகிவிட்டன. இதை வனத்துறைதான் ஒரு காலத்தில் பரப்பியது. அந்நாட்களில், வனத்திலிருந்து அதிக அளவில் மரங்கள் வெட்டி பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். எனவே வனங்கள் அழிகிறது என்ற காரணத்தால், மக்களின் விறகுகள் தேவைக்காகக் கொண்டுவரப்பட்டது. பிற்காலத்தில் அதுவே மிகப்பெரிய சிக்கல்களில் முடியும் என்று தெரியவில்லை. அந்நாட்களில் அறிவியல்பூர்வமான தகவல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு.

இது ஒரு சிலபேருக்கு வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளது. விறகு பயன்பாடு தொழிற்சாலைகளிலிருந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக நீலகிரியில் தேயிலை தொழிலில் சீமைக் கருவேலம் மரத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. மலைப் பிரதேசமான நீலகிரிக்கே விறகுகள் கீழிருந்துதான் செல்கின்றன. செங்கல் சூளை உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சீமைக் கருவேலம் மரங்கள் இருக்கின்றன. அதை அங்கு வரும் யானைகள் உண்ணுவது உண்மைதான். அதனால் யானைகள் இறக்கிறதா என்றால், அதற்கு முறையான ஆய்வுகள் எதுவும் இல்லை. விலங்கு இறந்தால், பிரேதப் பரிசோதனை செய்யும் போது வயிற்றில் இந்த காய் இருக்கும் சூழலில், இதுபோன்ற தகவல்கள் கூறுகின்றன.
சீமைக் கருவேலம் மரத்தை முழுவதும் அழிக்க ஓராண்டு திட்டத்திலோ, ஐந்தாண்டு திட்டத்திலோ சாத்தியம் இல்லை. இதற்குப் பல ஆண்டுகள் திட்டம் தேவை. மரத்தை அகற்றினாலும், அதற்கு மாற்றுத் தாவரங்கள் ஏதேனும் நடவு செய்யவும் வேண்டும். விதைகள் பல ஆண்டுகள் நிலத்திற்கு அடியில் இருக்கும், சூழல் சரியாக வந்ததும் முளைக்கத் துவங்கும். எனவே எப்போது முளைக்கும் என்று சொல்ல முடியாது. எது மிகவும் முக்கியமான நிலங்கள் என்று கண்காணித்து அந்த இடத்தில் இதைத் தடுக்க வேண்டும். முதலில், வனம் அடுத்து விளைநிலங்கள் போன்றவை கண்காணிக்க வேண்டும். அனைத்து துறையும் ஒன்றிணைந்தால்தான் அதைச் செய்து முடிக்க முடியும்.
நீரின் தன்மை எப்படி இருந்தாலும், சீமைக் கருவேலம் வளர்கிறது. 10 நாட்களிற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்திலும் இந்த மரத்தால் வாழ முடிவதில்லை. நீர் நிலைகளில் தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டால் மட்டுமே வளரும்” என்று தெரிவித்தார்.
இவ்வளவு நேரம் எழுதப்பட்ட கருத்துகள் அனைத்திற்கும் மாற்றுக் கோணத்தை முன்வைக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், அருளகம் அமைப்பின் இணை நிறுவனரான சுப்பையா பாரதிதாசன், “சீமைக் கருவேலம் மரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிவிட்டு நாட்டுக் கருவேலம் மரம், வெள்வேல் மரங்களை விவரம் தெரியாமல் வெட்டி விடுகின்றனர். இது மிகப்பெரிய தவறும், இவ்வாறு அனைத்து முள் தாவரங்களையும் அழித்துவிட்டால், பல்லுயிர்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
சிற்சிறிய பொறி விலங்குகளுக்குச் சீமைக் கருவேலம் மரங்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறது. சீமைக் கருவேலம் மரத்தை மொத்தமாக அழித்துவிட்டால், சிறிய விலங்குகள் அனைத்தும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும்.
சீமைக் கருவேலம் மரம் அயல் தாவரம் தான், ஆனால் பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அது நல்ல தாவரம்தான். வீடுகளில் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, சீமைக் கருவேலம் மரத்தின் பயன்பாடு குறைந்துவிட்டது. எனவேதான் இது பிரச்சனைக்கு உரிய மரமாக மாறிவிட்டது. முதலில், இதன் பரவல் கட்டுப்பாட்டுடன்தான் இருந்தது. மரத்தை மேலோட்டமாக வெட்டிவிட்டுச் செல்வதால் எந்த பயனும் இல்லை.

எறும்புகளிலிருந்து, யானைகள்வரை சீமைக் கருவேலம் மரத்தின் விதைகளைச் சுவைக்கின்றன. தேனீக்கள் தேன் எடுக்கச் சீமைக் கருவேலம் மரத்தின் பூக்களைத் தேடி வருகின்றன. சில மாவட்டங்களில், இது மிக முக்கியமான வாழ்வாதாரமாகவே இருக்கிறது. எனவே மொத்தமாக அழித்துவிட முடியாது. சில திட்டங்கள் போட்டு அதை அழித்தால், அதற்கு மாற்றாக என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
சீமை கருவேலம் மரம் நிற்கும் இடம் எதற்கு உதவாது என்று எல்லாம் கிடையாது. இது யூக்லிப்டிஸ் மரம், சவுக்கு மரம் போன்றவற்றுக்கே பொருந்தும். அதன் இலைகள் மற்ற தாவரங்களை வளர விடாமல் தடுக்கும். நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, ஆலமரமே மற்றொரு மரத்தை வளரவிடுவதில்லை. அதன் இலைகளிலிருந்து வெளியேறும் அமிலம் மற்ற தாவரங்களைக் கட்டுப்படுத்தும். அதேபோல் அதிக அளவில் பரவி இருக்கும் விழுதுகளும் மற்ற தாவரங்களை வளர அனுமதிப்பதில்லை. எல்லா உயிரினங்களும் தனக்கான வாழ்வைப் பதித்துக்கொண்டே இருக்கிறது. இதை ஒரு பெரிய விஷயமாகக் கூறுவதில் எந்த பயனும் இல்லை.

ஒரு மரம் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று குறைகூறுகிறீர்களே. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீரை உறிஞ்சி வீணடிக்கிறான். ஒருமரம் மட்டும் தனக்குத் தேவையான தண்ணீரை எடுக்கையில் எப்படிக் குறை கூற தோன்றுகிறது. சீமைக் கருவேலம் மரத்தின் வேர்கள், 200 மீட்டர் 300 மீட்டர் வரை சென்று தண்ணீரை எடுத்து ஆவியாக்கி மேலேதான் அனுப்புகிறது. நாம், தண்ணீரைப் பயன்படுத்த முடியாத அளவு மாற்றிவிடுகின்றோம்.
சீமைக் கருவேலம் மரத்தைக் கொண்டு, மரவேலைகள் அழகாகச் செய்யலாம். நாம் பயன்படுத்துவதில்லை. மரத்தைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அதைப் பயன்படுத்தவும் முடியும்” என்றார் அழுத்தமாக.
