10% தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை - அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவு
கொரோனா தொற்றுக்கு முன்பே தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குறைவான சம்பளமே பெற்றனர். இந்த 194 பேராசிரியர்களில், 134 பேர் பிஎச்டி முடித்தவர்கள் அல்லது NET, SET தேர்வுகளில் வென்றவர்கள் ஆவர். இவர்களில் 72% பேர் மாத சம்பளமாக ரூ.25,000க்கும் கீழ் பெற்றுள்ளனர். 5.1% பேர் ரூ.10,000க்கும் கீழ் பெற்றுள்ளனர். ஏழாவது ஊதியக்குழு நுழைவு நிலை உதவி பேராசிரியருக்கு மாத சம்பளம் ரூ. 76,809 நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது
சென்னை லயோலா கல்லூரியில், தொழிற்கல்வி இயக்குநராக உள்ள அருண் கண்ணன் மற்றும் அமெரிக்காவின் அம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பி.எச்.டி பயின்று வரும், கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் ஆகியோர் இணைந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்களிடம் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அவர்கள் எந்த அளவிற்குப் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டனர் என்பது அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவைக் கொண்டு அவர்கள் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாறு:
'கொரோனா பாதிப்பானது, உலகம் முழுவதுமுள்ள எல்லா துறைகளிலும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கல்வித்துறை மட்டும் விதிவிலக்கல்ல. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டன. பெரும்பான்மையான தனியார் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து முழு கல்விக்கட்டணத்தையும் பெற்றுவிடுகின்றன. தனியார் கல்லூரிகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை, அதனால் தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்களின் வாழ்வாதாரம் பற்றி அப்படிக்கூற முடியாது. இந்த ஆன்லைன் கல்வியானது, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பெரிதாக எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. கொரோனா காரணமாகத் தனியார் கல்லூரிகளில் பணி நீக்கம் மற்றும் ஊதியக்குறைப்புக்கு உள்ளான பேராசிரியர்கள் தங்கள் குடும்பத்தைக் காக்க வேறு ஒரு வேலையைச் செய்வதற்கான கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பனையேறும் தொழில் செய்யப் போய், மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததுதான், எங்களை இது குறித்துச் சிந்திக்கச் செய்தது. தனியார் கல்லூரிகளில் வேலை பார்க்கும் 194 பேராசிரியர்களிடம், ஜூன் 13 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில், நாங்கள் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினோம்.
கருத்துக்கணிப்பும் அதன் முடிவுகளும்:
இந்த ஆய்வில் நாங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால், கொரோனா தொற்றுக்கு முன்பே தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குறைவான சம்பளமே பெற்றனர். இந்த 194 பேராசிரியர்களில், 134 பேர் பிஎச்டி முடித்தவர்கள் அல்லது NET, SET தேர்வுகளில் வென்றவர்கள் ஆவர். இவர்களில் 72% பேர் மாத சம்பளமாக ரூ.25,000க்கும் கீழ் பெற்றுள்ளனர். 5.1% பேர் ரூ.10,000க்கும் கீழ் பெற்றுள்ளனர். ஏழாவது ஊதியக்குழு நுழைவு நிலை உதவி பேராசிரியருக்கு மாத சம்பளம் ரூ. 76,809 நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது..
இந்த ஆய்வில் நாங்கள் தெரிந்து கொண்டவை 38% உதவி பேராசிரியர்கள் மட்டுமே அரசு காப்பீடு வைத்திருப்பதையும் மற்றும் 42% உதவி பேராசிரியர்கள் மட்டுமே ஊதிய விடுப்பு வைத்திருப்பதைக் கண்டறிந்தோம். தகுதி வாய்ந்த 137 பேராசிரியர்களில், 52 பேர், 10 வருடங்களுக்கும் மேலான, ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள், அவர்களில் வெறும் 17 பேர் மட்டுமே ரூ.25,000க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர். தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் இந்த நிலைக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த ஒழுங்குமுறையையும் பின்பற்றாததே காரணமாகும்.
புதிய தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றி, இந்திய அரசு உயர்கல்வியை வழங்குவதிலிருந்து விலகியுள்ளது. இதன் விளைவாகத் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE), 2020 அறிக்கையின்படி, அகில இந்திய மட்டத்தில் மொத்தம் 39,995 கல்லூரிகளில் 26054 தனியார் உதவி பெறாத கல்லூரிகளும் 5,336 தனியார் உதவி கல்லூரிகளும் உள்ளன. 1980களின் முற்பகுதியில் உயர்கல்வியை தனியார்மயமாக்கிய சில மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். மாநிலத்தில் உள்ள 2608 கல்லூரிகளில் 2000 அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளும், 251 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளும் ஆகும். உயர்கல்வியில் அதிகமான இலாபத்தைப் பெறும் தனியார் - உதவி பெறாத கல்லூரிகளின் ஆதிக்கத்தை இது காட்டுகிறது. ‘கல்வித் தொழில் முனைவோர்’ என்று அழைக்கப்படுபவர்கள் அதிக லாபம் பெற, இந்த கல்லூரிகளின் பேராசிரியர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
ஆன்லைன் கல்வியின் சுமை
தனியார் - உதவி பெறாத கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் மூலம் கற்பிப்பதில் அவர்கள் பட்ட சிரமங்கள் கவனம் பெறவில்லை.எங்கள் கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 88% பேர் ஆன்லைன் கற்பித்தலில் அவர்கள் சந்தித்த சிரமத்திற்கு காரணங்களாகும், இணையம் இல்லாமை, அறை/இடம் இல்லாமை, மற்றும் தரமான உபகரணங்கள் இல்லாமை போன்ற காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் குறிப்பிட்டனர். இந்த பதிலளித்தவர்களில், 40 பேருக்குச் சமையலறை மற்றும் ஹால் தவிர ஒரு கூடுதல் அறை மட்டுமே இருந்தது. 87 பேருக்குச் சமையலறை மற்றும் ஹால்லை தவிர இரண்டு அறைகள் இருந்தன என்பதைத் தெரிவித்தனர். மேலும், பதிலளித்த ஒவ்வொருவரும், இணைய சேவையை வாங்குவதற்கான செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. கணக்கெடுக்கப்பட்ட 194 ஆசிரியர்களில், 132 பேர், ஒரு தொலைபேசி, கம்ப்யூட்டர், ஹெட்போன் ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை வாங்குவதற்குச் செலவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், 73 பேர் தொற்றுநோய்களின் போது வேலை நேரம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பதிலளித்தவர்களில் 107 பேர் ஆன்லைன் கற்பித்தல் பணியுடன் இணைக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், அதிக மன உளைச்சலை அனுபவிப்பதாகத் தெரிவித்தனர். இந்த தொற்றுநோய்களின் போது, ஆன்லைன் கல்வியை வழங்க இந்த ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பண ரீதியாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை இவை காட்டுகின்றன. தனியார்-உதவி பெறாத கல்லூரி ஆசிரியர்கள் நன்றாக உழைத்தபோதும் , கல்லூரி நிர்வாகத்தால் அவர்களுக்கு போதுமான வெகுமதி கிடைக்கவில்லை. மாறாக, இந்த தொற்றுநோய் பரவலின் போது கடுமையான ஊதிய குறைப்பு நடவடிக்கைகளால் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஊதிய குறைப்பு செய்யப்பட்வர்கள், பலரைக் கூடுதல் வேலைகளில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளன கல்லூரி நிர்வாகங்கள். எங்களுக்குப் பதிலளித்தவர்களில், தங்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க, 26 பேர் கடன் வாங்க வேண்டும் என்றும், 37 பேர் கூடுதலாக அல்லது மாற்று வேலைகள் கிடைத்ததாகவும் கூறினர். இந்த வேலைகளாக, பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்கள், பண்ணைத் தொழிலாளர்கள், மெக்கானிக், உணவு விநியோகம் போன்ற முறைசாரா வேலைகளையே செய்துள்ளனர். பதிலளித்தவர்களில் பலர், தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணம், வீட்டு வாடகை மற்றும் ஈ.எம்.ஐ.களை செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.
20-21 முதல் பாதியில், ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்தையும் பெற்றனர். கடந்த காலாண்டில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 56% ஆக உயர்ந்தது. மற்றொரு மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களில், மூன்றில் ஒரு பங்கினர், தங்களது உரிமையுள்ள சம்பளத்தில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டதைப் பெற்றனர், ஆனால் முழு சம்பளத்தையும் பெறவில்லை. மீதமுள்ளவர்களில், பெரும்பாலானவர்கள் குறைவான ஊதியங்களைப் பெற்றனர், ஆனால் அவர்களின் சம்பளத்தில் பாதிக்கும் குறைவானதாகவே இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்குப் பதிலளித்தவர்களில் 10% பேர் 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்த சம்பளத்தையும் பெறவில்லை. இந்த எண்ணிக்கை 2020-2021 இறுதி காலாண்டில் கிட்டத்தட்டப் பூஜ்ஜியமாகக் குறைந்தது, ஆனால் ஏப்ரல் 2021 இல் கிட்டத்தட்ட 3% ஆக உயர்ந்தது. கல்லூரிகள் ஆன்லைனில் மாறியுள்ளதால், இந்த கல்லூரிகளின் செயல்பாட்டுச் செலவுகள் வெகுவாக குறைந்துவிட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால், தனியார் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கட்டணங்களை முடிந்தவரை முழுதாக வசூலித்துள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, இந்த தொற்றுநோய்களின் போது ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை என்பது தெளிவு. இந்த கொரோனா காலகட்டத்தில் கணிசமான பணச் செலவுகள் மற்றும் மிகுந்த மன அழுத்தத்தை அனுபவித்து, மிகவும் கடினமான சூழ்நிலையில் கடினமாக உழைத்துக் கற்பித்த ஆசிரியர்களிடமிருந்து கொள்ளையடிக்கத் தனியார்-உதவி பெறாத கல்லூரிகள் தொற்றுநோயை ஒரு சாக்காகப் பயன்படுத்தியுள்ளன.
முடிவுரை
தொற்றுநோய், தனியார்- உதவி பெறாத கல்லூரி ஆசிரியர்களின் வாழ்வாதார நிலையை மோசமாக்கியிருக்கலாம் என்றாலும், இந்த விஷயத்தில் அரசு விதிமுறைகள் முழுமையாக இல்லாததால் அவர்களின் பணி நிலைமைகள் ‘சாதாரண’ காலங்களில் கூட மோசமானதாக இருந்தன. இது தொடர்பாக சில உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அவற்றில் சில -
1) நிர்வாகத்தால் முடக்கப்பட்ட தனியார் உதவி பெறாத கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்
2) பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை எந்த காரணமும் இல்லாமல் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்
3) இதன் போது ஆசிரியர்கள் ஆன்லைன் கற்பித்தலுக்காகச் செய்த செலவினங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறைச் சட்டம் 1976 மதிப்பாய்வு செய்து திருத்தப்பட வேண்டும் கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் கல்லூரிக் கல்வியின் பிராந்திய கூட்டு இயக்குநர், உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்’
