“மக்கள் புத்தகங்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்” - க்ரியா எஸ். ராமகிருஷ்ணன்
தமிழ்ப் பதிப்புத் துறையில், ஒரு தனி நபர் இயக்கம் என்று அழைக்கப்படுவர் 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன். தமிழ்ச்சூழலில் ஒரு பதிப்பாளராகப் புத்தக விழா குறித்த எதிர்பார்ப்பு, அதை அணுகும் முறை, கவனம் கொள்ள வேண்டிய நுட்பங்கள், அதற்குத் தேவையான உழைப்பு, புத்தக உள்ளடக்கம், வடிவமைப்பு, மொழியைக் கையாள்வது குறித்து என அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டவை.
புத்தகக் கண்காட்சியென்று சொல்லும்போது, புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்வது என்பது முக்கியமான செயல்பாடு. என்னைப் பொறுத்தவரை, பதிப்பாளர்கள் இந்த விஷயத்திற்குத்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள், எப்படி விற்பது என்று. இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று விற்பது, ஆழமாகப் பார்த்தால் இன்னொன்று - மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பதிப்பாளர்கள் இன்னும் விற்பது என்ற அளவிலேயேதான் இருக்கிறார்கள். உண்மையாக மக்களிடம் எடுத்துக்கொண்டு போகிறார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
அடிப்படையில் பதிப்பாளருக்கு இரண்டு முக்கியமான வேலை. உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுப்பது, பின்பு அதற்குச் சரியான வடிவம் கொடுப்பது. உள்ளடகத்திற்கு ஒரு வடிவம், அதைப் புத்தகமாக மாற்றுவது இன்னொன்று. இது ஒரு பெரிய பகுதி. அடுத்தது விற்பனை. உள்ளடக்கத்தை உருவாக்குவது, அந்த உள்ளடக்கத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது குறித்து பதிப்பாளர்கள் பெரிதாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என நினைக்கிறேன். உதாரணமாகப் புத்தகக் கண்காட்சியைப் பார்த்தீர்களென்றால், எல்லாரும் அவர்களுடைய அரங்குகளில் புத்தகங்களை அடைத்து வைத்திருப்பார்கள். புத்தககங்களைப் பார்க்கிறதுக்கான வசதி இருக்காது. நிறையப் புத்தகங்கள் ஒன்றின் மேல் ஒன்றின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கீழ் இருக்கும் புத்தகங்களை எடுக்க வேண்டுமென்றால் எதுவும் செய்ய முடியாது.
புத்தகக் கண்காட்சியின் முக்கியமான நோக்கமாக நான் எதை கருதுகிறேன் என்றால், மக்களுடைய பார்வையைப் புத்தகத்தின் மேல் திருப்புவதைத்தான். to make a exposition of your work. நாம் நினைப்பது என்னவென்றால், செலவு செய்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறோம், அது தவறு. இது முதலில் புத்தகக்கண்காட்சிக்கு வருபவர்கள் எப்போதும் வேண்டுமானாலும் வாங்கலாம், எனபதை உணர வேண்டும். ஆறு மாதம் கழித்துக் கூட வாங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. விற்பனையாளர்கள், மக்கள் புத்தகத்தைக் கையில் எடுத்து பார்த்து முடிவு செய்வதற்குத் தான் உதவி செய்கிறார்கள், அதற்குத்தான் புத்தகக் கண்காட்சி. விற்பனை முக்கியம் தான், ஆனால் அது மட்டுமே முக்கியம் கிடையாது, அதை விட முக்கியமானது மக்களிடம் நீங்கள் எப்படி புத்தகத்தைக் கவனப்படுத்துகிறீர்கள் என்பது, புத்தகத்தை போட்டு அடைத்து வைத்தால் மக்கள் முதலில் அதை எப்படிப்பார்ப்பார்கள்.
இரண்டாவது, புத்தக அரங்குகளில் பதிப்பாளர்கள் என்ன என்ன புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முழு தகவல் அவர்களிடம் கிடையாது. ‘மக்கள் சில கேள்விகளை கேட்கிறாங்க, அது அந்த பதிப்பகம் சம்பந்தப்பட்டதா இருக்கலாம்? அல்லது அவர்களுக்கு எந்தப் பதிப்பகம் என்றெல்லாம் தெரியாது, இந்த புத்தகம் கிடைக்குமா சார் என்று தான் கேட்பாங்க? அந்த புத்தகம் நீங்கள் வெளியிடாமலே இருந்திருக்கலாம். ஆனால், உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்க வேண்டும், இதை யார் பதிப்பித்திருப்பார்கள், எங்க போய் கேட்க வேண்டும் என்று, நீங்க போய் சொல்லனும், இந்த அரங்குக்கு போகனும் என்று, அது நடப்பது இல்லை, ஏனென்றால் பல புத்தக கடைகளில் இருப்பவர்களுக்கு அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் பற்றிய அறிவே பெரும்பாலும் இருப்பது இல்லை. இதை நான் ரொம்ப அழுத்தமாகச் சொல்கிறேன். இதை நான் கவனித்துச் சொல்கிறேன், நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், அதே எழுத்தாளர் எழுதிய வேறு புத்தகம் குறித்துக் கேட்டாலும் அவர்களுக்கு தெரியாது. அப்பப் புத்தக் கண்காட்சி என்பது என்ன? வெறும் விற்பனையா? மக்களுக்குத் தகவல் போய் சேரனும். முதலில், வாசகர்கள் வந்து புத்தகத்தை கையில் எடுத்து பார்க்கனும், அங்க நின்று இரண்டு பக்கங்களை படிக்கனும். நாம் வெறுமனே புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம் என்று சந்தோஷம் படலாம், ஆனால் உண்மையிலே, அதிகபட்சமான பலன் தரக்கூடிய நடவடிக்கைகளைப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர் எடுத்திருக்கிறார்களென்றால் நான் இல்லையென்று தான் சொல்வேன். நான் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கும் பார்வையில் அடிப்படையில் சில மாற்றம் வர வேண்டியது என்று நினைக்கிறேன்.
நாம் திரும்பத் திரும்ப நினைப்பதெல்லாம், விற்பனை, விற்பனை தான், விற்பனை முக்கியம் தான், செய்த செலவை மீட்டால் நல்லது, ஆனால் விற்பனை மட்டுமே முக்கியமில்லை, ஏனென்றால் ஒரு ஆயிரம் முதல் பத்தாயிரம் பேர் உங்கள் கடைகளுக்கு வருகிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய விளம்பரம், அது ஒரு நல்ல வாய்ப்பு, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? அது குறித்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்குத் தெளிவு இல்லை, தெளிவு இல்லைனு சொல்வதை விட, எது அடிப்படையான நோக்கம் அப்படிங்குறதுக் குறித்து தெரியவில்லையென்று நான் நினைக்கிறேன். அதனால் தான் எப்பவும் விற்பனை குறித்து மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அடுத்து காட்சிக்கு வைப்பது என்பது மிக முக்கியம், ஒரு புத்தகத்தை எப்படி எடுத்துப் பார்க்கிறீர்கள் என்பது முக்கியம், நடப்பதற்கே இடமில்லையெனில், எப்படி எடுத்துப் பார்ப்பது, பின்னாலேயே ஒருத்தர் வந்து, இடித்துக்கொண்டு இருந்தால் நாம் எப்படிப் பார்ப்பது, என்னுடைய அனுபவத்தில் கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு இதுக்குறித்தான முன்பயிற்சி ரொம்ப முக்கியம்.
என்னுடைய அனுபவத்தில், ஒரு வாசகரை அமைதியாக கவனித்தால் போதும், இப்ப எழுத்தாளர் இமையம் பனிரெண்டு புத்தகம் எழுதியிருக்கார், ஒரு வாசகர் அவரோட ஒரு புத்தகத்த எடுத்து பார்க்கிறார் என்றால், அந்த வாசகர் கிட்ட போய்,”இமையத்தோட மற்ற புத்தகங்களெல்லாம் இருக்கு பார்த்தீர்களான்னு கேட்கனும்”, ஒரு புத்தகம் வாங்குறவுங்க, நீங்க அவர்களிடம் போய் பேசினால், நாலு புத்தகம் வாங்குவார்கள், மக்கள் புத்தகம் வாங்கத் தயாரா இருக்கிறார்கள், நான் குற்றமே சொல்ல மாட்டேன், எல்லாரும் வந்து கேட்பது என்ன தெரியுமா? “எங்களுக்குப் படிக்க ஆர்வம் இருக்கிறது, ஆனால் எந்த புத்தகம் படிக்கிறது என்று தெரியவில்லை”, அப்போது நாம் அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த புத்தகத்தில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும், அகராதி இருக்கிறது, அவருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது, ஆனால் எடுத்து பார்க்கிறார்கள் என்றால், ஒரு அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம், நிற்கிறார்கள், அப்ப நீங்க அவர்களிடம் போய், எதாவது உதவி வேண்டுமா என்று கேட்க வேண்டும், அகராதி பத்தி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட , நாம் பேசியவுடன், ஒன்று வாங்கிச்செல்வார்கள், இது நான் திரும்பப் திரும்ப பார்க்கும் விஷயம், இப்போது இல்ல, 1979 ஆம் ஆண்டிலிருந்து புத்தகக் கண்காட்சியில் இருக்கிறேன்.
வாசகரின் வகைமை என்று சொல்வார்கள், நீங்க அமைதியாக அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று கவனித்தாலே, உங்களுக்கு அவர் என்ன மாதிரியான வாசகர் என்பது தெரிந்துவிடும், அவர்கள் மொழிபெயர்ப்புகளைத் தேடிப்பார்க்கிறார்கள் என்றால், இதெல்லாம் மற்ற மொழிபெயர்ப்புகள் பாருங்கள் என்று சொல்ல வேண்டும், உதாரணமாக ஆல்பர் காம்யூவின் அந்நியன் எடுக்கிறார் என்றால், “மெர்சோ பாருங்கள், இதுவும் அதுவும் தொடர்புடைய புத்தகங்கள், காம்யுவ கேள்விக்கு உட்படுத்தக்கூடிய புத்தகம் மெர்சோ”, அந்த மாதிரி நான் உரையாடும் போது, அதையும் வாங்கிக்கொள்கிறார்கள். மக்கள் நான் குற்றமே சொல்ல மாட்டேன், அவர்களுக்குத் தகவல் சரியாகப்போய்ச் சேரவில்லை, அப்படிச் சேர்வதற்கான முயற்சிகளை நாம எடுக்கவில்லை. அவ்வளவு தான்.
என்றைக்கு நீங்க வாசகர்களிடம் பேசுகிறீர்களோ, அன்றைக்கு இவர்கள் வாசகர்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஒருவர் நினைக்கும் போது அவர் கண்டிப்பாகப் புத்தகத்தை வாங்குகிறார். நானே பார்த்திருக்கிறேன், முதல் நாள் வந்தவர்கள் நான் ஒரு முறை பேசியதும் இன்னொரு முறை திரும்ப வந்திருக்கிறார்கள், நீங்க மக்களை எப்படி அணுகுகிறீர்கள் என்பது இருக்கு, நமக்கு பொறுமை இல்லை, பெரும்பாலும் நமக்கு விவரங்கள் தெரியாது.
பதிப்பாளர்கள் என்ன படிக்கிறார்கள்? என்ன கேட்கிறார்கள்? கொஞ்சம் கேளுங்கள், என்ன எடுத்துகிட்டீங்கன்னா? தேவ நேயப்பாணர் நூலகம் தான் எங்களையெல்லாம் வளர்த்தது, அறுபதுகளில் அது அற்புதமான இடம் எங்களுக்கு.
பியர் பூர்தியுவின் தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம், நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம், இந்தப்புத்தகம் எனக்கு எப்படித் தெரிந்தது, உலகளவில் முக்கியமான டைம்ஸ் இலக்கிய இதழ், நியூ யார்க்கர், யேல் டெய்லி டாட் காம் போன்ற வலைத்தளங்கள் இவர்கள் எல்லோரும் என்ன புத்தகங்களைப்பற்றிச் சொல்கிறார்கள், எப்படி மதிப்புரை செய்கிறார்கள், என்பதைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன், அப்படித்தான் பூர்தியுவை நான் கண்டுபிடிக்கிறேன், கூடுதலாகத் தகவல்களைத் தேடிப்படித்தேன், அப்படி ஒவ்வொன்றும், தேடிச்செய்தது. நாம் என்ன படிக்கிறோமோ அது நமது காரியத்தில் வெளிப்படும்.
உள்ளடகத்தைப்பற்றியது, நீங்க என்ன பார்க்குறீங்க, நீங்க என்ன கேட்கிறீர்கள், உங்களுக்கு எல்லாத்துறைகளிலும் எப்படியான பரிச்சயம் இருக்கிறது என்பதைப்பொறுத்து தான், உங்களுடைய வெளியீடுகள் சிறப்பாக இருக்கும், க்ரியாவில் நிறையப் புத்தகங்கள் போடுவது கிடையாது, ஒரு வருடத்திற்கு நாற்பது, ஐம்பது புத்தகங்கள் போட மாட்டோம், போடுவதற்கான வசதி மட்டுமில்லை, நாற்பது புத்தகங்களின் கைப்பிரதிகளை வாசித்து எடிட் செய்வதற்கு இங்கு ஆட்கள் இல்லை, தமிழில் எடிட்டிங் என்பது அத்தியாவசியமான ஒரு தலையீடு என்பது இப்போதுதான் உணரப்பட்டு வருகிறது.
தற்காலத் தமிழ் எப்படி எழுதுவது? தமிழ் மாறிக்கொண்டே வருகிறது. எடிட்டிங் என்பது ஒரு திறன், நல்ல எடிட்டர் என்பது தமிழில் கிடையாது, நாங்கள் பயிற்சி தருவதற்குத் தயார், பயில்வதற்கு ஆட்கள் தயாராக இருக்க வேண்டும். எடிட்டிங் என்பது ஒவ்வொரு நிலையிலும் முக்கியமானது, குறிப்பாக மொழிபெயர்ப்பில் ரொம்ப முக்கியமானது, ஏன் க்ரியாவிற்கு மொழிபெயர்ப்புக்கென்று ஒரு இடம் இருக்கிறதென்றால், அதற்கு உழைப்புதான் காரணம், காஃப்காவோட ”விசாரணை” ஆறு வருடம் எடுத்துக்கொண்டோம், எத்தன விதமான திருத்தல்கள், சில பகுதிகள் பத்து தடவை, பதினெரெண்டு தடவைக்கு மேல் திருத்தியிருப்போம், ஆகையால் அந்த உழைப்பு ரொம்ப முக்கியம், அந்த எடிட்டிங் ரொம்ப முக்கியம்.
மொழிபெயர்ப்பாளர்கள் எனக்கு ஆங்கிலம் தெரியும், எனக்கு தமிழ் தெரியும், அதனால் மொழிபெயர்த்திடலாம் என்ற போக்கு அதிகமாக இருக்கிறது, இது உதவாது. நாற்பது வருடமா மொழியோடு போராடிக்கொண்டு இருக்கிறேன், இன்னும் தைரியமா எனக்கு தெரியுமென்று சொல்ல மாட்டேன், எனக்குக் கொஞ்சம் தெரியுமென்று, ஆனால் தினமும் கற்றுக்கொள்கிறேன். இந்த தொழிலில் தினமும் நீங்கள், கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, நீங்க அதற்கு இடம் கொடுக்கிறீர்களா? நீங்க அதற்கு நேரம், உழைப்பு கொடுக்கிறீர்களாங்கறத பொறுத்து இருக்கிறது, எத்தன பதிப்பாளர்கள் அதை செய்கிறார்களென்று தெரியவில்லை?
மொழிபெயர்ப்பு, எடிட்டிங், அகராதி உருவாக்கம் ஆகியவற்றில் க்ரியாவில் இருக்கும் அனுபவம், க்ரியா திறன்களை உருவாக்கி வளர்த்திருக்கு, இந்த திறன்கள் வெளியில் எங்கும் இல்லாதது. ஆனால் இது எல்லாவற்றுக்கும் பின்னாடி உழைப்பு என்பது ஒன்று இருக்கிறது. தினமும் ஆங்கில அகராதியை ஒரு பதினைந்து தடவை பார்க்கிறேன், க்ரியா அகராதியை ஒரு பதினைந்து தடவைக்கு மேல் பார்க்கிறேன். விதவிதமான நடை தமிழில் இருப்பதைப் படித்து அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதற்கான முறையான பயிற்சி எங்கயும் கிடையாது. ஒரு பதிப்பாளரா வருகிறவர்கள், தாங்களே தான் இதையெல்லாம் பயில வேண்டியுள்ளது.
இப்போது நடைமுறை எப்படி, ஒருத்தர் முதலில் புத்தக விற்பனையாளராக வருகிறார். இரண்டு வருடத்தில் அவர் பதிப்பாளராக விடுகிறார், ஆனால் பதிப்பாளராகுவதற்கான தகுதியெல்லாம் அந்த புத்தக விற்பனையாளருக்கு இருக்கிறதென்றால், அவருக்கு அது கிடையாது. இன்றைக்கு நிறைய பேருக்கு அந்த தகுதி கிடையாது. இன்றைக்குத் தமிழ் பதிப்புத்துறையிலே உள்ளடக்க உருவாக்கத்தில் உள்ள பிரச்சினை என்வென்று கேட்டால் யாருக்கும் தெரியாது.
தமிழ் பதிப்புத்துறையிலே உள்ளடக்க உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகளென்று நான் பார்ப்பது, முதலில் தற்கால தமிழை எப்படி எழுதுவதென்று தெரியாது. அப்புறம் அகராதியென்று ஒன்றுள்ளது, அதைப் பயன்படுத்துவது குறித்த அறிவு கிடையாது, மேலும் புத்தகத் தயாரிப்பில், எழுத்துரு (font) என்று உள்ளது, தமிழில் Display font என்பது நிறைய உள்ளது, ஆனால் text font என்பது அறவே கிடையாது, ரொம்ப குறைவு.
க்ரியா அகராதியை நீங்கள் பார்க்க வேண்டும், அகராதி என்பது பல்வேறு எழுத்துருக்கள் தொழிற்படும் ஒரு தளம், அதில் ஒரு தலைச்சொல் இருக்கு, இலக்கண குறிப்பு இருக்கிறது, இலக்கணத் தகவல் இருக்கிறது, பொருள் இருக்கிறது, அப்புறம் ஆங்கிலம் இருக்கிறது, எடுத்துக்காட்டு வாக்கியம் இருக்கிறது, அதற்குள் வெவ்வேறு துறைக்குறிப்பு, வழிக்குக்குறிப்பு இருக்கிறது, இவ்வளவுக்குமான எழுத்துரு தேவை, ஒன்றோடு ஒன்று பொருந்தி போகிறப் பல படிநிலைகளைக் கொண்ட எழுத்துரு தேவை, ஆங்கிலமும் தமிழும் பொருந்துகிற, தலைச்சொல்லுக்கு பயன்படுத்துகிற எழுத்துருவிற்கும் எடுத்துக்காட்டு வாக்கியத்துக்கான எழுத்துருவிற்குமான ஒரு இசைவு இருக்கனும். இரண்டு வருடங்கள் நான் அதற்காகக் கஷ்டப்பட்டேன், எழுத்துருக்களே கிடையாது, அப்புறம் மாடுலர் இன்ஃபோடெக் என்று புனேவில் உள்ள நிறுவனம், அவர்கள் எழுத்துருவைத்தான் தமிழ்நாட்டுல அனைவரும் பயன்படுத்துகிறார்கள், அதனுடைய தலைவர் திரு.கூப்பர் சென்னை வருகிறார் என்று கேள்விப்பட்டு, அவரைச் சென்று பார்த்தேன், உங்கள் எழுத்துரு தான் எல்லாரும் பயன்படுத்துகிறார்கள், ஆனால் உங்கள் எழுத்துருவில் பாதி தவறு என்று சொன்னேன், அவர் எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார்? உதாரணத்திற்கு, சூரியனில் உள்ள சூ முன்பு தேவையில்லாமல் இன்னொரு சுழியைக்கொண்டிருந்தது போன்ற, தமிழில் அது கிடையாது,
சு,சூ, ழ,ழு அது மட்டும் தான், அப்புறம் kerning என்று சொல்லுவார்கள், ஒரு சொல்லில் இருக்கும் ஒரு எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்கும் உள்ள இடைவெளி, அது மிகவும் சிக்கலான விஷயம், தமிழில் எழுத்துரு கிடையாது. தமிழில் hypenation என்பதும் முக்கியம், அதாவது வரி முடிவில் ஒரு சொல்லை எங்குப் பிரிக்கிறோம் என்பது, ஆங்கில அகராதியில் பார்த்தீர்களென்றால், ஒரு சொல்லை எங்கு பிரிப்பது என்பதை அழகாகப் பிரித்திருக்கும், நாம் ஆங்கிலத்தில் எழுதும் போது அதுவாக பிரித்துக்கொள்ளும், தமிழில் அந்த வசதி கிடையாது. ஆகையால் எழுதும் போது அவனிடமிருந்து என்பது கடைசியாக வருகிறதென்றால் அவனிடம் என்பதற்கு மட்டும் தான் இடமிருக்கு என்றால் மீதி சொல்லைக் கீழே தள்ளிவிடும், மீதி இடைவெளியை அந்த முதல் வரியிலேயே நிரப்பிக்கொள்ளும், அப்படிச் செய்யும் போது ஒரு வரியில் நிறைய இடைவெளி இருக்கும், இன்னொரு வரியில் ரொம்ப நெருக்கி இருக்கும், இப்படிச் செய்யும் போது, ஒரு பதிப்பாளர் பதிப்பித்த புத்தகத்தை நான் பதிப்பித்தேன், அதே பிரதியை, அதே அளவில் நான் பதிப்பித்தேன், அவருடையது 127 பக்கம், நான் பதிப்பித்தது 100 பக்கம், அப்படியானால் 100 பக்கம் பிடிக்கக்கூடிய பிரதி அளவை நாம் 127 பக்கத்தில் பதிப்பிக்கிறோம், அப்போது 27 சதவீதம் மிச்சம் பிடிக்கலாம், அந்த செலவை இந்த துறை முழுக்க ஏற்றிப்பாருங்கள், எவ்வளவு செலவு அதிகமாகிறது என்று. இந்த செலவை யார் ஈடு செய்வார்கள். அது கடைசியில் புத்தகத்தை வாங்கும் வாசகர் கையில்தான் வந்து நிற்கிறது, அதற்கும் சேர்த்து அவர்தான் ஈடு செய்கிறார்.
இதெல்லாம் தான் பெரிய பிரச்சனை, எழுத்துரு கிடையாது, சொல் பிரிப்பதற்கான அகராதி கிடையாது, இதுவெல்லாம் தான் பதிப்பாளர்களின் பிரச்சனைகள், எடிட்டிங்கான திறமை, புத்தகத்தை வடிவமைப்பதில் உள்ள பிரச்சனைகள் போன்றவற்றைப் பதிப்பாளர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.
