48% பெற்றோர், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை! - கருத்துக்கணிப்பில் தகவல்
48 சதவீத பெற்றோர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் வரை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள், குறைந்து வருகின்றன. இதனால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில், இந்த மாதம் பள்ளிக்கூடங்களைத் திறக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள், வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் பள்ளிக்கூடங்களைத் திறக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், பள்ளிக்கூடங்கள் திறப்பது தொடர்பாக, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற ஆன்லைன் தளம் நாடு முழுவதும், 361 மாவட்டங்களில், 32,000 பெற்றோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘21 சதவீத பெற்றோர், பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கின்றனவோ, அப்போது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
30 சதவீத பெற்றோர், தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இல்லை என்கிற நிலை வரும்போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளோம்.
48 சதவீத பெற்றோர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் வரை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
