ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை! மத்திய மாநில அரசுகளின் தகவல் உண்மையா?
குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கான படுக்கை தட்டுப்பாடு என்று பல தேவைகள் இருந்தது. தமிழ்நாட்டில், திமுக பொறுப்பேற்றதும் இந்த சிக்கலை எதிர் கொண்டது.
ஒருவர் கூட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று தெரியவருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் மத்திய அரசிற்கு அளித்த தகவலில், இதையே குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் ஆக்சிஜன் தேவை 230 மெட்ரிக் டன்னாக இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் தினசரி புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 36 ஆயிரமாக அதிகரித்தது. எனவே, தினசரி ஆக்சிஜன் தேவை 550 மெட்ரிக் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது.
அருகில் உள்ள மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால், வட மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வந்து சப்ளை செய்தோம். எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டில் யாரும் உயிரிழக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த பதில்கள் மற்றும் விவாதங்கள், வர இருக்கும் 3வது அலையை அரசு எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வியும் எழுகிறது. மற்றொருபுறம், கடந்த மாதத்தில் அறப்போர் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அறப்போர் இயக்கம் 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளைக் கணக்கிட்டு, ஆய்வை வெளியிட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு கல்லூரி மருத்துவமனை, வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றின் இறப்பு விகிதத்தை அறப்போர் இயக்கம் கணக்கிட்டுள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்படும் தினசரி கொரோனா பாதிப்பு பட்டியலில், 2021-ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 863 இறப்புகள் மட்டும் நிகழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த தகவலை விட 6 மருத்துவமனைகளிலும் 13.7 மடங்கு இறப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்த மருத்துவமனைகளில் 8.4 முதல் 9.8 மடங்கு தமிழக அரசு தரப்பில் குறைத்துக் காட்டப்பட்டிருப்பது ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகம் மொத்தமாக கொரோனா இரண்டாம் அலையின் உச்சக்கட்டத்தில் 1,08,108 முதல் 1,26,126 பேர் கொரோனா இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இறப்பிற்கான காரணம் சரிவரப் பதிவு செய்யப்படாமல், வேறு காரணங்களால் பலர் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த, ஜெயராம் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட போது, “அரசு தளங்களில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் இறப்பு கணக்கு 30 ஆயிரம் என்று பதிவிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருக்க அரசு தரப்பில், மத்திய அரசிடம் கொடுத்த தகவல் சரியானதா என்று ஒருமுறைக்கு, பலமுறை ஆராய வேண்டியுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு?
ஆகஸ்ட் 2020ல் 5700 மெட்ரிக் டன்னாக இருந்த திரவ ஆக்சின் உற்பத்தியில் 2021 மே மாதத்தில் 9690 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டது. அந்நாட்களில் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் 2020-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட திரவ ஆக்சிஜன் பயன்பாடு வழிகாட்டுதல் நெறிமுறை, 2021 ஏப்ரல் மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு வரைமுறைகள் கொண்டுவரப்பட்டன.
குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கான படுக்கை தட்டுப்பாடு என்று பல தேவைகள் இருந்தது. தமிழ்நாட்டில், திமுக பொறுப்பேற்றதும் இந்த சிக்கலை எதிர் கொண்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் காத்திருந்தனர். அதேபோல் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனை கிடைக்காமல் சாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது. இது பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இதுபோன்ற தரவுகள் அனைத்து சரியானதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
