குடும்ப பாரம், ஆன்லைன் வகுப்பு... தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் ஊரடங்கு! பள்ளிகள் திறக்க காத்திருப்பு?
“குழந்தைகளிடம் பள்ளிக்கு வருகிறாயா? என்று கேட்டால் 99 சதவீதத்தினர், வருகிறேன் என்றே பதிலளிக்கின்றனர். முன்பு எப்போது விடுமுறை விடுவார்கள் என்று குழந்தைகள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போதைய நாட்களில் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று காத்திருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் மணி.
கொரோனா தொற்று காலத்தில் முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்று பல கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்பது மக்களின் பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கினாலும், யாருக்கும் தெரியாமல் ஒரு தலைமுறைக்குக் கல்வி என்பதை வெறும், கடமையாக வகுத்துக்கொண்டே இருக்கிறது. மீம்களில் நீ கொரோனா பேட்சா...? உனக்கு வேலை இல்லை என்று கூறுவதைப் பார்க்கும்போது, அது சிரிப்பதற்காகக் கூறியிருந்தாலும், அதுதான் நிகழும் என்ற அளவிற்கு, குழந்தைகளின் கல்வி அமைப்பு இருந்து வருகிறது.
பள்ளிக் கல்வி என்பது அடிப்படைத் தேவை. கல்வி கற்காதவர் நிலை பொருளாதாரத்திலும், சமூகத்திலும் முன்னேறுவது மிகவும் கடினமாகிவிடும். எனவேதான் அன்று காமராஜர் தொடங்கி, பலரும் கல்விச் சூழலை மேம்படுத்தப் போராடி வருகின்றனர். ஆனால் தற்போதைய கொரோனா ஊரடங்கு என்பது அதிக அளவில் மாணவர்களைக் கல்வியறிவற்றவர்களாக மாற்றும் சூழல் ஏற்படுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதிலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் சூழல்தான் மிக மோசமானதாக மாறியுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில்,
- தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் கொரோனா பெரும் தொற்றின் தாக்கம் மாணவர்களை எப்படிப் பாதித்துள்ளது?
- கொரோனா பெரும்தொற்று காலத்தில் விடுபட்டுள்ள மாணவர் சேர்க்கை? அதனால் ஏற்பட்டுள்ள இடைநிற்றல்?
- குழந்தை தொழிலாளர்களாக மாறிய பள்ளி மாணவர்கள்?
- ஆன்லை வகுப்பு, பள்ளி தொலைக்காட்சியின் பாடம்?
- மாணவர்களின் சமூக பொருளாதார பின்னணி?
ஆகியவற்றில் அறிந்து கொள்ளும் வகையில், இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 121 கிராமங்களையும், 41 நகரங்களையும் சேர்ந்த மாணவர்களை சேர்த்து மொத்தமாக 2137 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாலின வீதத்தில் 55 சதவீத ஆண் குழந்தைகளிடமும், 45 சதவீத பெண் குழந்தைகளிடமும் ஆய்வில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரிடம் ஆய்வின் மூலம், கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளில் 64 சதவீதத்தினரின் பெற்றோர் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும், 21 சதவீதம் பேர் சுய தொழில் செய்பவர்களாகவும், 8 சதவீதம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாகவும், 4 சதவீதம் பேர் அரசுப் பணியில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.
பெற்றோரில் வருவாய் பற்றிய கேள்விக்கு 57 சதவீத ஆண்களும், 85 சதவீத பெண்களும் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். தகவல் பெறப்பட்டதில் 5000 ரூபாய்க்குக் கீழ் வருமானம் பெறுபவர்கள் 34 சதவீதத்தினரும், பெண்களில் 13 சதவீதத்தினரும் உள்ளனர்.
பெற்றோரின் பொருளாதார சிக்கல் மாணவர்களைக் குழந்தை தொழிலாளர்களாக மாற்றியுள்ளது. கேள்வி எழுப்பப்பட்ட 2137 மாணவர்களில் 277 பேர் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அவர்களில் 69 மாணவர்கள் விவசாயிகளாகவும், 29 மாணவர்கள் தொழிற்சாலைகளிலும், 30 மாணவர்கள் சுயதொழில் செய்யும் பெற்றோருக்கு உதவியாகவும் வேலை செய்து வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் என்ன விதமான வேலை செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
வேலைக்குச் செல்லும் மாணவர்களில் குறைந்தது 50 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களாக இருக்கின்றனர். குறைந்தது 4 மணிநேரமும் அதிகபட்சமாக 8 மணிநேரமும் மாணவர்கள் வேலைவாங்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் ஆன்லைவகுப்புகள் பற்றிய கேள்விக்கு 49 சதவீதத்தினர் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 51 சதவீதத்தினர் வகுப்புகள் தங்களுக்கு நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். வகுப்புகள் கவனிக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் செல்போன் மூலமாகவும், 48 சதவீதத்தினர் அரசால் ஒளிபரப்பப்படும் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாகவும் பாடம் கற்பதாகத் தெரிவித்துள்ளனர். கல்வி தொலைக்காட்சி தமிழ்நாடு முழுக்க ஒரே வழிமுறையைப் பின்பற்றியே பாடம் கற்றுத்தரப்படுகிறது. இதில் 56 சதவீத மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்றும், 44 சதவீத மாணவர்கள் பாடம் நன்றாக புரிகிறது என்றும் பதிலளித்துள்ளனர். ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் மணி கூறுகையில், “கல்வி தொலைக்காட்சி சேனல்கள் ஏற்கனவே இருந்ததை விட அதிகரித்துள்ளது. ஆனால், கல்வி தொலைக்காட்சியைப் பார்க்கும் மாணவர்களுக்கு, அது புரிகிறதா என்று கேள்வி எழுகிறது. கல்வி தொலைக்காட்சிக்கு டிவி வேண்டும், ஆன்லைக் கல்விக்கு மொபையில் வேண்டும். இவை இரண்டும் இல்லாத மாணவர்கள் அதிகமானோர் உள்ளனர். எனவே ரேடியோ மூலம் மாணவர்களுக்குக் பாடம் சொல்லிக்கொடுக்கலாம். நல்ல FM ரேடியோ 500 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும். ஒன்று வாங்கினால் மூன்று, நான்கு குழந்தைகள் சேர்ந்து இருந்து கூட, கற்றுக்கொள்ளலாம்”

பெற்றோர் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் தரவை தெரிந்துகொள்ள அந்தவகையான கேள்விகளும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகக் குழந்தைகளிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோரில், 85 சதவீதத்தினர் ஒருநிலை கல்வியை கற்றுள்ளனர். அவர்களில் 47 சதவீத பெற்றோர் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கின்றனர். 53 சதவீத பெற்றோர் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதில்லை.
அதேபோல் மாணவர்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சந்திக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சனை 'சத்துணவு'. பள்ளிகள் மூடப்பட்டபோதிலும், அந்தந்த பள்ளிகள் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சத்துணவு சாப்பிடும் 72 சதவீத மாணவர்களில் 38 சதவீதத்தினர் சத்துணவு இன்றி ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். பேரா.மணி கூறுகையில், “விழிப்பு நிலை மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பது சத்துணவு. ஒன்றரை வருடமாக, ஆரோக்கியமான உணவைப் பல குழந்தைகள் இழந்துள்ளனர். பள்ளி நடந்துகொண்டிருந்தால், ஒரு குழந்தைக்குச் சராசரியாக மாதத்தில் 20 முட்டைகளாவது கிடைக்கும். ஆனால் தற்போது 10 முட்டைகளே கிடைக்கின்றன. அதிலும், குழந்தையின் குடும்பத்தினரும் அந்த முட்டைகளை உண்ணும் நிலை ஏற்படுகிறது. எனவே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைந்துள்ளது. பள்ளிகளைத் திறக்கவில்லை என்றாலும், முட்டையுடன் உணவையாவது குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்றே கோரிக்கை வைக்கிறோம். பள்ளிகளுக்கு வந்து உணவு வாங்கி செல்ல முடியாத சூழலில், ஒவ்வொரு ஊரிலும் அங்கன்வாடி மையம் இருக்கும். பள்ளிகளை அங்கன்வாடி மையத்துடன் இணைத்து உணவு கொடுக்கலாம்”
அதேபோல் 'வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கத் துவங்கிய மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை' என்று, campaign against child labour என்ற அமைப்பின் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கருத்தை இந்த ஆய்விலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 10-ம் வகுப்பு முடித்துவிட்டு 11-ம் வகுப்பு சேரும் மாணவர்கள் மீள் சேர்க்கை பதிவு செய்யத் தவறுக்கின்றனர். இதனால், அந்த ஆண்டில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆய்வின் முடிவில் 242 பேர் இடை நீற்றல் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கு முந்தைய தரவுகளில், தனியார்ப் பள்ளி மாணவர்கள் தற்போது அரசுப் பள்ளியில் சேர்வது அதிகரித்துள்ளது என்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொருளாதாரம், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு முழு தொகையைக் கட்ட கூறுவது, புத்தகம் துணிகள் காலணிகள் போன்றவற்றுக்குப் பணம் பெறுவது போன்ற காரணங்களைப் பெற்றோர்கள் வெளிப்படுத்துகின்றனர். இத்தகையோர் நீண்ட காலம் அரசுப் பள்ளியில் தொடர்வார்களா என்பது சந்தேகமே. இதற்குப் பேரா.மணி கூறுகையில், “தனியார்ப் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களை, தக்க வைப்பது என்பது மிகப்பெரிய விஷயம்தான். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவை முன்பு இருந்ததற்கு தற்போது பரவாயில்லை. இருந்தாலும், அதை மேம்படுத்த வேண்டியுள்ளது.
விளையாட்டு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்வி கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். இல்லை என்றால் கொரோனா சரியான பின், பொருளாதாரம் அதிகரித்த பின்னர் மீண்டும் தனியார்ப் பள்ளிகளை நோக்கில் செல்வர்” என்றார்.
மேலும், “குழந்தைகளிடம் பள்ளிக்கு வருகிறாயா? என்று கேட்டால் 99 சதவீதத்தினர், வருகிறேன் என்றே பதிலளிக்கின்றனர். முன்பு எப்போது விடுமுறை விடுவார்கள் என்று குழந்தைகள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போதைய நாட்களில் எப்போது பள்ளிக்கூடம் திறக்கிறது என்று காத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வந்தால், அவர்களுக்கு இத்தனை நாட்கள் தவறவிட்டதை மொத்தமாகப் புகுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் தரப்பில் இந்த கேள்வியை நாங்கள் முன்வைத்தபோது, எங்களுக்கு சில காலம் செயல்வழி கற்றலை நடத்துங்கள், அதன்பின் முழு பாடத்திற்குச் செல்லலாம் என்று பதிலளிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
