'அனிதா முதல் மோதிலால் வரை இறந்தது, யார் ஆட்சியில்?' மாணவன் தற்கொலையும், அதிமுக வெளிநடப்பும்!
'நீட் தேர்வு அறிவித்ததும், யாரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்று கூறவில்லை. ஆனால், இந்த நீட் தேர்விற்கு யார் காரணம். அதற்கு ஏன் இவ்வளவு கட்டாயப்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தைப் பொறுத்தவரையில், நெருக்கடி காலகட்டத்தில்தான், கல்வி மாநில பட்டியலிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. நெருக்கடி நிலை முடிந்ததும், மற்ற அனைத்தும் மாநில பட்டியலில் மாறிவிட்டது. கல்வி மட்டும் ஏன் இன்னும் மத்திய பட்டியலில் இருக்க வேண்டும்.'
நீட் தேர்வு என்றாலே, தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலையைத்தான் அனைவரும் சுட்டிக்காட்டுவர். தற்போது தமிழ்நாட்டில் மாணவர் தனுஷ் தற்கொலை மற்றும் நீட் விலக்கு மசோதா ஆகியவை நீட் தேர்வு பிரச்சனையைப் பூதாகரமாக்கியுள்ளது.
நீட் தேர்வு
காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, பல கண்டனங்கள் அடுக்கடுக்காக எழுந்தது. அத்துடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கிற்கு 2013 ஆண்டு ஜூலை மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 'நீட் தேர்வு அரசியலமைப்பிற்கு எதிரானது' என்று குறிப்பிட்டனர்.
நீட் தேர்வு பற்றி அப்போது வலுவான குரல் கொடுக்கப்படாத நிலையில், 2016-ம் ஆண்டிற்குப் பின் பல்வேறு விதத்தில் எதிரொலிக்கத் துவங்கியது. உச்சநீதிமன்றம் அப்போதுதான் நீட் தேர்வை நடத்த ஒப்புதல் வழங்கியது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, 'ஆட்சியைப் பிடித்தால் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும்' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் வெவ்வேறு நிலைப்பாடுகள் எழுந்தது. அதிமுக எதிர்ப்பு தெரிவித்தாலும், பாஜகவுடனான கூட்டணியால் பல இடங்களில் தங்களின் எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தவில்லை. திமுக, உள்ளிட்ட பிற கட்சிகள் அரசைக் கண்டித்துப் பல முறை குற்றச்சாட்டுகளும், போராட்டங்களும் நடத்தினர். எனினும் எந்த மாற்றமும் நிகழவில்லை.
2016-ம் ஆண்டு நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், 2017-ம் ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை நடத்தக்கூடாது என்று போராடிய அனிதா என்ற மாணவி, இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் பல கட்டங்களில், நீட் தேர்வினால் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். எனவே விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கடும் போராட்டங்கள் நடந்த நிலையில், மத்திய அரசு தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுத்துவிட்டது.
கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமியிடம் நீட் தேர்வு குறித்து கேட்டபோது, “2009-ல் 412 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 412 கல்லூரிக்கும் அந்தந்த கல்லூரிகள் 35 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டது. அப்போது 'ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் 35 வகையான தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது' என்று வழக்கு தொடரப்பட்டது. எனவே பொத்தம் பொதுவாகத் தேர்வு நடத்த தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நுழைவு தேர்வு மட்டுமே நடத்தக் கூறினார்கள், மாறாக தகுதித் தேர்வு நடத்தக் கூறவில்லை.
பல குழுக்கள் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்ற கூறியும் 2016-ல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2012-ல் பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது கூட, நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாநில முதலமைச்சராக இருக்கும் போது ஒரு முடிவும், ஒன்றிய அரசான பின் மற்றொரு முடிவும் எடுப்பார்களா?.

கல்வி மத்திய பட்டியலிலிருந்து, மாநில பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதுவே இதற்கான ஒரே தீர்வு. தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏகள், தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக ஆதரவு அளிப்போம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் மத்திய அரசிற்கு ஏன் அழுத்தம் கொடுக்கக் கூடாது?.
720 மதிப்பெண்ணிற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்பிற்குத் தேவையான உயிரியல் பாடத்தையே ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர் ஒருவர் இயற்பியல் மட்டும் படித்து 180 மதிப்பெண் எடுத்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அவருக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அவர் 75 லட்சம் வரை தனியார் கல்லூரியில் பணம் செலுத்தி மருத்துவராகிவிடுவார். அதே நேரத்தில் ஏழை ஒருவர் 350 மதிப்பெண் எடுத்து, அவருக்குத் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து கட்டணம் செலுத்த முடியாமல் அவர் படிப்பில் சேருவதில்லை. அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவன் படிக்க முடியாமலும், குறைந்த மதிப்பெண் பெற்ற வசதி படைத்த மாணவன் எளிதில் மருத்துவராவதையும் நீட் வழிவகுக்குமேயானால், இது எந்த வகையில் மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்கிறார்கள்” என்றார்.
இந்த ஆண்டு நடந்தது?
நேற்றைய (12.09.2021) தினம் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் சிலர் இயற்பியல் பாடக் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்ட நிலையில், வழக்கமான சோதனைகள் இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் தனுஷ்(20) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டிலும் வெற்றிபெறாத நிலையில், இந்த ஆண்டு மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதப் படித்து வந்துள்ளார். தேர்வு நாளான நேற்று (12.09.2021), அதிகாலையில் மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் திமுகவையும், திமுக தரப்பில் அதிமுகவையும் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றன.
கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறுகையில், “விவசாயி சிவகுமாரின் மகன், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் வெற்றிபெறுவோமோ? என்ற சந்தேகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு முன்னரே அனிதாவிலிருந்து, மோதிலால் வரைக்கும் 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வு அறிவித்ததும், யாரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்று கூறவில்லை. ஆனால், இந்த நீட் தேர்விற்கு யார் காரணம். அதற்கு ஏன் இவ்வளவு கட்டாயப்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தைப் பொறுத்தவரையில், நெருக்கடி காலகட்டத்தில்தான், கல்வி மாநில பட்டியலிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. நெருக்கடி நிலை முடிந்ததும், மற்ற அனைத்தும் மாநில பட்டியலில் மாறிவிட்டது. கல்வி மட்டும் ஏன் இன்னும் மத்திய பட்டியலில் இருக்க வேண்டும். தற்போது மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லையா? இல்லை எனில் எதற்குச் சட்டமன்றம். பல்கலைக்கழகத்தை மாநில அரசு வழிநடத்தலாம் என்று கூறும் மத்திய அரசு, நீட் விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருப்பது ஏன்?.
இன்று வானதி சீனிவாசன் அளித்த போட்டியில், 'முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் தவறான வாக்குறுதியால்தான், மாணவர் தற்கொலை செய்துகொண்டார்' என்கிறார். அவ்வாறு இருக்க இவர்களின் நோக்கம்தான் என்ன?. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பாதி அளவிலிருந்தது பாஜக எம்.பிகள்தான். அவர்கள், ஆய்வு செய்துவிட்டு நீட் தேர்வில் விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம். தனியார் கல்லூரிகளையே முறைப்படுத்த வேண்டும் என்றே கூறினர். அவர்கள் தரப்பில் அரசு கல்லூரி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவே இல்லையே” என்றார்.
மாணவர் இறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்குக் கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை (13.09.2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சனையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்று நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
We took steps to cancel NEET exam as soon as we came to power. Govt is taking all constructive steps to cancel NEET exam & enroll students in medical education on basis of Class 12 marks. I request you all to support the Bill (seeking permanent exemption from NEET): Tamil Nadu CM pic.twitter.com/8bGwj1ll8h
— ANI (@ANI) September 13, 2021
மசோதா குறித்த விவாதத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்” என்று குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்வு வரவில்லை . நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் தற்போது, அதிமுகவுக்கு இல்லை. இப்போது உயிரிழந்த தனுஷ் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார்” என்று பதிலளித்தார். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்ற விவாதத்திற்குப் பின் அதிமுக வெளிநடப்பு செய்தது.
Students & their parents were totally confused over the conduction of NEET exam here. There is no clear stand taken by the DMK govt on NEET. Yesterday, a student, Danush committed suicide. DMK is responsible for it: Former Tamil Nadu CM & AIADMK leader Edappadi K Palaniswami(1/2) pic.twitter.com/dFNN9V1ZSb
— ANI (@ANI) September 13, 2021
“கடந்த 10 வருடமாக என்ன செய்துகொண்டிருந்தார்கள். 2017-ல் நீட் தேர்வில் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பினார்கள். அதை மத்திய அரசு திருப்பி அனுப்பிய போதும், அதைப் பற்றிய விவரங்கள் எதையும் மாநில அரசு வெளியில் கூறாமலேயே இருந்தது ஏன்?. 10 வருடங்கள் சும்மாவே இருந்துவிட்டனர். 2016-ல் ஜெயலலிதா பாளையங்கோட்டையில் பேசும்போது, கூட நீட் தேர்வு நடக்காது என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இருந்திருந்தால், நிச்சயம் தடுத்திருப்பார். உங்களால், முடியாததை மற்றொருவர் செய்தால் ஆதரவு கொடுக்க வேண்டியதுதானே?. 2017-ல் அனைவரும் மசோதாவிற்கு எந்த பாகுபாடும் இல்லாமல் ஆதரவு தெரிவித்தார்கள். தற்போது வெளிநடப்பு செய்து ஒன்றிய அரசைக் காப்பாற்றுகிறீர்களா?. மோதிலால் முதல் அனிதா இறந்தது வரை எந்த ஆட்சியில்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் முருகையன் பக்கிரிசாமி.
