புயல், அலை, சுனாமி எதுவாக இருந்தாலும் கேடயமாக இருக்கும் அலையாத்தி காடுகள்! அழிவை நோக்கி!
இயற்கையில் மதில் சுவராக இருந்து மனிதர்களைக் காக்கும் அலையாத்தி காடுகள், அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அலையாத்தி காடுகளை நம்பி வளரும் இறால்களை மனிதன் சதுப்புநில காடுகளை அழித்துவிட்டு சொந்தமாக வளர்க்க முனைகிறான்.
அலையாத்தி காடுகள் என்னும் அற்புத உயிர் வேலிகள். பவளப்பாறைகள் போன்று அலையாத்தி காடுகளுக்கும் இயற்கை பேரிடர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் திறன் மிக அதிகம். அலையாத்தி என்ற பெயரிலேயே அலை+ஆத்தி, ஆத்தி என்று ஒரு மலர் வகை மரமும் உண்டு. அதேபோல் ஆத்தி என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் வார்த்தை. அலையிலிருந்து பாதுகாப்பதனாலேயே அலையாத்தி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
அலையாத்தி காடுகளில் வளரும் தாவரங்களை, சதுப்புநிலங்களில் வளரும் தாவரங்களின் தொகுப்பு எனலாம். இவற்றில், 110 வகையான தாவரங்கள், 11 வகையான கடற் புற்கள், 195 வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஆக்டியோமைஸ், 12 வகையான உப்பு தாவரங்கள், 32 வகையான ஒட்டுண்ணிகள் ஆகியவை உள்ளன.
புகைப்படத்திற்காக மட்டும்
நிலத்தில் சாதாரணமாக வளரும் தாவரங்கள், கடற்கரையை ஒட்டிய சதுப்புநிலங்களில் வளர்வதில்லை. கடல் நீரும், நன்னீரும் இணையும் இடங்களில் எளிதில் வளரக்கூடியவை. சதுப்பு நிலப்பகுதிகளில் தொடர்ந்து வளர்வதால், இவற்றினுள் சில மீன் வகைகள், நண்டுகள் அடைக்கலம் புகுகின்றன.
இயற்கை ஆர்வலர் யுவன் குறிப்பிடுகையில், “அலையாத்தி காடுகள் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். ஒடிசாவில் பாஃனி என்ற புயல் வந்தபோது, அம்மாநில முதலமைச்சரின் வீட்டையே புயல் தூக்கிச் சென்றுவிட்டது. புயலுக்குப் பின் பிணக் குவியலாகவே காணப்பட்டது. அதில் பிடர்கனிகா, மங்கள்ஜோடி இடங்களில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அந்த பகுதியில் அலையாத்தி காடுகள் இருக்கிறது. ஆரோக்கியமான அலையாத்தி காடு இருந்தால், பெரிய புயலையே தடுக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு” என்றார்.
அலையாத்திக்காடுகள்
உலகம் முழுவதும் 112 நாடுகளில் அலையாத்தி காடுகள் உள்ளன. அவற்றில் 30 நாடுகளில் மட்டும் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவு அலையாத்தி காடுகள் அரணாக உள்ளது.
ஒரு மதில் சுவர் எழுப்பினால், வெளியிலிருந்து ஒருவரை உள்ளே விடாமல் தடுக்கலாம், அல்லது நுழைபவரைச் சற்று தாமதப்படுத்தலாம், தாமதப்படுத்துவதால் அவரை தளர்வடையவும், செய்யலாம். இந்த வேலையைத்தான் அலையாத்தி காடுகள் நமக்குச் செய்கின்றன. இவை இயற்கையான அரண்.
அலையாத்தி காடுகளால் கடலிலிருந்து எழும் அலை, புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை 70 முதல் 90 சதவீதம் கட்டுப்படுத்த முடியும்.
சுனாமியும் அலையாத்தி காடும்
தென்கிழக்கு ஆசியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கடலோர மண்டலத்திற்குள் வாழ்கின்றனர். அவர்களின் வருமானம் பெரிதும் கடல் வளத்தைச் சார்ந்துள்ளது.
2004-ம் ஆண்டு சுனாமியில் இந்தியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உலக அளவில் பார்த்தால் 2 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும், கடலோரம் வசித்த 80லிருந்து 90 சதவீதம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்க நேரிட்டது.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் சுனாமியின் போது 7800 பேர் உயிரிழந்தனர். சுனாமியின் போது கடலிருந்து 100 மீட்டருக்குள் இந்த மக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் முன்னணி வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் சுனாமிக்குப் பின் மேற்கொண்ட ஆய்வில், சதுப்புநில காடுகள் இருந்த பகுதியில் சுனாமியின் பாதிப்பு குறைவாக இருந்ததாகக் கண்டறிந்தார். அந்தவகையில், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், சென்னையைப் போன்றொரு பாதிப்பு இல்லை என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“ஆந்திர மாநிலம் கோதாவரி டெல்டாவில் உள்ள கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தின் சதுப்புநிலங்களில் சுனாமி தாக்கியபோது பல மீனவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்” என்று EJFct-ன் சுனாமிக்கு பிந்தைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
2005-ம் ஆண்டு உலக பாதுகாப்பு ஒன்றியம் மேற்கொண்ட ஆய்விற்குப் பின்னர், “அலையாத்தி காடுகள் கடலிலிருந்து ஏற்படும் பேரழிவிலிருந்து பாதுகாக்கிறது” என்ற கருத்தை வலுவாக முன்வைத்தது.
சுனாமியின் போது இலங்கையின் கபுஹேன்வல என்ற கிராமத்தைச் சுற்றி 200 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் இருந்ததால், 2 பேர் மட்டும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. அதுவே, வண்டுருப்பா கிராமத்தில் சேதமடைந்த அலையாத்தி காடுகள் இருந்த நிலையில், அந்த பகுதியில் 5000 முதல் 6000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று reliefweb என்ற இணையதளம் 2005-ம் ஆண்டு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அலையாத்தி காடுகளும்
இந்தியாவைப் பொறுத்தவரையில், மேற்கு கடற்கரையை விடக் கிழக்கு கடற்கரையில்தான் அதிக அளவில் அலையாத்தி காடுகள் நிறைந்துள்ளன.
தமிழ்நாட்டில் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தமிழ்நாட்டில் மட்டும் அலையாத்தி காடுகள் 44.83 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. முத்துப்பேட்டை, ராமநாதபுரம், பிச்சாவரம், தஞ்சை மாவட்டம் முத்துவராம், தூத்துக்குடி, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் சதுப்புநில காடுகள் உள்ளன.
கஜா புயலின் போது கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தினுள் இருந்த பறவைகள் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பின. வெளியில் பறந்து சென்ற பறவைகள் மட்டுமே தப்பிக்க முடியாமல் இறந்துபோனது. அதற்குக் காரணம் அலையாத்திக்காடுகள் மட்டுமே என்று இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
அழிவின் விழிப்பில் அலையாத்திக்காடுகள்!
தமிழ்நாட்டில் இறால் வளர்ப்பு போன்ற காரணத்தினாலும் அலையாத்திக்காடுகளின் அழிவைப் பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் பலரும் தெளிவுபடுத்துகின்றனர். இயற்கையாகவே அலையாத்தி காடுகள் இருக்கும் இடத்தில் மீன்கள் அதிகமாக இனப்பெருக்கத்திற்கு வழியாக உள்ளது. இந்தியாவில் 55 வகை இறால்கள், 138 வகை நண்டுகள், 308 வகை மொல்லஸக்ஸ், 711 வகை பூச்சிகள், 7 ஒட்டுண்ணிகள், 745 முதுகெலும்பு உயிரிகள் அலையாத்திக்காடுகளை நம்பியுள்ளன. இதைத் தவிர 546 வகை மீன்கள், 433 வகை பறவைகள், 85 வகை ஊர்வன, 70 வகை பாலூட்டிகள் அலையாத்திக்காடுகளையே அடைக்கலமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் அலையாத்தி காடுகளை அழித்து இறால் வளர்க்க வழி தேடுகிறான்.
1995-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சதுப்புநில காடுகளின் அளவு அதிகரிக்காமல் அப்படியே உள்ளது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் 487,100 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட சதுப்புநில பகுதி இருப்பதாக அரசின் தகவல் தெரிவிக்கிறது.
புகைப்படத்திற்காக மட்டும்
20ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் சதுப்புநில காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. 1953-ல் 6 லட்சம் ஹெக்டேர் அளவு சதுப்புநில காடுகள் இருந்தன. 1989-ல் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை அதன் அளவு குறைந்துவிட்டது. மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள 40 சதவீத சதுப்புநிலங்கள் மற்ற விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
உலகின் 40 சதவீத அலையாத்தி காடுகள், ஆசியாவில்தான் உள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் பாதிக்கும் மேற்பட்ட சதுப்புநில காடுகள் அழிவைச் சந்தித்துள்ளது. தாய்லாந்து நாடு மற்றும் அந்தமான் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஹெக்டேர் சதுப்புநில காடுகள் மட்டும் மிஞ்சியுள்ளன.
இலங்கையில் பாதிக்கு மேற்பட்ட சதுப்புநில காடுகள் அழிந்துவிட்டது. தாய்லாந்து நாடு மற்றும் அந்தமான் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஹெக்டேர் சதுப்புநில காடுகள் மட்டும் மிஞ்சியுள்ளன. இறால் வளர்ப்பு போன்ற காரணங்களால், சதுப்புநில காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் மட்டும் 1300 ஹெக்டேர் சதுப்புநிலம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 157,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இறால் வளர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை சதுப்புநில பகுதியில் நடைபெறவில்லை என்றாலும், சதுப்புநிலம் அழிவதற்கு இறால் வளர்ப்பின் பங்கு மிகப் பெரியது.
ஆந்திரா மாநிலத்தில் இறல் வளர்ப்பு குளங்கள் மற்றும், குஞ்சு பொரிப்பகங்கள் இரண்டிற்குத் தேசி மய்யங்கள் உள்ளன. 14 சதவீதம் இறால் குளங்கள் சதுப்புநில பகுதிகளிலேயே அமைக்கப்பட்டிருந்தன. 2,838 ஹெக்டேர் சதுப்புநிலம் இறால் வளர்ப்பால் அழிந்தது. இதுவரை ஆந்திராவில் 3,150 சதுப்புநிலங்கள் அழிவைச் சந்தித்துள்ளது.
“நம் பழவேற்காட்டில் அலையாத்தி காடுகள் வேகமாக அழிந்து வருகிறது. ஒன்று அலையாத்தி காடுகள் அழிவிற்கு முக்கிய காரணமாக இருப்பது கருவேலமரங்கள். மற்றொன்று துறைமுகம், அனல்மின் நிலையம் போன்றவற்றாலும் அழிந்து வருகிறது. அலையாத்தி காடுகள் இருந்தால், அலையின் வேகத்தையும், புயலின் வேகத்தையும் அதிக அளவில் கட்டுப்படுத்தும். அதானி துறைமுகம் கட்டப்பட்டு அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டால், தற்போது இருப்பதைவிடப் புயலின் வேகம் அதிகமாக நம்மைத் தாக்கும்” என்று மற்றொரு காரணத்தையும் முன்வைக்கிறார் இயற்கை ஆர்வலர் யுவன்.
