3 ஆண்டுகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் தற்கொலை!
சில சிறார்களின் தற்கொலைக்கு, நெருக்கமானவர் ஒருவரின் மரணம், போதைப் பழக்கம், வேலையின்மை, ஏழ்மை நிலை, தகாத உறவால் ஏற்படும் கர்ப்பம், சமூகத்தில் மதிப்பு குறைதல் ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகிறது
நாடு முழுவதும், சிறார்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆா்பி) அறிக்கை ஒன்றை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், ’கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 13,325 பெண்கள் உள்பட 24,568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2017ம் ஆண்டு 8029 சிறார்களும், 2018ம் ஆண்டு, 8,162 சிறார்களும் 2019ம் ஆண்டு 8,377 சிறார்களும் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 3,115 பேரும், அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 2,802 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,527 பேரும், தமிழ்நாட்டில் 2,035 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட சிறார்களில், 4046 பேர் தேர்வுகளில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். திருமணம் தொடர்பான காரணங்களினால், 639 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் 411 பேர் பெண்கள் ஆவர். காதல் தோல்வி காரணமாக, 3315 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2567 சிறார்கள் உடல்நலக் கோளாறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 81 சிறார்கள் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சில சிறார்களின் தற்கொலைக்கு, நெருக்கமானவர் ஒருவரின் மரணம், போதைப் பழக்கம், வேலையின்மை, ஏழ்மை நிலை, தகாத உறவால் ஏற்படும் கர்ப்பம், சமூகத்தில் மதிப்பு குறைதல் ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
