மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்குத் தடை எப்போது? தமிழ்நாட்டில் தொடரும் அவலம்
'கழிவகற்றும் முறையில் இயந்திரங்களை வளர்ந்த நாடுகள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றன. அது போல் இங்கும் சாத்தியமாக "Underground drinage" கட்டமைப்பில் பெரும் மாறுதலைச் செய்ய வேண்டும். அதில் கவனம் செலுத்தாமல் மேலே இயந்திரங்களை மட்டும் On செய்வதால் எதிர்பார்க்கும் எந்த பலனும் கைகூடாது.' என்று கக்கூஸ் ஆவணப்படை இயக்குநர், திவ்ய பாரதி குறிப்பிட்டுள்ளார்
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதென்பதை நம்மால் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. சாக்கடைகளுக்கு அருகில் கடக்க நேரிடும்போதே மூக்கை அடக்கிக்கொண்டு கடந்த அனுபவம் உங்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.
'தூப்புகாரி' என்ற நாவலில் மலங்களுடன் அள்ளிய குப்பைகளைத் தலையில் வைக்கும்போது, அது வழிந்து வரும் வாசனையுடனே உணவை உட்கொள்ளும் தாயின் வலியை, எழுத்தாளர் மலர்வதி குறிப்பிட்டிருப்பார். இந்த வலியை பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்களும், உணர்ந்திருப்பர்.
குப்பைகள் அள்ளுபவர்கள் அனைவரும் மனித கழிவுகளை அள்ளுவது இல்லையே என்று பலருக்கும் தோன்றியிருக்கும். ஒவ்வொருவரும் குப்பைகளில் என்னென்ன போடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புரியும், மனித கழிவுகளை யார் அகற்றுவது என்பது.
சென்னை போன்ற பெருநகரங்களில் எல்லா பகுதிகளிலும், காலையில் பலர் கண்விழிக்கும் முன்னரே துப்புரவுப் பணியாளர்கள் இயங்கிக்கொண்டிருப்பர். அவர்களில் பலரும் மனித கழிவுகளையும் சேர்த்தே அகற்றுகின்றனராம். தமிழ்நாட்டில் மொத்தமாக, 359-ம் பேர் மனித கழிவுகளை அகற்றிவருவதாகச் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மனித கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்பவர்கள் தொடர்பான தகவலைத் தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையம் கேட்டிருந்தது. இதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குநருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கை அளிந்திருந்தார்.
அறிக்கையில், தமிழ்நாட்டில் 359 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 189 பேர் மனித கழிவுகளை அகற்றி வருவதாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 1998-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை மனித கழிவுகளை அகற்றும் போது மரணம் அடைந்த 203 பேரின் பட்டியலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றம் சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இது சற்று முரண்பட்ட தகவலாகக் கூட இருக்கலாம். காரணம், 2016-2020- ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மனித கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட 43 பேர் உயிரிழந்தாக அரசு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. SKA (Safai Karmachari Andolan) அறிக்கைப்படி, 55 பேர் உயிரிழந்தாக குறிப்பிட்டுள்ளது. எனவே அரசின் தரவுகள் சரியானதா? என்பது சந்தேகம் எழுகிறது.
SKA தகவல்படி, தமிழ்நாட்டில் அதிகப்படியாகச் சென்னையில் 12பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம், தருமபுரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளது.
2016-ம் ஆண்டில் ஆறு விபத்துகள் நடந்ததாகவும், 11 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் காட்டுகின்றன. 2017-ம் ஆண்டில் இரண்டு விபத்துகளும் 4 இறப்புகளும் நிகழ்ந்துள்ளனர். 2018ல் ஆறு விபத்துகளும் 7 இறப்புகளும் நிகழ்ந்துள்ளது.
2019-ம் ஆண்டில் 11 விபத்துகளும் 21 இறப்புகளும், 2020-ம் ஆண்டில் 6 விபத்துகளும் 12 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன என்று SKA ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் உள்பட இந்திய முழுவதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எந்த ஒரு நபரையும் மனித கழிவுகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது என்று சட்டத்தில் கடுமையாகச் சொல்லப்படுகிறது.
'கக்கூஸ்' ஆவணப்படம் இயக்குநர் திவ்ய பாரதி அவர்களிடம், இது பற்றிக் கேட்டபோது, “தற்போதும் இந்த அவலம் தொடர்கிறது என்றால், இன்னும் பத்து, இருபது வருடங்களுக்கு பிறகும் இதே நிலைதான் தொடரும். தமிழக அரசு மட்டுமல்ல, இந்திய அளவில் மற்ற மாநிலங்களிலும் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதில்லை என்ற கருத்தே முன்வைத்திருந்தனர். இந்த அறிக்கைகளை நான் நம்புவதே கிடையாது.
மதுரையில் மட்டுமே தற்போது 600 மனித கழிவுகளை அகற்றும் நபர்களை நான் காண்பிக்க முடியும். இவர்கள் கணக்கெடுக்கும் முறையே சிக்கலானது. தானாக முன்வந்து சொல்ல வேண்டும் என்பர். அவ்வாறு யாரேனும் பதிவு செய்தால் வேலை போகும் சூழல் ஏற்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு அச்சம் இருக்கும். நூற்றுக்கு தொண்ணூறு ஊழியர்கள் தனியார் ஒப்பந்தம் மூலம் வேலை செய்பவர்கள். இவர்கள் கணக்கெடுப்பில் வருவதில்லை.

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் திட்டத்தை முழுமையாக அகற்றுவது சிரமம்தான். உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்த திட்டத்தில் கூட, ஒரு இயந்திரம் மேலிருந்து அழுத்தினால் முழுவதும் சரியாகிவிடாது. கீழே பல வேலைகள் உள்ளது.
2013-ம் ஆண்டு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முறையாக கடைப்பிடிப்பதில்லை. அந்த சட்டத்தைச் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இது தடை மற்றும் மறுவாழ்வு சட்டம். இதைத் தடை செய்கிறீர்கள் என்றால் எத்தனை பேருக்கு மறுவாழ்வு கொடுத்தீர்கள்?. சும்மா ஒரு இயந்திரத்தைக் கொண்டு வந்து சரிசெய்ய முடியாது.” என்று தெரிவித்திருந்தார்.
கக்கூஸ் ஆவணப்படத்திலும் தூய்மைப் பணியாளர்களின் கடினமான சூழல் பற்றி விவரிக்கப்பட்டிருக்கும். அதில், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த பணி செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஏதேனும் கேள்வி எழுப்பினால் வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள் என்று குறிப்பிடுவதையும் இயக்குநர் திவ்ய பாரதி பதிவு செய்திருப்பார்.
தனது தொகுதியில் இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்,“மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டைத் துவக்கி வைத்தோம்” என்று புகைப்படத்துடன், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம். pic.twitter.com/p6cbktKLBF
— Udhay (@Udhaystalin) June 20, 2021
இது பற்றி திவ்ய பாரதி தனது முகநூல் பக்கத்தில், “மனித கழிவகற்றும் முறையில் இவ்வரசு இயந்திரங்களைச் சோதனை முயற்சியாக ஈடுபடுத்தத் துவங்கியுள்ளதற்கு நன்றிகள். ஆனால் மனித கழிவை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க அதில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால் மட்டும் போதாது. அது மிகப் பெரும் சமூக இயக்கமாக மாற வேண்டும். அதை ஒரு அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சாதிய கட்டமைப்பில் பெரும் உடைப்பை அது ஏற்படுத்த வேண்டும். அதனோடு கட்டுண்ட மக்களுக்கு மறுவாழ்வை உறுதிப்படுத்தப் பரந்த அளவிலான திட்டத்தை அரசு தீவிரமாக மாநிலம் முழுதும் செயல்படுத்த வேண்டும். மறுவாழ்வை உறுதிப்படுத்தாமல் இயந்திரமயமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவது வேறு பல சிக்கலை உருவாக்கும்.
மனிதர்களே மனித கழிவகற்றும் முறையைத் தடை செய்தது மட்டுமில்லாமல் அந்த மக்களுக்கு மறுவாழ்வையும் உத்திரவாதப்படுத்திய 2013 தடை சட்டத்தைத் தீவிரமாக அரசு இனியாவது அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றங்களில் குவிந்துகிடக்கும் இது தொடர்பான நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை எல்லாம் அரசே தனிக் கவனம் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழான Conviction Rate என்பது விரல் விட்டுக் கூட எண்ணக்கூடிய அளவில் இல்லை.இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர் இனியாவது உரியத் தண்டனை பெற அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். பெருமளவில் தனியார்மயமாக்கப்பட்ட துப்புரவு பணி சார்ந்த இந்தத்துறைக்கு அரசே இனி முழுமையாகப் பொறுப்பாக வேண்டும். Tender contracting முறையை உடனே ஒழிக்க வேண்டும்.
1993ல் இருந்து இப்போது வரை மலக்குழி படுகொலைகளால் பலியான நபர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகளுக்குக் கட்டாயம் அரசு வேலை வழங்க வேண்டும். அருந்ததியர் மக்களுக்கான 3% இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.
இந்த சாதிய கொடுமையை ஒழிக்க மிக நீண்ட காலமாகப் போராடி வரும் தலித் மற்றும் இடதுசாரி தோழர்களை ஒன்று சேர்த்து empathy உடன் கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களையும் அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவிலான குழு/ வாரியம் ஒன்றை இவ்வரசு உடனே உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கைகளுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.
