'சீமானுக்கும், கமலுக்கும் ஏழைகள் என்றால் யார் என்று தெரியாது'| 100 நாள் வேலை நல்லதா?
'கேட்கிறவன் கேணையனா இருந்தா, எரும மாடு ஃப்ளைட் ஓட்டிச்சுன்னு சொல்லுவாங்க' என்று சீமான் மற்றும் கமலின் நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிய கருத்திற்கு எழுத்தாளர் ஜமாலன் எதிர்வினையாற்றினார்.
சமீபத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்ட ஒரு விவகாரம் என்பது 100 நாள் வேலைத் திட்டம்தான். அரசியல் ரீதியில் ஒரு கருத்தும் அதற்கு மறுக்கும் மற்றொரு கருத்தும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இது பற்றிய பேச்சுகள் ஓரளவு ஓய்வெடுத்துவிட்டாலும், ஆனந்த விகடன் இதழில் வெளியான ஒரு கட்டுரை, 100 நாள் வேலைத் திட்டத்தின் தேவையை உணர்த்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில், வேலூர் மாவட்டத்தின் நாகநதியை உயிர்பெறச் செய்யப் பெண்களின் பணியைப் பற்றி விவரிக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்யும் அந்த பெண்களை வாழும் கலை அமைப்பு சார்பாக வழி நடத்தப்பட்டு நதியைப் புத்துயிர் பெறச் சாத்தியப்படுத்தியுள்ளனர், என்பதை முழுமையாக விவரித்துள்ளது.
நூறு நாட்கள் திட்டத்தைப் பற்றிப் பல விமர்சனங்கள் இருந்தாலும், இதுபோன்ற நல்ல விஷயங்களும் அரங்கேறியுள்ளது என்பதே கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
நூறுநாள் வேலைத் திட்டம்?
நூறுநாள் வேலைத் திட்டம் அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் வருமான, பட்டினி நீக்குதல் ஆகிய கொள்ளையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடுமுழுவதும் நூறு நாட்கள் வேலைத் திட்டம் அமலுக்கு வந்தது.
திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டிலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். பணியில் இணையும் நபர்களைக் கொண்டு சாலைகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை மேம்படுத்தலாம். ஒருவர் வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும். வேலைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு அந்நேரத்தில் வேலை வழங்க முடியவில்லை என்றால், 15 நாட்களுக்குப் பின் அவருக்குச் சம்பளம் வழங்க வேண்டும்.
திட்டம் துவங்கப்பட்டபோது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூலியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.273 கூலியாகத் தரப்படுகிறது. அது மத்திய அரசின் நிதியிலிருந்து 75 சதவீதமும், மாநில அரசின் நிதியிலிருந்து 25 சதவீதமும் சேர்த்து இந்த பணம் வழங்கப்பட்ட வேண்டும் என்பது திட்டம். அதில், வேலை செய்பவர்களின் திறமையின் அடிப்படையில் 220 முதல் 260 வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 2020 -21 ஆம் ஆண்டி 66.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்கும்.
திட்டத்தின் அரசியல் பார்வை?
முதலில், கமல்ஹாசன் நூறுநாள் வேலைத் திட்டம் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதன்பின் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இத்திட்டத்தின் மூலம் மனித உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில், தேவையின்றி பலர் கூடி புரணி பேசுவது தான் நடக்கிறது. மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்குத் தனி பட்ஜெட். அதனால் பயன் என்ன வரப்போகிறது?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதே கருத்தை ஆதரித்துப் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, "சீமான் சொன்ன கருத்தை நாம் முழுவதுமாக நிராகரிக்க முடியாது. கேரளாவில் சிறு, குறு விவசாயிகளுக்கே அந்த வேலையைத் தருகிறார்கள். மத்திய அரசு பணம் கொடுக்கிறது. மாநில அரசின் வேலை அதை எப்படி புதுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான். சீமான் கருத்தில் உள்ள நியாயம் என்னவென்றால், புதுமையாகச் செய்யாமல் வேற எப்படியோ செய்கிறார்கள் என்பதுதான்" என்று குறிப்பிட்டார்.
தற்போது திமுகவில் இருக்கும் ராஜீவ்காந்தி, நாம் தமிழர் கட்சியில் இருந்த போது,“நூறு நாள் வேலைத் திட்டத்தில் நூறு ரூபாய் மட்டும் சம்பளம் இல்லை. நூறு பேர் மட்டுமே ஒரு இடத்தில் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால், அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பலரையும் கணக்கு காண்பிப்பர். வேலைக்கு வந்ததாக அனைவரிடமும் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்வர். இப்படி ஒரு ஊராட்சி மன்ற தலைவர் ஒரு மாதத்தில் 72 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்” என்று மேடையில் பேசினார். இந்த பேச்சு 2019-ல் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு அதுவாகவே பல இடங்களில் பிரதிபலித்தும் உள்ளது.
எழுத்தாளர் ஜமாலன்
நூறு நாள் வேலை திட்டம் பற்றி எழுத்தாளர் ஜமாலன் குறிப்பிடுகையில், “முதலில் கமலும், சீமானும் நடிகர்கள். அவர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு சமூகத்திலும், அரசியலிலும் நடிக்கிறார்கள். தமிழ்நாடு என்னும் மிகப்பெரிய திரையரங்கில் ஆட்டுவிக்கப்படும் நடிகர்களாக நடிக்கிறார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்தைப் பற்றி அடிப்படை விஷயத்தை இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. அதற்கு என்று ஒரு அடிப்படையான சில விஷயங்கள் உள்ளன. இது வறுமையை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம். வறுமை ஒழியாத இந்த நாட்டில், இதுபோன்ற வேலை வாய்ப்பு தேவையில்லை என்பவர்களுக்கு, சமூக அறிவு இல்லை என்று அர்த்தம்.

நூறுநாள் வேலைத் திட்டத்தின் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது என்றால், வேலையானது 58 நாள் துவங்கி 60 நாட்கள் வரையில் தான் நடத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். 100 நாட்கள் வேலை இருந்தால், அந்நாட்கள் வேலைக்குச் சென்றால் மீதமிருக்கும் நாட்கள் அவர்கள் என்ன செய்வார்கள். இந்த வேலையில் சம்பளம் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை, அதற்காகக் கமல், சீமான் போராடியிருந்தால் அதைக் கூட நாம் சொல்லாம்.
இந்த திட்டம், யாரும் பட்டினி இருக்கக் கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளைச் சோம்பேறி ஆக்குகிறது என்று சொல்கிறார்கள். வருடம் முழுக்க எங்கையாவது விவசாயம் செய்யப்படுகிறதா?. 3 மாத பயிர் என்றால், 4 நாட்கள்தான் வேலை இருக்கும். மொத்தமாகப் பார்த்தால் அதில் ஒரு மாதம் கூட வேலை இருக்காது. மற்ற இரண்டு மாதங்களுக்கு வெறுமனே சம்பளம் தருவார்களா?.
விவசாய சங்கத்தினர், விவசாயத்திற்கு ஆள்வரவில்லை என்று குதிக்கிறார்கள். முதலில், அவர்கள் கூலியை நிர்ணயம் செய்தார்களா?. அவ்வாறு செய்தால், முறையாக விவசாயத்திற்கு அனைவரும் செல்வார்கள்.
இவர்களின் மனநிலை என்பது மத்திய வர்க்கத்தின் மனநிலை. ஒருநாள் போராட்டம் நடந்தால், வேலை செய்ய முடியவில்லை என்று வருத்துவார்கள். அனைத்து நாட்களிலும் வேலை செய்த உங்களால், ஒருநாள் விட்டுக்கொடுக்க முடியாதா?. இந்த மனப்பான்மைதான் கமல், சீமானுக்கு இருக்கிறது. இது மேட்டின்மை வாத மனநிலையாக இருக்கிறது.
கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு சென்றால், 100 ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்படும் என்று கூறுவர். அதேபோல் வயதானவர்களை வேலைக்கு வைக்கமாட்டார்கள். இவர்களுக்கு எல்லாம், நூறுநாள் வேலைத் திட்டம் உதவியாக இருக்கும். அதேபோல் பெண்களுக்கு விவசாயத்தில் குறைந்த அளவே கூலி கொடுக்கின்றனர். நூறுநாள் வேலைத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், இதுபோன்ற வேறுபாடுகள் இருப்பதில்லை.
சிலரிடம் கேட்டால், இலவச அரிசியை வாங்கி தின்றுவிட்டு வேலைக்கு வரவில்லை என்று குறிப்பிடுகின்றனர். ரேசன் கடையில், கொடுக்கப்படும் இலவச அரசியை வைத்து ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்குச் சாப்பிட முடியுமா?. கேட்கிறவன் கேணையனா இருந்தா, எரும மாடு ஃப்ளைட் ஓட்டிச்சுன்னு சொல்லுவாங்க. சீமானுக்கு, கமலுக்கும் ஏழைக்கள் என்றால் யார் என்று தெரியாது. செட்டில் நடிக்கும் ஏழைகளை மட்டுமே தெரியும். உண்மையான ஏழை என்ன?, இந்தியப் பொருளாதாரம் என்ன என்ற அடிப்படையே தெரியாமல், பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமீப காலத்தில் அவர்களின் வாக்கு வங்கி காலியாகிவிட்டது. எனவே சிறு விவசாயி, பணக்கார விவசாயிகளை வாக்கு வங்கியாகப் பயன்படுத்த இவ்வாறு செய்கின்றனர்” என்றார்.
விசாரித்தவரையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்கள் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். சில பகுதிகளில், திட்டத்தை முறையாக வழிநடத்தாமல் வேலைகள் நடக்காமல் போவதாகக் கூறப்படுகிறது. அந்த இடங்களில் சரி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏதுவாக இருந்தாலும், சரியான தீர்வு தேவை என்பதையே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
