'தற்கொலையா? கொலையா? என்று தெரியவில்லை!'| LGBT Pride month கொண்டாட்டத்தை முடக்கிய கொரோனா!
'சிலர், தங்கள் பாலினம் வீட்டில் தெரிந்துவிட்ட காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அது தற்கொலையா? கொலையா? என்றும் சரியாகத் தெரியவில்லை.' என்கிறார், LGBT ஆர்வலர் ஸ்ரீஜித் சுந்தரம்
ஆண், பெண் என்று இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது என்று சிறு வயதிலிருந்து பார்த்துப், படித்து, தெரிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் தற்போது நம்மைத் தவிர வேறு பாலினத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலினம் என்பது நம் உறுப்புகள் தாண்டி உணர்வுகள் உள்ளடக்கியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஒவ்வொருவரும், திருநங்கைகளை ரயில் நிலையங்களில், பேருந்துகளில், பொது இடங்களில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. நானும் பல இடங்களில் பார்த்துள்ளேன். அவர்களில் சிலர் பொது இடங்களில் காசு கேட்பர். ஒருமுறை என்னுடன் வந்த நண்பர் ஒருவர், 10 ரூபாயைத் தவிர தற்போது என்னிடம் வேறு பணம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருநங்கைகள் வந்து பணம் கேட்டதும் அந்த 10 ரூபாயை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். நான் அவரிடம் ஏன் கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதும், அவர்கள் 'ஆண், பெண் இரண்டும் கலந்து இருப்பதால், சிவனின் வடிவம் கொண்டவர்கள் என்பார்கள். அவர்கள் பணம் கேட்கையில் கொடுக்கவில்லை என்றால் சபிப்பார்கள்' என்றார். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறை திருநங்கைகளைப் பார்க்கையிலும் இது ஞாபகத்திற்கு வரும்.
நாம் இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் சிவன்-பார்வதி இணைந்த வடிவத்தை உருவாக்கிய கதையை நம்பும் மக்கள், திருநங்கைகளை ஆசீர்வதிக்கும் ஒரு சமூகமாக மட்டுமே பார்க்கிறார்களே தவிர அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இல்லை.
சிவனும், விஷ்ணுவும் இணைந்து ஐயப்பன் என்ற கடவுள் பிறந்ததாக புராணக் கதைகளில் குறிப்பிடுவதுண்டு. அதை ஏற்றுக்கொண்ட மக்கள் Lesbian, gay, bisexual என்ற தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சமூகத்தில் இத்தகைய பாலினத்தவர்கள் மீது இன்றும் வெறுப்பையும் கோபத்தையும் கக்கி வருகின்றனர்.
பொதுவாகவே பார்த்தால் LGBT (Lesbian, gay, bisexual, and transgender) என்ற சமூகத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களுக்கு என்று தானாக அமைத்துக்கொண்ட உறவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பர். இல்லையேல் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுப் பல உளவியல் சிக்கல்களையும், தாக்குதல்களையும் சந்திக்கின்றனர்.
இந்த பாலினத்தவர்களின் கவலைகளை போக்குவதற்கும், பாகுபாடுகளை மறந்து கொண்டாடுவதற்கும் மேற்கொள்ளப்படுவதுதான் Pride month. ஜூன் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் இந்த விழாவை, சென்னையில் சகோதரன், தோழி என்று பல அமைப்புகளால் இணைந்து கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் மாதம் முழுக்க LGBT சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள், பாலியல் சந்தேகங்கள், ஆடல், பாடல், இசை, வண்ணமயமான கலைப் பொருட்கள் உருவாக்குதல் ஆகியவற்றைக் கொண்டு விழாவாக களைக்கட்டும்.

இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளது. விழாவைக் கொண்டாடவில்லை எனினும், தங்களால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்யும் முயற்சியில் திருநங்கைகள் இணைந்துள்ளனர்.
மற்றொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, ஊரடங்கு வேளையில் வீட்டில் முடங்கியிருக்கும் பலரும் தாங்கள் எந்த பாலினம் என்பதை வீட்டில் தெரிந்துகொண்டு மற்றொரு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது. அடித்துத் துன்புறுத்துவது போன்ற பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக LGBT ஆர்வலர் ஸ்ரீஜித் சுந்தரம் செய்தியாளர் மதனின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் குறிப்பிட்டவை “காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் இன்று வரை தன் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு மட்டும் அது கேள்வியாகவே இருக்கிறது. இது தேவையா? நீங்கள் ஏன் காதலிக்க வேண்டும்? என்ன மாதிரியான காதல் இது? என்று பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒரு அருவருப்பான விஷயமாக பார்க்கின்றனர். இந்த மாதத்தைப் பெருமை மிகுந்த மாதமாகவே நாங்கள் நினைக்கிறோம்.
சென்னையில் 2009ல் முதல் வானவில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதில் 'வானவில் சுயமரியாதை' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களாகப் பேரணி நடத்த முடியவில்லை. எனினும் ஜூன் மாதம் துவங்கியதும் LGBT -யினர் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவர்.

கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் சமூக இடைவெளியுடன் இருக்கிறோம். LGBT மக்கள் எப்போதும் அவ்வாறே வாழ்கின்றனர். சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுங்கியும் ஒடுக்கப்பட்டுமே வைக்கப்படுகின்றனர்.
ஜூன் மாதத்தில் LGBTமக்கள் நடத்தும் பேரணிக்காக ஒரு வருடமாகக் காத்திருப்பர். இந்த நிகழ்ச்சிக்கு எந்த சாதி, மத பேதம் என்பதே கிடையாது. எனவே எந்த பாகுபாடும் இல்லாமல், கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தற்போது கட்சிகளும் அமைப்புகளும் 'நாங்களும் உங்களுடன்' துணை நிற்கிறோம் என்று ஒவ்வொருவரும் இணைந்து வருகின்றனர்.
LGBT-க்கு எதிரான தாக்குதல்கள் என்பது பள்ளி, கல்லூரிகளிலேயே தொடங்குகிறது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவே இந்த தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் திருநங்கைகள், திரு நம்பிகளைப் பற்றிய பேசுவதற்கு இடம் கொடுப்பர், ஆனால் lesbian, gay பற்றிப் பேசுவதற்கான இடம் கொடுக்கப்படுவதில்லை.
ஐ.டி நிறுவனங்களில் LGBT பற்றிய புரிதல் இருக்கிறது. அதற்காகத் தனி இடம் வழங்குகின்றனர். எல்லா நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர்க்கும் போதும், இதைப் பற்றிக் கேட்டு தெரிந்துகொள்ளும் தெளிவு இருக்கிறது.
குடும்பங்களில் gay-வாக ஒருவர் இருந்தால், அவருக்கு ஷாக் சிகிச்சை (shock treatment) அளிக்க முயல்கின்றனர். பேய் பிடித்துள்ளது என்று கோயில்களில் அழைத்து சென்று உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்குவது. உளவியல் ரீதியில் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த சமூகம் வெற்றியை மட்டும் கொண்டாடத் தயாராக இருக்கிறது. LGBT-யில் ஒருவர் மதிப்பு மிக்க இடத்தில் வந்தால் அதை உடனே கொண்டாடுவார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களை யாரும் இங்கு கண்டுகொள்வதில்லை.
கடந்த ஊரடங்கை விட இந்த ஊரடங்குகளில் அதிக அளவில் தற்கொலைகள் நடந்துள்ளது. சிலர் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சிலர், தங்கள் பாலினம் வீட்டில் தெரிந்துவிட்ட காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அது தற்கொலையா? கொலையா? என்றும் சரியாகத் தெரியவில்லை.
திருநங்கைகள் தங்களுக்கு போதுமான வசதி வந்துவிட்டதால், தங்களைப்போன்று வாழ்வதற்கு சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்கின்றனர். கடந்த ஊரடங்கின்போது பல குடும்பங்களுக்கு அவர்களால் ஆன உதவியை செய்து கொடுத்துள்ளனர். உதவிகள் கேட்ட காலம் போய் தற்போது அன்பு, நம்பிக்கை என்று LGBT-யினர் அவர்களுக்குள்ளும், வெளியிலும் உதவிகளை செய்து கொடுக்கின்றனர்.
LGBT மக்கள் இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று பல பாகுபாடு இருக்கிறது. திருநங்கைகள் கை நீட்டி காசு கேட்பதைக் கேவலமாகப் பார்க்கின்றனர். ஆண், பெண் இருவருமே அவர்கள் தேவைக்குக் காசு கேட்பவர்களாக இருக்கிறார்கள். தொற்று காலத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்றே பார்க்கிறார்களே தவிர சாதி, மதம், பாலினம் என்று யாரும் பார்ப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
திரைப்படங்களில் சாதி ரீதியிலான விஷயங்களை பேசாத இயக்குநர்கள் கூட, திருநங்கைகளை வைத்து விமர்சனங்கள் செய்கின்றனர். மேசமான வடிவமைப்பே LGBT மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா வைத்திருக்கும் பலரும், குறும்படங்கள் என்ற பெயரில் பல தவறான விஷயங்களை வெளிப்படுத்துகின்றனர். பாவகதைகளில் மேசமான சித்தரிப்பு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அது தவறான படம்தான். வேறு மாதிரியான வாழ்க்கையைத் திருநங்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பேசப்படவே இல்லை. திருநங்கைகளுக்கு நடிக்கத் தெரியவில்லை என்கிறார்கள், ஒரு ஆணிற்குத் திருநங்கை போன்று பயிற்சி அளிக்கத் தெரிகிறது. திருநங்கைக்குத் திருநங்கையாக நடிக்க வாய்ப்பு வழங்கத் தெரியவில்லை.
திரைப்பட தணிக்கை குழுவில் சாதி, மதம் தொடர்பான பிரச்சனைகளைத் தணிக்கை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். LGBT மக்களைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இல்லை. LGBT மக்களைப் பற்றி அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.
திமுக அரசு LGBT மக்களுக்கான தேவைகளை நிச்சயம் செய்து கொடுக்கும், அல்லது அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு வாங்க உதவும். திருநங்கைகளுக்கான நலவாரியத்தை உருவாக்கிய மிகப்பெரிய அரசுதான் திமுக அரசு. அதேபோல் திருநங்கை என்ற பெயரையும் திமுக அரசே வழங்கியது. எனவே நிச்சயம் LGBT தேவையானவற்றை கிடைக்க வழிவகை செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
முழு வீடியோவை காண
