'இந்தியாவில் மட்டும் இரகசிய தொழில்நுட்பம் இருக்கிறதா?' அணுக்கழிவு விஷயத்தில் இந்தியாவின் திட்டம்?
புகுஷிமாவில் அணு உலையும், அணுக்கழிவு சேமிப்பு கிடங்கும் அருகிலிருந்ததால், விபத்தின் போது அதன் பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அப்படி என்றால் அணு உலையின் கழிவை நிரந்தரமாக அகற்றினால், பாதிப்பு இருக்காதா என்று யோசிக்கலாம். அணுக்கழிவை நிரந்தரமாக அகற்ற முடியாது, நிரந்தரமாக எந்தவித பயன்பாடற்ற இடத்தில் சேமித்து வைக்கவே முடியும்.
அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தாலும், அதை முழுவதும் நிறுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. மத்திய, மாநில அரசுகள் எதிர்க் கட்சியாக இருக்கும் வேளையில் அணு உலைகளைப் பற்றி, வேறுபட்ட கருத்தை முன்வைத்தாலும், ஆளும் கட்சியாக மாறிய பின் வெளிப்படையாக அறிவிக்காமலேயே, அணு உலைக்கு வழிகளைச் செய்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை, இந்திய அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதில், “KKNPP-3&4 தளங்களுக்கு அணுக்கழிவு சேகரிப்பு மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
KKNPP-3&4 அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கான பகுப்பாய்வு நிறைவடைந்துவிட்டது. இந்த திட்டத்திற்கு நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது.
அணுசக்தி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில், இந்த சட்டம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறுத்த சரியான தகவல் வழங்கும் பட்சத்தில் அது விசாரிக்கப்படும். தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கூடங்குளத்தில் தற்போது 1,2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டு உலைகளும் அடிக்கடி பழுதாகி, மின் உற்பத்தி நிறுத்தப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கையான விஷயம் என்பது ஏற்கனவே இயக்கத்தில் இருக்கும் 1,2 அணு உலைகளுக்கான தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையம் (AFR) இன்றுவரை அமைக்கப்படவில்லை. இது பற்றி கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் வெற்றி செல்வன் அவர்களிடம் கேட்டபோது, “கூடங்குளம் 1, 2 அணு உலைகளுக்கான தற்காலிக அணுகழிவு சேமிப்பு கிடங்கிற்கு ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது . அதற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான கோரிக்கை, நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான் 3,4 அணு உலைகளுக்கான அணுக்கழிவு சேமிப்பு கிடங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சேமிப்பு முறை என்பது, அணு உலைக்குக் கீழ், குளம் போன்ற அமைப்பில், குளிர்ந்த நீர் வைத்திருப்பர். அதில் 163 fuel assemblies இருக்கும். ஒவ்வொரு fuel assemblies-யும் ஒரு அணுக்குண்டுக்கான சக்தியுடனே இருக்கும். ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் fuel assemblies முழுவதும் எரிந்து மின் உற்பத்தியாகும். இதன் மூலம், வருடத்திற்கு 49 spent fuel (செலவழிக்கப்பட்ட எரிபொருள்) உருவாகிறது. அவை கொஞ்சம் குளிரடையவே 5 வருடங்கள் ஆகும். 7 வருடங்கள் மட்டுமே அந்த தண்ணீரில் வைத்திருக்கவும் முடியும். அதன்பின் தானியங்கி ரோபோகளை கொண்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதற்கு உருவாக்கப்படும் தற்காலிக கிடங்குதான் AFR (away from reactor.)” என்று தெரிவித்தார்.
அணு உலை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புகுஷிமாதான். புகுஷிமாவில், தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையம், அணு உலைகளுக்கு அருகிலிருந்ததால் கதிர்வீச்சு பாதிப்பை அதிகப்படுத்தக் காரணமானது. எனவே கூடங்குளத்தில், தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையத்தால் எந்த பலனும் இல்லை. புகுஷிமா போன்ற விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு ஒன்றைத் தேட வேண்டும். அதற்குத்தான் Deep Geological Repository Project என்ற திட்டத்தைக் குறிப்பிடுகின்றனர். இந்த திட்டம் பின்லாந்து நாட்டில் செயலாக்க வழிமுறையில் உள்ளது.
இந்தியாவில் இந்த திட்டத்திற்கான நடவடிக்கை என்ன நிலையில் இருக்கிறது என்பதை வெற்றிசெல்வன் குறிப்பிடுகையில், “நாங்கள் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்ட போது, spent fuel-ஐ அதே இடத்தில் வைத்திருப்பது சரியானது இல்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு DGR (Deep Geological Repository Project) அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தற்போது spent fuel-ஐ சேமித்து வைக்க ஒரு தீர்வு அதுதான். 3 கிலோமீட்டர் அளவு ஆழமான குழி தோண்டி, உள் பகுதியில் கான்கிரீட் குகை போன்று எழுப்பி, அதற்குள் செலவழிக்கப்பட்ட எரிபொருளை (spent fuel) சில வழிமுறைகளுக்குப்படுத்தி, அதை கன்டெய்னருக்குள் வைத்து, குழிக்குள் வைக்க வேண்டும். உள்ளே வைக்க வேண்டிய சுரங்கத்திற்குள் நிலத்தடி நீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் உள்ளே வந்தால், ரேடியேஷன் நிலத்தடி நீரில் கலந்துவிட வாய்ப்புகள் உள்ளது.
இந்த கட்டுமானம் குறைந்தது, 25 ஆயிரம் வருடத்திற்கு ஏற்றதாகச் செய்ய வேண்டும். சேமிப்பு கிடங்கில் யுரேனியம் மற்று புளுட்டோனியம் இருக்கும். அவற்றிலிருந்து கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே இருக்கும் (இதற்கான ஆண்டுகளுக்கு வரைமுறை இல்லை. லட்சக் கணக்கான வருடங்கள் கூட, கதிர்வீச்சு வெளி வந்துகொண்டிருக்கலாம்). உச்சநீதிமன்றம், அதே வளாகத்தில் கழிவுகளைச் சேமிக்கும் கிடங்கு வைக்கக் கூடாதென்று தெளிவாகக் கூறிவிட்டார்கள். DGR தான் நிரந்தர தீர்வு என்பதையும் குறிப்பிட்டுவிட்டனர். இதைச் செய்யச் சரியான வசதிகள் ஏற்படுத்தாத நிலையில், AFR தற்காலிக தீர்வாகக் கொண்டு வர நினைக்கின்றனர். தற்போது பிரச்சனை என்பது DGR இவர்களால் கண்டறிய முடியவில்லை. அதற்கான வேலைகளைக் கூட அவர்கள் செய்யவில்லை. கூடங்குளத்தில் தற்காலிக AFR உருவாக்கினால், அதுவே நிரந்தர DGR மாறவும் வாய்ப்புகள் உள்ளது” என்றார்.

2012-ம் ஆண்டு கூடங்குளம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக மாநிலம் கோலாரில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் Deep Geological Repository Project (ஆழ்நில அணுக்கழிவு சேமிப்பு திட்டம்) கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கோலாரில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனவே விவரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட போது மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்தியாவிற்கு DGR மையம் தேவையில்லை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தால், குறைந்த அளவே அணுக்கழிவுகள் வெளியேறுகின்றன” என்று தெரிவித்தார். அத்துடன் அணுக்கழிவுகளை மறு செயலாக்கம் செய்யப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இது பற்றி வெற்றிசெல்வன், “அவர்கள் மறு செயலாக்கம் செய்வோம், என்பதே புரியவில்லை. ஒரு அணுகழிவில் எப்படி மறு செயலாக்கம் செய்ய முடியும். அது தவிடு அரைக்கும் இயந்திரமா என்ன?. உலகத்தில் எந்த இடத்திலாவது இதைச் செய்கிறார்களா?. இந்தியாவில் மட்டும் இரகசிய தொழில்நுட்பம் இருக்கிறதா என்ன?.
எந்த பொருளாக இருந்தாலும், அதிலிருந்து கழிவுகள் வெளி வரும். 100 சதவீதம் ஒரு பொருள், ஒரு பொருளாக மட்டுமே மாறும் என்று சொல்ல முடியாது. எனவே அதிகப்படியாகக் கதிர்வீச்சு நிச்சயம் ஏற்படும். இந்தியாவில் எல்லா அணு உலையும் கன நீர் உலை, கூடங்குளத்தில் இருப்பது மட்டும் மென் நீர் உலை. மென் நீர் உலையிலிருந்து வெளிவரும் கழிவைக் கையாளும் திறன் NPCIL-க்கு கிடையாது. இது குறித்து அவர்கள் உச்சநீதிமன்றத்திலேயே ஒத்துக்கொண்டுள்ளனர். இந்திய விஞ்ஞானிகளுக்கு இதில் போதுமான அனுபவம் இல்லை.
கூடங்குளம் அணு உலைகளிலிருந்துவரும் கழிவை, இவர்கள் பத்திரப்படுத்தியே வைக்க வேண்டும். எனவே தற்போது இருக்கக் கூடிய 6 அணு உலைகளுக்கு 3 AFR-ஆக உயரும். வருடத்திற்கு மொத்த அணு உலைகளையும் சேர்த்து ஏறத்தாழ 300 spent fuels உருவாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இது உயர்ந்துகொண்டே செல்லும். இவை அனைத்தையும் எங்குக் கொண்டு சேமிப்பார்கள். அனைத்தையும் ஒரே இடத்தில் போட்டு வைத்தால், என்ன ஆகும்?. இது அந்த பகுதி மக்களுக்கான பிரச்சனை அல்ல, தென் இந்தியாவிற்கான பிரச்சனை” என்று குறிப்பிட்டார்.
1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் போது, அணு மின் நிலையத்தில் வெளியேற்றப்படும் spent fuelகளை ரஷ்ய நாடே திரும்ப எடுத்துக்கொள்ளும் என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். அதன்பின் ரஷ்யா பல நாடுகளாகப் பிரிந்த நிலையில், ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதில் spent fuel பற்றி எந்த தகவலும் குறிப்பிடவில்லை. “குறைந்தபட்சம் 1989-ல் வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதியைக் கூட இவர்கள் புதுப்பிக்கவில்லை. அதனால், வழக்கு தொடர்ந்தோம். அப்போது 3,4,5,6க்கு 2007-2008-ல் சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்துவிட்டார்கள். அதுவே 1,2 அணு உலைகளுக்கு போதுமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அந்த சுற்றுச்சூழல் அனுமதியிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பிலும், அணுகழிவு மையம் பற்றிப் பேசவே இல்லை. அது பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
NPCIL-யும் AFR-ஐ பற்றிக் கவலைப்படவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் AFR என்று குறிப்பிட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் கூறியபின்னரே, நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையம் பற்றியும் பேசுகிறார்கள். AFR-க்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய போது, 75 வருடங்களுக்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதில் தேவைப்பட்டால், காலத்தை அதற்கு ஏற்றார் போது நீட்டிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே spent fuelகள் நிரந்தரமாகக் கூடங்குளத்திலேயே விடப்படும்.
இங்கு இருப்பவர்கள் நம் காலத்தில் என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசிக்கிறார்கள் தவிர, எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை.
அணுமின்நிலையம் கடல் அருகில் உள்ளது. அடுத்த 20 வருடங்களில் கடல் மட்டம் உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்கிறார்கள். கடல்மட்டம் உயர்ந்து, அந்த பகுதி கடலுக்குள் சென்றால், என்ன செய்வார்கள்?. அதற்காக ஏதேனும் திட்டம் இருக்கிறதா?.
இதுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஒருமுறை கூட, கூடங்குளம் பகுதியை ஆய்வு செய்தது இல்லை. கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களை இணைத்து NPCIL ஒரு பரிசோதனை நிலையம் வைத்துள்ளது. அவர்கள் பரிசோதித்து ஒரு அறிக்கையை அளிக்கின்றனர். அதைதான் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஏற்றுக்கொள்கிறது.
கூடங்குளத்தில் பணி செய்பவர்களின், மருத்துவம் சார்ந்த தகவலையே அவர்கள் வெளியில் கொடுக்கவில்லை. ரேடியேஷனால், பாதிக்கப்படும் தொழிலாளர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்கள் எதுவும் இன்றுவரை வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடமும், விவரங்கள் தரப்படுவதில்லை. அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் அவர்கள் செய்து கொடுக்கிறார்கள். ஒரு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் நமக்கு, 100 சதவீதம் பாதுகாப்பானவைதான் செய்கிறார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்” என்று வழக்குரைஞர் வெற்றிசெல்வன் குறிப்பிட்டார்.
