கீழடி அகழ்வாராய்ச்சி எதற்கு? துக்ளக்கின் விமர்சனத்திற்குக் கடுமையான பதிலடி
துக்ளக் பத்திரிகையில் வெளியான, கீழடி அகழாய்வு எதற்காக என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சென்ட்ரல் விஸ்டா திட்டம் எதற்காக என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்று காலையில் பலரது கோபத்தைத் தூண்டியுள்ளது ஒரு கட்டுரை. முதலில் அது என்ன பத்திரிகை என்றே கவனிக்கவில்லை. கட்டுரை முழுவதும் படித்து முடிக்கப்பட்ட பின்னரே, துக்ளக் வார இதழின் கட்டுரை என்று எனக்கு தெரிந்தது.
துக்ளக் கட்டுரை சர்ச்சை, அப்படி என்னதான் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது?. சுருக்கமாக
“ஒரு பக்கம் கொரோனாவால் நாடே சுருண்டு கிடக்கிறது. பொருளாதாரம் முடங்கி தமிழனெல்லாம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். கன்னடத்துக்காரன் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்கிறான். இப்படி ஆயிரம் பிரச்சனைகள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த புதை பொருளாராய்ச்சியை செய்யவில்லையே என்று யார் அழுதார்கள்?. நிதியமைச்சர், பட்ஜெட் போட நிதி எங்கே என்று துளாவிக் கொண்டிருக்கிறார் இந்தச் சூழ்நிலையில் தமிழனின் நாகரிகத்தை, பழம்பெருமை வெளியே கொண்டு வர, இந்த தண்டச் செலவு எதற்காக?
எங்கே தோடினாலும் பழைய மண்பானையும், எலும்புக் கூடுகளும்தான் கிடைக்கின்றன. எதோ கூர்மையான கல்லாயுதம் கிடைக்கிறது. பழைய பாசி மணிகள் கிடைக்கின்றன. ஆஸ்திரேலியாவில் தொல்பொருளாராய்ச்சி செய்தாலும் இவைதான் கிடைக்கும். இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய? இவற்றையெல்லாம் கண்ணாடிப் பொட்டிக்குள் வைத்து, ஊர் உலகத்துக்குக் காட்டினால், தமிழனின் வயிறு நிறையுமா? வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியுமா? கொரோனா தான் விலகுமா?
ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில், ஏகப்பட்ட புரூடாக்களை அவிழ்த்து விட்டார். அவற்றை நிறைவேற்றுவதற்கே கஜானாவில் துட்டு இல்லை. அப்படியிருக்கும் போது, இந்த தொல்பொருளாய்வு என்ற தண்டச் செலவு எதற்கு? வேட்டியை அவிழ்த்து எவனாவது தலைப்பாகை கட்டுவானா?.” என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த பலரும், துக்ளக் பத்திரிகைக்கு எதிராக கடுமையான பதிலடியை முன்வைத்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் “இந்தியாவின் பழமையான நாகரீகம் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம்தான் என்று இருந்த வரலாற்றுத் திரிபை உடைத்து இந்தியாவின் தொன்மையான நாகரீகம் கீழடி என்று நிறுவப்படுவது உங்களுக்கு
வயிற்றிச்சல் தருகிறது என்றால் “ஜெலுசில்” குடிங்க.
பிரச்சனைகளுக்கு மத்தியில் #centralvista எதற்காக?” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பழமையான நாகரீகம் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம்தான் என்று இருந்த வரலாற்று திரிபை உடைத்து இந்தியாவின் தொன்மையான நாகரீகம் கீழடி என்று நிறுவப்படுவது உங்களுக்கு
— G. Sundarrajan (@SundarrajanG) July 29, 2021
வயிற்றிச்சல் தருகிறது என்றால் “ஜெலுசில்” குடிங்க.
பிரச்சனைகளுக்கு மத்தியில் #centralvista எதற்காக?@TThenarasu pic.twitter.com/jDO0XMjzJh
மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், “அதாவது கொரோனாவின் பிடியில் சிக்கி இந்தியாவே திணறிக் கொண்டிருந்த போதும், ஆற்றில் பிணங்கள் மிதந்த போதும், வாழ்வாதாரத்துக்குப் பயந்து மக்கள் பல்லாயிரம் மைல்கள் நடந்து கொண்டிருந்த போதும் கூட 20,000 கோடி ரூபாய்க்கு சென்ட்ரல் விஸ்டா மிக தேவையாக இருந்தது. கீழடி தான் வெட்டி வேலை!” என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது கொரோனாவின் பிடியில் சிக்கி இந்தியாவே திணறி கொண்டிருந்த போதும், ஆற்றில் பிணங்கள் மிதந்த போதும், வாழ்வாதாரத்துக்கு பயந்து மக்கள் பல்லாயிரம் மைல்கள் நடந்து கொண்டிருந்த போதும் கூட
— Kavitha Muralidharan (@kavithamurali) July 29, 2021
20,000 கோடி ரூபாய்க்கு சென்ட்ரல் விஸ்டா மிக தேவையாக இருந்தது. கீழடி தான் வெட்டி வேலை! pic.twitter.com/1INCvw5QxG
சமூக பண்பாட்டு செயற்பாட்டாளர் சூரியா சேவியர், “சரஸ்வதி நாகரீகம் என்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசும் போது உச்சி குளுந்துச்சா மாமா?
அதற்கு ஆய்வாளர்கள் என்று ஆய்வுக்கு தொடர்பே இல்லாத மாமாக்கள் கூட்டத்தைப்போடும் போது வெட்டி வேலையா தெரியலையா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் தொல் பொருள் ஆய்வு வெட்டி வேலை- துக்ளக் குருமூர்த்தி.
— surya xavier (@suryaxavier1) July 29, 2021
சரஸ்வதி நாகரீகம் என்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசும் போது உச்சி குளுந்துச்சா மாமா?
அதற்கு ஆய்வாளர்கள் என்று
ஆய்வுக்கு தொடர்பே இல்லாத மாமாக்கள் கூட்டத்தைப்போடும் போது வெட்டி வேலையா தெரியலையா? pic.twitter.com/g8Qk9M9Jiq
இன்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அளித்த பேட்டியில், “கீழடியில் உள்ள அகழாய்வில், தமிழின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைக்கின்றன. தற்போது கிடைத்துள்ள பொருட்களால் தமிழின் தொன்மை கி.மு. 6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. கிடைத்த சான்றுகளைச் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் தொன்மையால் சிலருக்கு வயிறு எரிவதால், அகழாய்வுகள் தேவையற்றது என எழுதுகிறார்கள். தமிழின் பெருமையை ஏற்க மறுக்கும் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வயிறு எரியட்டும்” என்று தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில், “கீழடியின் கொடை குறைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று . வெள்ளியிலான முத்திரைக் காசு(Punch Marked Coin) ஒன்று கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செமீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி.” என்று குறிப்பிட்டு இரண்டு படங்களைப் பதிவிட்டுள்ளார்.
கீழடியின் கொடை குறைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று .
— Thangam Thenarasu (@TThenarasu) July 29, 2021
வெள்ளியிலான முத்திரைக் காசு(Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி. pic.twitter.com/nmJwWFH0mj
கீழடி அகழாய்வு
மதுரையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், சரியாகச் சிவகங்கை மாவட்டத்தில் 2014-ம் ஆண்டிலிருந்து கீழடி அகழாய்வு நடைபெற்று வருகிறது. 2,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த இடத்தில் மத்தியில் தொல்லியல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளுவதை நிறுத்தியதும், மாநில தொல்லியல் துறை ஆய்வு செய்யத் துவங்கியது. 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில், முதல் முறையாகப் பழங்கால கட்டத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

இங்குக் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் ப்ளோரிடாவில் பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் , அவை கிமு 3 முதல் 6-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
கங்கை சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் கிட்டத்தட்ட கிமு 6-ம் நூற்றாண்டில் தோன்றியது. அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் நகர நாகரீகமிருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்காமலிருந்தது. இந்நிலையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று, ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
துக்ளக்கின் கட்டுரையை விமர்சிக்கையில், இருவர் சென்ட்ரல் விஸ்டா என்றொரு விஷயத்தை முன்வைத்திருந்தனர்.
சென்ட்ரல் விஸ்டா?
டெல்லியில் நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தான் சென்ட்ரல் விஸ்டா என்று குறிப்பிடுகின்றனர். திட்டத்தில் முக்கோண வடிவில் நாடாளுமன்ற கட்டிடம் அமையும். அதன் அருகிலேயே பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவருக்கான இல்லம், பொதுவான மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ தூரம் கொண்ட ராஜ பாதையை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

மொத்த கட்டுமானத்திற்கும் 14,000 கோடி செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளையும் தெரிவித்திருந்தது. எனினும் 2020, டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. பின்னர், ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் பணிகளைத் துவங்க அனுமதி வழங்கியது.
இந்த பணிகள் கொரோனா காலத்திலும், மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்படவில்லை.
