இரு நூற்றாண்டு கடந்த பிரச்சனை! நமக்கு வாழ்வாதாரம்... அவர்களுக்கு அரசியல்! நீருக்கு காத்திருக்கும் குறுவை, சம்பா
கர்நாடகாவில் 320 கி.மீ தூரமும், தமிழகத்தில் 416 கி.மீ தூரமும் பயணிக்கும் காவிரி நீர் யாருக்குச் சொந்தம் என்று நான்கு மாநிலங்கள் வழக்கு மேல் வழக்குத் தொடுத்தும் கர்நாடகா பிடிவாதமாகவே இருக்கிறது.
நூற்றாண்டுகள் கடந்த காவிரி பிரச்சனை. ஒவ்வொரு அரசு பொறுப்பேற்றதும், இந்த பிரச்சனை வலுப்பெற்று சண்டையாகி, பின் சில காலம் ஓய்வு எடுக்கும். அப்படி இந்தமுறை கடந்துவிட முடியுமா என்பதை ஒரு பக்கம் சிந்தித்தாலும், இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்பது தண்ணீர் பஞ்சம்தான்.
இன்று நேற்றல்ல 1807களிலிருந்து இந்த பிரச்சனை பற்றிய விவாதம் நடப்பதாக வரலாறு கூறுகிறது. அந்த நாட்களிலிருந்து காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மைசூர் சமஸ்தானத்திற்கும், மெட்ராஸ் மாகாணத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
1866ல் மைசூர் நிர்வாகம் காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டது. எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 1870ல் இரு மாகாணங்களும் பேச்சுவார்த்தையைத் துவங்கின. இறுதியில் 1892-ல் தற்போதைய உதகமண்டலத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்துப் போடப்பட்டது. இந்த கையெழுத்தின்போது நீர்நிலைகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டது. நதிகள் அனைத்தும் அட்டவணை ஒன்றிலும், நீர் நிலைகள் அட்டவணை இரண்டிலும், சிறிய நீர்நிலைகள் அனைத்தும் அட்டவணை மூன்றிலும் பிரிக்கப்பட்டன. அட்டவணை ஒன்றில் இருக்கும் நீர்நிலைகளில் அணை கட்ட மைசூர் சமஸ்தானம், மெட்ராஸ் மாகாணத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மெட்ராஸ் மாகாணம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், மத்திய சர்க்காரிடம் இது குறித்து முறையிடலாம். மத்திய சர்க்கார் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தால் அணை கட்டலாம்.

1906-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் கண்ணம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட அனுமதி கேட்டது. அதற்கு மெட்ராஸ் மாகாணம் அனுமதி வழங்கவில்லை. ஏற்கனவே இருந்த உத்தரவுப்படி, விவகாரம் மத்திய அரசிடம் கொண்டுசெல்லப்பட்டது. பிரிட்டீஸ் ஆட்சியாளர்கள் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை வழங்கினர். அதன்படி, வழக்கு தொடரப்பட்டது. இதற்குத் தீர்ப்பளித்த நீதிபதி மசூர் சமஸ்தானத்திற்கு அணை கட்ட அனுமதி கொடுத்ததுடன், மெட்ராஸ் மாகாணமும் அணை கட்டிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். அப்படி தான் மேட்டூர் அணை கட்டப்பட்டது.
இதன் பின்னர் பல பிரச்சனைகள் வெடித்தது. கர்நாடக காவிரியின் குறுக்கே ஹேமாவதி, ஹாராங்க, கபினி ஆகிய அணைகளைக் கட்டியது. ஆனால் தமிழகத்தில் ஒரு மேட்டூர் அணை மட்டுமே சேமிப்பு நிலையமாக இருக்கிறது.
மேகதாது அணை பிரச்சனையின் துவக்கம்?
1948ல் மைசூர் சமஸ்தானம் மேகதாது அணை கட்ட திட்டமிட்டது. 1956ல் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபின், இது பற்றிய விசாரணை துவங்கப்பட்டது. 1960ல் இது மிகப்பெரிய பேசுபொருளானது. கர்நாடக அரசின் முன்னெடுப்பைப் பார்த்த தமிழக அரசு ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வந்தது. 1984-ல் தமிழக அரசு சார்பாகக் காவிரி பங்கீடு தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. அதன்படி, 2016-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரி நீரைத் தேக்கி வைக்கும் அணைகள் மற்றும், அதன் பயணம்?
காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் பிறந்து, தமிழகத்தின் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 4184 அடி உயரத்தில் தலைக் காவிரி பிறக்கிறது. இதன் பயணம், ஹாராங்கியில் உதிக்கும் ஆறுடன் கலந்து, அம்மாநிலத்தின் மாண்டி மாவட்டத்தில் 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் வந்தடைகிறது. அதே அணையில் ஹேமாவதி, லக்ஷ்மண தீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் இணைகின்றன.
அங்கிருந்து வெளியேறும் காவிரி நீர், கேரள மாநிலம் வயநாட்டில் துவங்கி கிழக்கு நோக்கி ஓடிவரும் காபினி ஆற்றை, திருமாக்கூடலு நரசிப்பூரம் பகுதியில் கலக்கிறது. அங்கிருந்து பிரிந்து, மேகேதாட்டு வழியாக பிலிகுண்டலுக்கு வந்தடைகின்றது.
தமிழக எல்லையில் நுழையும் காவிரி, ஒகேனக்கல் அருவியில் குதித்து, பாலாறு, சென்னாறு, தொப்பாறு என்ற சிற்றாறுகளுடன் கலக்கிறது. அனைத்தும் ஒன்றாகி மேட்டூர் அணைக்கு செல்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி, குந்தா என்ற இடத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றுடன் கலக்கிறது. அதன்பின் கரூர் அருகே உள்ள கட்டளை என்னும் இடத்தில் பச்சம்பட்டியில் தோன்றும் ஆற்றுடன் கலக்கிறது. கரூர் மாவட்டத்தில் தான் காவிரி ஆறு அகலமான பாதையில் பயணிக்கும். இதை அகண்ட காவிரி என்று குறிப்பிடுவர்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்னும் இடத்தில் இரண்டாகப் பிரியும் ஆறு, ஸ்ரீரங்கம் வழியாக கொள்ளிடம் பகுதிக்குச் செல்கிறது. அங்கிருந்து கல்லணையை நோக்கிப் பயணிக்கிறது. கல்லணையிலிருந்து காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் என்று நான்காகப் பிரிந்து வெவ்வேறு பகுதிகளை செழிப்பாக்கி கடலை நோக்கி பயணிக்கிறது.
1. கொள்ளிடம் : தஞ்சை-நாகை- கடலூர் - பரங்கிபேட்டை அருகே கடலில் கலக்கும்
2. வெண்ணாறு : திருவரூர்- கூத்தாநல்லூர் வழியாக வேதாரண்யத்தில் கடலில் கலக்கிறது.
3. கல்லணை கால்வாய் : தஞ்சை மையம் -புதுக்கோட்டை - பல்வேறு கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது.
4. காவிரி : அரசனாறு போன்ற பல்வேறு கிளைகளாக உருவாகிப் பிரிந்து - பூம்புகாரில் கடலில் கலக்கிறது. மொத்தமாகத் தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் தூரம் காவிரி பயணிக்கிறது.
சென்னையின் குடிநீர்த் தேவைக்கு வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் சென்றடையும். தமிழகத்தின் 20 மாவட்டங்கள் காவிரி நீரையே குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு அணையான மேட்டூர் (93.47எம்எம்சி) மட்டும் காவிரியின் குறுக்கே சேமிப்பு அணையாக கட்டப்பட்டுள்ளது. கர்நாடகா 4 அணைகளைக் கட்டி தண்ணீரைச் சேமித்து வைத்து வருகிறது.
கர்நாடக அணைகளின் விவரம்
ஹேமாவதி - 35.76 டிஎம்சி
ஹாரங்கி - 8.07 டிஎம்சி
கிருஷ்ணராஜ சாகர் - 54.05 டிஎம்.சி
கபினி - 15.67 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு, 104.55 டிஎம்சி. தற்போது கர்நாடக அரசு கட்ட நினைக்கும் மேகதாது அணையின் கொள்ளளவு, 67.16 டிஎம்சியாகும். இதன்படி, மொத்தமாக கர்நாடக அரசால் 171 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும்.

காவிரியால் தமிழக, கர்நாடக சண்டை
காவிரி சண்டை என்பது இரு நூற்றாண்டைக் கடந்துவிட்டாலும், தற்போதைய சூழலில் அது வன்முறையாக வெடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும், கர்நாடகாவில் வன்முறை வெடிக்கும். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் விரட்டப்படுவார்கள், தாக்கப்படுவார்கள். தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும்.
2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தரப்பில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. உடனே வன்முறை வெடித்தது. இந்நேரத்தில் எந்த மாநிலத்தின் பக்கம் பேசுவது என்று தெரியாமல் தேசிய கட்சிகள் மௌனம் காத்தன. இதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் கன்னடர்களின் வாகனங்கள் மீது தமிழர்களும் தாக்குதல் நடத்தினர்.

காவிரி தொடர்பான சர்ச்சையில், 2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவும் நீதிமன்றம் உதரவிட்டது. முன்னதாக தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று 1991-ம் வழங்கிய தீர்ப்பை மாற்றி தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்தது.
காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கும் கர்நாடக அரசால் கொடுக்கப்பட வேண்டும். அந்த திட்டத்தில் தான் தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்தது. எனவே 4 மாநிலங்களும் தங்கள் தரப்பில் மேல் முறையீடு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவை 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி ஆகக் குறைக்கப்பட்டது. கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி நீரும் கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும் என்றும், இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை அரசிதழில் வெளியிட 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்பின் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் அமைத்தது. எனினும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படவில்லை.
காவிரியை நம்பியுள்ள தமிழகத்தில் 28 லட்சம் ஹெட்டேரில் விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது வெறும் 12 லட்சம் ஹெட்டேரில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது என்பதுதான் மற்றொரு வேதனையான விஷயம்.
பலகட்ட பிரச்சனைகளைக் கடந்து திமுக ஆட்சி அமைந்ததும் ஜூலை 3-ம் தேதி முதல் மேகதாது அணை பிரச்சனை பேசுபொருளாகியுள்ளது. அன்றைய தினம், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை கட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக வரும் 12-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
6-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்த, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களைச் சந்திக்கையில், “மேகதாது அணை விவகாரத்தில் டிபிஆர் எனப்படும் முதல் நிலை திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கியது சரியான அணுகுமுறை இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளேன். காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்யவும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்த நீண்ட தண்ணீர் பிரச்சனை குறித்து காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் அவர்களிடம் தொடர்பு கொண்டே கேட்டபோது “கர்நாடக மாநிலத்தில் இந்த பிச்சனை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தண்ணீரை வைத்தே அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலை அம்மாநிலத்தில் உள்ளது. எடியூரப்பா முதலமைச்சராக இருக்கக் கூடாது என்று பாஜக கட்சிக்குள்ளேயே பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் அதை மூடி மறைத்து, அவர் தப்பிப்பதற்காக மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று குறிப்பிட்டு வருகிறார். நம்மைப் பொறுத்தவரையில் இது வாழ்வாதார பிரச்சனை.
மேட்டூரிலிருந்து ஜூன் 12-ம் தேதி திறந்த தண்ணீரை நம்பி, குறுவை சாகுபடியைத் துவங்கினர். அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடியைத் துவங்க வேண்டும். குறுவையும் தப்பாது, சம்பாவும் துவங்க முடியாது என்ற நெருக்கடி நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர். தங்களை அரசியலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி, தமிழகம் அழிந்துபோகும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.
தமிழ்நாட்டில் எந்நேரமும் போராட வேண்டிய நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளனர். இது கர்நாடக அரசுக்கு கை வந்த கலை. மத்திய அரசிற்குக் கர்நாடகாவில் அரசியல் லாபம் இருக்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு லாபம் இல்லை என்பதால், கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். இதைத் தமிழ்நாட்டில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் நியாயப்படுத்த முயல்கிறார்கள்.
காவிரி நீர் கிடைக்காத பிரச்சனையில், பலரும் மாற்று வேலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர், விவசாய நிலங்களை வீட்டுமனைகள் கட்ட விற்பனை செய்கின்றனர். பல வடிவங்களில் நிலப்பரப்பு குறைந்துள்ளது. லாபகரமான தொழிலாக விவசாயம் இல்லை. இயற்கையை நம்பிதான், விவசாயம் செய்யும் நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் சாகுபடி செய்யும் அளவு குறைந்துள்ளது.

திமுக 10 வருடங்களுக்குப் பின் பொறுப்பேற்றுள்ளது. ஏற்கனவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் நீதி மன்றம் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே ஆட்சியிலிருந்தபோது, நடுவர் மன்றம் அமைக்க அவர்கள்தான் முன்முயற்சி எடுத்தார்கள். இந்த சூழலில், அவர்கள் ஆட்சிக்கு வந்ததால் நடுவர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றச் சட்ட போராட்டங்களையும், அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
காவிரி டெல்டா விவசாயத்திற்கு எந்த அளவு புகழ்பெற்றதோ, அந்த அளவு கச்சா, ஹைட்ரோகார்பன், நிலக்கரி போன்ற இயற்கை கனிம வளங்களுக்கும் புகழ்பெற்றதாக இருக்கிறது. அதனால் மத்திய அரசிற்கு அதன்மேல் மோகம் உள்ளது. எனவே அரசியலைவிட மத்திய அரசிற்கு இதில் மிகப்பெரிய உள்நோக்கம் உள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளைப் பொறுத்தவரையில் இது வாழ்வாதாரமாக உள்ளது.
காவிரி தண்ணீர் செல்லும் பாதையில் தூர்வாரப்படவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டுதான். அது ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்தபின் அவசரமாகத் தூய்மை பணியை மேற்கொள்வார்கள். அதை முழுமையாகச் சுத்தம் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்து பணி என்ற பெயரில் இரண்டு வருடங்கள் செய்யப்பட்டது. அது நல்ல பலனைத் தந்தது. இந்த ஆண்டு எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. வரும் ஆண்டிலாவது அது துவங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
