குமரி குவாரியும்! கேரள துறைமுகமும்! வெளிச்சம் போட்டு காட்டிய அமைச்சர் அமைதி காப்பது ஏன்?
குமரி மாவட்டத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவள கொள்ளை நடப்பது தொடர் கதையாகியுள்ளது. இது பற்றி பலரும் புகார் தெரிவித்தும், அரசு தரப்பில் மௌனம் காப்பது பலரையும் கோபமடையச் செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் போராட்டம், சாட்டை துரைமுருகன் கைது உள்ளிட்ட சம்பவங்களுக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்ததே முக்கிய காரணமாக இருந்தது. பெரும்பாலும், போராட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆராய்ந்தேன்.
மேற்குத் தொடர்ச்சி மலையை, தமிழ் நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, நீலகிரி வரை 8 மாவட்டங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கே மழை தரும் தென்மேற்கு பருவக் காற்றும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையினாலேயே உருவாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை நம்பி பல ஆயிரம் வகையான பூக்கள், பூச்சி இனங்கள், பறவைகள், விலங்குகள் என்று ஏராளமானவை வாழ்கின்றன. அதேபோல் யானை, புலி, எருமை போன்ற பெரிய விலங்கினங்களும் மேற்குத் தொடர்ச்சி மலையையே நம்பியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஆதாரமாகக் கொண்டு பேச்சிப்பாறை, சிற்றாறு(1,2), பெருஞ்சாணி போன்ற அணைகள் உள்ளன. அதேபோல் குமரி மாவட்டத்தின் முக்கிய வளமாக இருக்கும் ரப்பர் விவசாயம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் காடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலையைதான் அடித்து உடைத்துக் காயத்தை உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் இது அதிகரித்தாலும், மலைப் பகுதியிலிருந்து கற்களை உடைத்து வியாபாரம் செய்யும் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கேரளாவிற்கு அதிக அளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், இவ்விவகாரம் பற்றி வெளியுலகிற்குத் தெரியவந்தது.
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பல கல்லூரிகள், பள்ளிகள் இயங்கி வருகின்றது. மலைப் பகுதிகளில் குறைந்த விலையில் நிலம் வாங்கக் கிடைக்கும் என்பதால், இதுபோன்று கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையை ஒட்டியுள்ள கல்லூரிகளிலிருந்து மலைப் பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குமரி மாவட்டம் பொன்மலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பொன்மலை பகுதியில் சட்டவிரோதமாகக் கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. குவாரிகள் இயங்கும் பகுதி, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலமாகும். அத்துடன், அப்பகுதியில் வரைமுறைக்கு மீறிய அளவில் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்களது நிலங்களில் குவாரிகள் நடத்த அனுமதி பெற்றிருந்தாலும், விதிமுறைகளை மீறி அதிக அளவில் கற்கள் உடைத்துக் கொள்ளையடிக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கையால், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கனரக வாகனங்கள், அதிர்வை உண்டாக்கும் இயந்திரங்களால், மக்களின் அன்றாட வேலைகள் செய்வது பாதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு வழங்கு போடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிமவள ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் 14 குவாரிகள் மூடப்பட்டது. இருந்தாலும், மீதமுள்ள குவாரிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் இதுபோன்ற கனிம வேட்டை என்பது ஒருபுறம் தனியார் செய்து வந்தாலும், அரசு கொள்ளையை மேற்கொள்கிறது என்பதை நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்குவது திமுக அரசு தான். கடந்த 2008-2009 ஆண்டு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் போராடினேன். தற்போது காங்கிரஸ் எனக்கு எதிராகப் போராடுவது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் பெல்வின் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலையை உடைக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. விழிஞத்தில் அதானியின் துறைமுக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்குக் கொடுக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் நடத்தினோம்
எங்களின் கோரிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலையை எந்த காரணத்திற்காகவும் இடிக்கக் கூடாது. இடித்தால், மழை பொழிவு குறையும், காலநிலை மாற்றத்தைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.
கள நிலவரம்?
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குவாரிகள் வைத்து கனிம வளங்கள் கொள்ளை நடப்பது குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சாதாரணமான விஷயமாகவே உள்ளது. பெரும்பாலான பகுதிகள் ரப்பர் காடு என்பதால், ஆள்நடமாட்டமற்ற பகுதியைத் தெரிவு செய்து முதலில் குவாரிகள் அமைக்கப்படுகிறது. பல பகுதிகள் தனியார் காடுகள் என்பதால், அந்த பகுதியின் வரைமுறைகள் பற்றிய விவரங்களில் குழப்பமும் உள்ளது. இந்த பகுதிகளுக்குள் சென்று கேமராக்களை நீங்கள் தூக்கினாலே துரத்தியடிக்கப்படுவது உறுதி. .

உள்ளூர் செய்தியாளர் ஒருவரிடம் பேசியபோது, “யாரும் அந்த பகுதிக்குள் செல்வது அவ்வளவு எளிதல்ல. உள்ளே குண்டர்கள் போன்ற பலர் இருப்பார்கள். அவர்கள் யாரையும் உள்ளே செல்வதற்கும் அனுமதிப்பதில்லை. நாங்கள் செல்ல வேண்டி வந்தால், அரசியல் கட்சியினருடன் மட்டுமே உள்ளே செல்வோம்” என்றார்.
நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட வண்டிகளில், கற்கள் உடைக்கப்பட்டுக் கொண்டு செல்வதாகக் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்திலிருந்து, கேரள மாநிலம் செல்லும் வழி முழுக்க அதிக அளவில் பெரிய பெரிய லாரிகளை பார்க்க முடியும். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்குச் செல்ல பல வழிகள் உள்ளன. அவற்றில், ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவான சாலைகளை பல வாகனங்கள் தெரிவு செய்கின்றன என்கிறார்கள், அப்பகுதி மக்கள்.
விழிஞம் துறைமுகமும், குமரி குவாரியும்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து பெருமளவில் கற்கள் உடைக்கப்பட்ட பின்னரே பலரும் அது பற்றி உணர்ந்தனர். கடந்த முறை எம்.பி-யாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வந்தார். எனவே பாலம் கட்ட தேவையான கற்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உடைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் அந்த பாலம் பெருமளவு இருப்பினால், செய்யப்பட்டது. பின்னரே விழிஞம் துறைமுகத்திற்குக் கற்கள் கொண்டு செல்ல பாறைகள் உடைப்படுவதாக மக்கள் விழித்துக்கொண்டனர்.
கேரளாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளினால், கல்குவாரிகளுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே பல ஆண்டுகாலமாக கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்குக் கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையான விஷயமாகவே இருந்தது. எனவே துறைமுகத்திற்கு எப்போதிலிருந்து கற்கள் கொண்டு செல்லப்பட்டது என்ற விவரம் எதுவும் கண்டறிய முடியவில்லை.
2015-ம் ஆண்டிலிருந்தே அரசுக்குச் சொந்தமான துறைமுகத்தை அதானி குழுமம் சார்பாகக் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமானத்திற்குப் பாறைகள் தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதி கோரி, கேரள மாநில துறைமுகம் மற்றும் அருங்காட்சியகம் துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் அவர் பேசுகையில், “கொரோனா காலத்தில் துறைமுக கட்டுமான பணிக்கான கற்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் முதற்கட்ட பணிகள் 2019-ம் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். கற்கள் தட்டுப்பாட்டால், நிறைவடையவில்லை.

அதானி நிர்வாகம் 19 குவாரிகளுக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் மூன்று குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் உள்ள சில மாவட்ட ஆட்சியர்கள் கற்களை எடுத்து வருவதைத் தடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள துறைமுகத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து எதற்குக் கற்கள் எடுத்துச் செல்கிறார்கள். அம்மாநிலத்தில் உள்ள குவாரிகளிலிருந்தே கற்களை எடுக்கலாமே என்ற கருத்தைத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர்.
அரசின் நடவடிக்கை?
2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குவாரிகளுக்கு அனுமதி பெற மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அறிவுறுத்தலைச் சுட்டிக்காட்டி, கன்னியாகுமரியின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நாகராஜன் 28 குவாரிகளை மூட வைத்தார். ஆட்சியர் மாற்றத்திற்குப் பின், இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. எனவே அனைத்து கல்குவாரிகளும் மறுபடியும் இயங்க துவங்கின.
அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போதைய தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஆட்சியில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏவாக இருந்த போது, அவரது தொகுதி இளைஞர்களின் உதவியுடன் 10 நிமிட வீடியோ ஒன்றைப் பதிவு செய்து வெளியிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது திமுக சார்பில் கல்குவாரிகளை மூடக்கோரி போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து கல்குவாரியில் கற்கள் எடுக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
கனிம வளங்கள் எடுத்துச் செல்ல லாரிகள் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். 10க்கும் குறைவான லாரிகளை மட்டுமே கணக்குக் காட்டி அனுமதி பெறப்பட்டு 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகப் புகார்களும் எழுந்துகொண்டிருக்கிறது. களியக்காவிளை சோதனை சாவடியில், உரிய அனுமதி இல்லாமல் செல்லும் லாரிகள் பிடிக்கப்பட்டாலும் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லும் அவலமும் அரங்கேறுகிறது, என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Related Stories
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள 'குமரி தமிழ்'! உங்களுக்குத் தெரியாத வார்த்தைகளும் அதன் விளக்கமும்
'தமிழர்களே பேசாதீர்கள் என்று வெளிப்படையாகக் கூறலாம்' - சாட்டை துரைமுருகன் விவகாரமும்! சட்டமும்?
அதி தீவிர மழையில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறோம்! என்ன காரணம்?