வளம் பெறாமல் இருக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை! ஒரு பாலத்தால் முடங்கிக் கிடக்கும் கிராமங்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைக் கிராமமான மோதிரமலையில், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் வாழும் சூழல் நிலவுகிறது.
வளைந்து நெளிந்த சாலைகள் வழியாகப் பயணிக்க வேண்டிய கட்டாயம். பறவைகள், பாம்புகள், ஆங்காங்கே அருவிகள், சின்ன சின்ன நீரோடைகள் இப்படி அழகு மிக்க இடமாகக் காட்சியளிக்கும் மோதிரமலை. மோதிரமலை என்று நீங்கள் கூகுள் மேப்பில் தேடினால், 'Kolinchimadam, Mothiramalai,Pachiparai' என்கிற ஒரு இடத்தைத் தவிர, மோதிரமலை பகுதியின் எந்த இடத்தையும் கண்டுபிடிக்க முடியாது.
சரியான சாலை வசதி இல்லாத பாதையில் பயணித்த போது, பேருந்துகளும் அந்த வழியாக செல்வதைப் பார்க்க முடிந்தது. 6 மாதங்களுக்கு மேலாக அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், சாலையில் நீர் ஊற்றுகள் ஆங்காங்கே பெருக்கெடுத்துக்கொண்டிருந்தன.
ஒரு வழியாக மோதிரமலையை எட்டியதும், ஒரு பாலம். அந்த பாலம், உடைந்த நிலையில் பார்க்க முடிந்தது. அதிக வேகம் இல்லாமல் கடந்து வரும் தண்ணீர் அப்போது பாலத்தின் கீழே பயணித்துக்கொண்டிருந்தது. கோதையாறு, கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர், மைலாறு, மொண்டியாறு என்று மூன்று கிளை ஆறுகளின் தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு செல்லும் பாதைக்கு குறுக்கேதான் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் வழியாகக் கடந்து சென்றால், வலது புறம் மோதிர மலை. இடது புறம் சென்றால் அரசு ரப்பர் கழகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் மைலாறு, குட்டியாறு, கல்லாறு, கிழவியாறு குடியிருப்புகள் உள்ளன.

பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் சின்னமோதிரமலை, மாங்காமலை, தச்சமலை, முடவன்பொற்றை, விளாமலை, களப்பாறை, சின்னமுட்டுதேரி ஆகிய பகுதிகள் உள்ளன. பெரும்பாலானவர்கள், பழங்குடி காணியின மக்கள், மொத்தமாக 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு நிரந்தமாக வசிப்பதுடன், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பலர் நாள் தோறும், மோதிர மலையின் பாலத்தைக் கடந்து வந்து செல்கின்றனர்.
அரசு பேருந்துகள் நாள் தோறும் பாலம் வழியாகவே கடந்து செல்கின்றன. கன்னியாகுமரி மாவட்ட பழங்குடி மக்களின் அமைப்பின் செயலாளர் ரகு கூறுகையில், “காலையில் வேலைக்கும், படிக்கவும் செல்லும் போது தரைப் பாலத்திற்குக் கீழ் சென்றுகொண்டிருக்கும் தண்ணீர், மாலையில் பாலத்திற்கு மேல் கடந்து செல்லும். தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்க யாரும் செல்ல முடியாது. காலையில் பள்ளிக்கு, வேலைக்குச் சென்று திரும்புவோர் மாலையில் வீடு திரும்ப முடியாமல் போகிறது” என்றார்.

மேலும், “இந்த பகுதியில் எப்போது மழை பொழியும் என்று கூற முடியாது. திடீரென்று காட்டாற்று வெள்ளம் உருவாகும்” என்றும் குறிப்பிட்டார்.
இது போன்று இந்த மக்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது என்று இந்திராவின் குரல் ஒலிக்கிறது. இந்திரா விரிவாக குறிப்பிடுகையில், பாலத்தின் பிரச்சனையை ஒரு பகுதியாகக் தெரிவித்திருந்தாலும், “மோதிர மலைக்கு அப்புறம் பல கிராமங்கள் இருக்கு. ஆனா, குடிநீருக்கு ரொம்ப கஷ்டம். மழையானாலும், வெயிலானாலும் எங்களுக்குக் குடிநீருக்கு ரொம்ப கஷ்டம்தான். ஒரு ஆளுக்குனு இல்ல எல்லாருக்கும் கஷ்டம்தான். குடிநீர் வசதி செஞ்சு குடுக்கிறாங்க, ஆனாலும், அதுவும் கிளியரா இல்ல” என்றவரிடம் கிணறு இல்லையா என்று நான் குறிக்கிட, “போர் தோண்டியிருக்காக, 47 -48 அடி வரைக்கும் தோண்டியும் தண்ணியில்ல” என்றார். வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த பகுதியில் நான் வரும் வழி முழுக்க, தண்ணீர் ஊற்றுகளை பார்க்க முடிந்தது. இருந்த போதிலும், குடிநீர் வசதி என்பது இந்த மக்களுக்கு திண்டாட்டம்தான். இம்மக்களுக்கான எந்த ஒரு வளர்ச்சி திட்டத்திற்கும் வனத்துறையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. அடர் வனம் இல்லாத இப்பகுதியிலும், பல திட்டங்கள் வனத்துறையினால் தடைப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

அங்கிருந்து குட்டியாறு பகுதிக்குப் சென்றிருந்தே. அது இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி. அப்பகுதியில் பல குடும்பங்கள் இருக்கிறது. செல்வகுமார் என்பவர் கூறுகையில், “40 வருடங்களாக நாங்க இங்க குடியிருக்குறோம். இலங்கையில இருந்து தாயகம் திரும்பி வேல பாக்குறோம். ஒரு பொருள் வாங்கணும்னாலும் 10, 25 கிலோ மீட்டர் தள்ளிதான் போகவேண்டியிருக்கு. சீதபள்ளி செக்போஸ்ட்ல இருந்து இந்த பக்கம் வந்தா ரோடு எல்லாம் பழுதடஞ்சு கெடக்கு. ரப்பர் கழகத்துல சரியான மருத்துவ வசதி எல்லாம் எங்களுக்கு இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டுதான், எங்களுக்க வாழ்க்க எல்லாம் போயிகிட்டு இருக்கு” என்றார்.
அங்கிருந்து முடவன்பொற்றைக்கு போயிருந்தேன். முடவன்பொற்றை பகுதி மக்கள் குறிப்பிட்டதுதான் என்னால் கற்பனை செய்து கூட பாக்க முடியாததாக இருந்தது. ஒருவர் கூறுகையில், “இங்க மாசத்துல 5 நாளுதான் கரண்டு இருக்கும். ஆனா கரண்ட் பில் எழுதும்போ அதிக எழுதுராங்க (500லிருந்து 1500 வரை எழுதப்படுவதாக கூறப்படுகிறது). கேட்டா, போனமாசம் எழுதல இல்ல, அதான் சேத்து எழுதுறோம் அப்படினு சொல்றாங்க” என்று வருத்ததுடன் குறிப்பிட்டார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட, புகார் தெரிவிக்கமாட்டீங்களா? என்று நான் கேள்வி எழுப்ப, “இங்க வந்து எல்லாம் சரி செய்யமாட்டாங்க. எப்பளங்கிலும், கரண்டு இருக்கும். மழைனா கரண்டு இருக்கவே இருக்காது. திருப்பி கரண்டு வர 10 நாளைக்கு மேல ஆவும்” என்றார்.
அதையும் கடந்து, கிழவியாறு பகுதிக்குப் போயிருந்தேன். முழுவதும் ரப்பர் கழகத்தில் வேலை செய்கிற ஊழியர்களின் குடியிருப்புகள் இருந்தது. கிழவியாறு என்பது பேச்சிபாறை அணையின் மறு பகுதிக்கு. அந்த பகுதியிலிருந்து படகு போக்குவரத்து வசதி இருப்பதாக மக்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அப்பகுதியில் படகு எதுவும் இல்லை. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைத்தால், படகு உடனடியாக வரும் என்பது கூடுதல் தகவலாகக் குறிப்பிட்டனர்.

அவசர தேவைக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் இறப்புகளும் நிகழ்வதாக மக்கள் வேதனைப்பட்டனர். இவையெல்லாம் தவிர, அரசு ரப்பர் கழகத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் ரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டிருந்தாலும், அவை முறையான பராமரிப்பு இல்லாமலேயே இருக்கிறது. ஒரு வகையில் மலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுத்தால், காட்டிலிருந்து அரசுக்கு வருமான கிடைக்க வழியாகவும் அமையும். ஆனால் மோதிரைமலை போன்ற பல மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலை என்பது, அகலப் பாதாளத்தை நோக்கியதாகவே உள்ளது.
இவை எல்லாம் கடந்து, மோதிரமலை பகுதியை அடைந்தபோது, ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தின் அளவும், நான் வெளியேறுகையில் சற்று அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. மேலே ரகு குறிப்பிட்டது போது தண்ணீரின் அளவு நினைக்காத நேரத்தில் அதிகரிப்பதும், மக்கள் வெளியேற முடியாமல் முடக்கப்படுவதும் வளக்கமான நிலை என்பதே அம்மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

Related Stories
நல்ல குடிநீரும்! நடப்பதற்கு பாலமும்! ஆப்பிரிக்க தேசத்தை வியக்க வைத்த தமிழர்
'யாரு தம்பி, உங்கள நிக்க வைச்சிருக்காங்க'| வேறுபட்ட மூன்று சுயேச்சை வேட்பாளர்களின் பகிர்வு
'சட்டத்தை மீறிச் செயல்பட்டோம்...!' ஈஷாவின் கடிதம்- முழு விவரங்களுடன் அலசல்
நாம் வாங்கிக்கொண்ட ரூ. 2000 இவர்களுக்குக் கிடைப்பதில்லை! காரணம்?