குமரியில் கவனிக்கப்படாத இடங்கள் மழைக்கு பின் எப்படி இருக்கு? ஒரு லைவ் விசிட்
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்துவந்த நிலையில், அதன் பாதிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள நேரடியாகப் பயணித்து எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களா தொடர்ந்து வந்த பெருமழை இன்று காலையிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பதாகத் தெரிகிறது. மழையில் வெளியான சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டமாகத் தெரிந்தாலும், வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப்போன மக்கள், இதை வேதனையான அழிவாகவே பார்க்கிறார்கள்.
நான் முதல் வரியில் குறிப்பிட்டதுபோல வெறும் ஐந்து நாள் மழை அல்ல. கடந்த இரண்டு மாதங்களாகவே கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி மழை பெய்துகொண்டே இருக்கிறது. அதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, அதே மாதம் 19-ம் தேதி அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வேளையிலும், ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
மழை காலம்
— Abisha Bovas (@abishabovas) October 17, 2021
Marappadi Arumanai, Kanyakumari#rain #மழை pic.twitter.com/9OVSvPqzB2
அதன்பின் இரண்டு மூன்று நாட்களுக்கு மழை ஓய்வெடுத்தாலும், அவ்வப்போது மழை பெய்துகொண்டேதான் இருந்தது. அதுவும் கடந்த 10 நாட்களாகப் பெய்த மழை மக்களை முற்றிலும் முடக்கிவிட்டது. செய்திகளில் பெரும்பாலும் 5 நாள் மழையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த 5 நாள் மழை என்பது, நகரத்தில் அதிக அளவில் பெய்தது, ஒரு வகையில் காரணமாக இருக்கலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் தாக்கம் எப்படி இருக்கு என்று பார்க்க ஞாயிற்றுக் கிழமை பயணித்திருந்தேன். திற்பரப்பு அருவி வழக்குபோல ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. களியல், கடையல்மூடு ஆலஞ்சோலை, என்று அடுத்தடுத்த பகுதிகளில், சாலைகள் பெரும்பாலும், சேதமடைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.


அப்படியே பேச்சி பாறையை நெருங்குகையில், 100 மீட்டர் அளவுக்குச் சாலையையே காணவில்லை. பேச்சி பாறை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், அருகில் உடைந்து கிடந்த கற்களை எல்லாம், தூக்கி சாலையையும் சூறையாடிச் சென்றுள்ளது. அந்த சாலையைக் கடந்துதான் நகரத்திற்கு வர முடியும். தற்போது, இருசக்கரம் வைத்திருப்போர், அருகில் சாலையை உருவாக்கிப் பயணிக்கிறார்கள்.



அங்கிருந்து, சற்று நகர்ப்புறமாகக் கருதப்படும், குலசேகரம் பகுதிக்குப் புறப்பட்டேன். அந்த வழி முழுக்கு ரப்பர் தோட்டம், வாழைத் தோட்டங்கள், தண்ணீரில் மூழ்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது. சில இடங்களில் உயரமான பகுதியிலிருந்து மண், பாறைகள் இழுத்து வந்து சாலையில் கிடந்தன. சாலையில் பல இடங்கள் சேதமடைந்திருந்தது.

அப்படியே மார்த்தாண்டம் பகுதிக்குப் பயணித்தேன். ஞாறாம்விளை பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்கள், அதாவது ரப்பர், வாழை, தென்னை என்று அனைத்தும் தண்ணீரிலும் மூழ்கி இருப்பதைப் பாக்க முடிந்தது.
அதன்பின்தான் குளச்சல் பகுதிக்குப் போனேன். அங்க சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியிருந்தது. அதற்கான Ground report ஒன்றும் பதிவு செய்திருந்தேன்.
இவ்வளவு நாள் மழை பெய்ததில் என்னென்ன பாதிப்பு?. மழை இல்லை என்றாலும், மழை அதிகமாகப் பெய்தாலும் பாதிப்புதான்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ரப்பர், தென்னை, வாழை, போன்றவை பயிரிடப்படுகிறது. அதேபோல் மிளகு, அன்னாசி, பாக்கு போன்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றனர். கடலோர கிராமங்களில் மீன் பிடி தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும், இவற்றையே நம்பியுள்ள மக்களுக்கு தற்போதைய மழை பெரிய அளவில் பாதிப்பைத் தந்துள்ளது.
அரசு தரப்பில் சேதாரங்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படாத நிலையில், கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் மழையால், ரப்பர் விவசாயிகள் அன்றாடம் செய்யும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு ரப்பர் விவசாயி கூறுகையில், “இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாழ்வாதாரமே இல்லை. மழை நின்றால்தான் மீண்டும் வேலை துவங்க முடியும்” என்றார்.

குறிப்பு: ரப்பர் பால் உற்பத்தியாவது மரத்திலிருந்து என்றாலும், மழை நேரம் அல்லது மரம் ஈரமாக இருக்கையில் மரம் செதுக்கப்பட்டால் (Tapping) அதைச் சேமிக்க முடியாமல் வீணாகிவிடும். அத்தோடு, ஈரமான மரத்தைச் செதுக்குகையில், அது மரத்தைச் சேதப்படுத்தலாம். எனவே மழை நாட்களில் ரப்பர் பால் உற்பத்தியில் தொழில் செய்வதில்லை.
குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர் கூறுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன் மீன்பிடிக்கக் கடலுக்குப் போனோம். இதுவரை எந்த வேலையும் இல்லை” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதுபோல், பல நாட்களாகத் தொடர் மழையால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அனைத்து தொழில்கள் செய்து வரும் மக்களும் மிகுதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் குமரி மாவட்ட விசிட் எப்படி இருந்தது?
நாகர்கோவில் ஒழுகினசேரியில் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேல்பகுதியைத் தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல் செண்பகராமன்புதூர் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்களின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு அருகிலிருந்த கிராமங்கள் அனைத்து வெள்ளக்காடானது.
ரயில் பாதைகள், சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவர், செய்திகளில் இடம்பெற்ற இடங்களை மட்டுமே ஆய்வு செய்து திரும்பிவிட்டார் என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கால்வாய்க் கரைகள் - சாலைகளில் உடைப்பு, வாழைப் பயிர்கள் சேதம் என கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
— M.K.Stalin (@mkstalin) November 15, 2021
குமரிமுனைக்கு ஏற்பட்டுள்ள குறைகளை உடனடியாகக் களைய நிவாரணப் பணிகள் முனைப்போடு நடைபெற்று வருகின்றன.
பாதிப்புகளை விரைவில் சீரமைப்போம். pic.twitter.com/4QItfHl8Ir
முதலமைச்சர் குமரி மாவட்டத்தின் தோவாளை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமாக மண்டபத்தில் சந்தித்து நிவாரணம் வழங்கினார். பின்னர் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் புதூர் கால்வாய் கரை உடைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் குமாரகோவில் பகுதியையும் ஆய்வு செய்த முதலமைச்சர், மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனைச் சீர் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் அவர் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போனார்.
மாவட்டத்தின் உள் பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்யாதது குறித்து மக்களிடையே அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். அதேபோல், சில இடங்களில் அந்த அந்த பகுதி எம்.எல்.ஏகளே நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
