நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவும் டிடாக்ஸ் ஜூஸ்!
நாள் ஒன்றுக்குத் தேவையான பச்சைக் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இந்த ஒரே இரும்புச்சத்துக்கள் நிறைந்த ஜூஸில் கிடைத்துவிடும்.
உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றினாலே செரிமான மண்டலத்தில் இருக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்கும். இது உடல் எடை குறைவதற்கும், தொப்பை குறைவதற்கும் வழிவகுக்கிறது. நச்சுத்தன்மைகளை வெளியேற்றவும், எடை இழக்கவும் பெரிதாக டயட் இருக்கத் தேவையில்லை. பழம் மற்றும் காய்கறிகளால் தயாரான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜூஸ் வகைகளைக் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டாலே, ஒரே வாரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணரலாம்.
#1 வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்:
100 கிராம் வெள்ளைப் பூசணியில் உள்ள தோல் பகுதி மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் அரை கிளாஸ் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்துக் குடிக்கலாம். இத்துடன் தேன், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் இது தர்பூசணி காயாக இருக்கும்போது எப்படி இருக்குமோ அதே சுவையைக் கொண்டது. இதை வெறும் வயிற்றில் மட்டுமே குடிக்க வேண்டும்.
இதில் உயிர்ச்சத்து பி, சி-யுடன் , கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, நார்ச்சத்து , நீர்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கவும் உதவுகிறது. சமைக்கும் போது சில காய்கறிகளின் சத்துக்களை இழக்க நேரிடும். அதனால் இப்படி ஜூஸாக குடித்தால் முழுப் பலனையும், சத்துக்களையும் நாம் பெறலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு வெள்ளைப் பூசணி ஜூஸ் மிக நல்லது. ஒரே மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம்.
# 2 கிரீன் ஜூஸ்
தேவையான பொருட்கள் :
1 பெரிய வெள்ளரி
3-4 செலரி தண்டுகள்
1 கப் கீரை
2 ஆப்பிள்கள்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து சாறு எடுத்துப் பருகலாம்.
மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். நாள் ஒன்றுக்குத் தேவையான பச்சைக் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இந்த ஒரே இரும்புச்சத்துக்கள் நிறைந்த ஜூஸில் கிடைத்துவிடும். கீரையின் சுவையை நினைத்து பயப்படத் தேவையில்லை. சமைத்துச் சாப்பிடுவதை விடவும் இது கூடுதல் சுவையாக இருக்கும், மேலும் இனிப்பான சுவைக்கு இரண்டு பேரீச்சம் பழம் அல்லது அத்திப்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்.
# 3 பிங்க் பவர் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
2 ஆப்பிள்கள்
1 கேரட்
1 சிறிய பீட்ரூட்
3-4 செலரி தண்டுகள்
1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நறுக்கிக் கொண்டு, ஜூஸாக அடித்துக் குடிக்கலாம்.
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பானம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இந்த பானத்தில் உள்ள பீட்ரூட் மற்றும் கேரட்டில் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஆல்பா ஆகியவை உள்ளன, அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆப்பிளுடன் இரண்டு காய்கறிகளும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத்தை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
# 4 சுத்தமான கேரட் சாறு
தேவையான பொருட்கள்
4 கேரட்
1/2 கப் அன்னாசி
2 ஆரஞ்சு
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் வெட்டி தயார் செய்து, பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து சாறு எடுத்து பருகலாம்.
வைட்டமின் – பி6 அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம், ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் துணைபுரிகின்றது. இதிலுள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 3, பி 6, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் நியாசின், ஃபோலேட் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் உள்ளன. கேரட்டை மற்ற வகைகளிடமிருந்து வேறுபடுத்தும் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று பீட்டா கரோட்டின் ஆகும்.
கவனம்
இவையனைத்தும் காலையில் பருகும் தேநீர், காபி, பால் போன்றவற்றிற்கு மாற்றுத் தீர்வாகும். இவற்றை மட்டுமே காலை உணவாக எண்ணிக்கொள்ளக் கூடாது.
ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நலம்.
துரித உணவுகள், சிற்றுண்டிகள் போல எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
