ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி!
கடைசியாக இந்திய அணி 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது. அதன்பின் இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் பதக்கமே வென்றதில்லை. இந்த வெற்றியின் மூலம், வெண்கலப் பதக்கம் வென்று 41 ஆண்டுக்கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று, ஆடவர் ஹாக்கி போட்டியில், வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே, ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது கால் பகுதி தொடங்கிய 2வது நிமிடத்தில், அதாவது 17வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாகக் கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. 24வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர், நிக்லாஸ் லெவனும், 25வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபர்க்கும் கோல் அடிக்க ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்குப் பதிலடியாக, இந்திய வீரர்கள் ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2வது கால் பகுதி ஆட்ட நேர முடிவில் ஆட்டம் 3-3 என சமநிலை பெற்றது.

3வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடினர். 3வது கால் பகுதி, தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் கோல் ஒரு கோல் அடித்தார். அதன்பின், 34வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3வது கால் பகுதியில் ஜெர்மனி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், மூன்றாவது கால் பகுதி முடிவில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
A HISTORIC COMEBACK! ????????#IND men’s #hockey team came back 3-3 in the first-half against #GER and took the lead in the final 30 minutes to win the match 5-4 and the #bronze medal ????#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether pic.twitter.com/acZHNxR5Py
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
4-வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனியின் கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. அதன்பின், ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க பல வகையில் முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய, 7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் அருமையாகத் தடுக்கவே, இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றது.
கடைசியாக இந்திய அணி 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது. அதன்பின் இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் பதக்கமே வென்றதில்லை. இந்த வெற்றியின் மூலம், வெண்கலப் பதக்கம் வென்று 41 ஆண்டுக்கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
