அதிகரிக்கும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையின் தேவை! ஏழைகளுக்கு என்ன தீர்வு?
தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவரும் வேளையில், செயற்கை கருத்தரித்தல் முறையை அரசு மருத்துவமனையில் தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில், அனைத்து வகையான சிகிச்சைகளும் அரசு மருத்துவமனையிலிருந்து பெறமுடிந்தாலும், செயற்கை கருத்தரித்தல் முறையை மட்டும் இன்றுவரை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தவில்லை. கேரளா போன்ற சில மாநிலங்கள் மற்றும் மத்திய அரசும் கூட செயற்கை கருத்தரித்த முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கத் தமிழக அரசு நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் என்ற கேள்வி எழுகிறது.
உலக அளவில் 5 முதல் 10 சதவீதம் பேர் PCOS எனப்படும் Polycystic Ovary Syndrome என்ற பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்கின்றனர். அதிலும், இந்த 40 சதவீதம் பேரில் 90 சதவீதம் பேருக்குச் சரியான சிகிச்சை கிடைக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது ஆய்வு.
அதேபோல் பெரும்பாலானவர்களைப் பாதித்திருக்கும் முக்கிய நோய் தைராய்டு. இது ஆண், பெண் இருபாலரையும் அதிக அளவில் பாதிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 4.2 கோடி பேர் தைராய்டு பிரச்சனைக்கு ஆளாகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதிகமான பெண்கள், தைராய்டு பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமலும் போகிறது.
விந்தணு குறைபாடு பிரச்சனை, இதுவும் உலக அளவில் பிரச்சனைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. விந்தணு குறைபாடு உடையவர்கள் பலர் சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்ய முடிகிறது. பலருக்கு, சரிசெய்ய முடியாமலும் போகிறது.

இவர்களுக்கு எல்லாம் செயற்கை கருத்தரித்தல் முறை மட்டுமே தீர்வு அல்ல. பல வகைகளில் சிகிச்சை அளிக்க முடியும். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். சிலருக்கு வேறு வழியே இல்லை என்றால், செயற்கை கருத்தரித்தல் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அவ்வாறு பரிந்துரைக்கும் போது, வசதிபடைத்தவர்கள் பல தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். மொத்த சிகிச்சையும் முடிந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, அவர்கள் மிகப்பெரிய கடன்காரராகவும் மாறும் சூழல் ஏற்படலாம்.
செயற்கை கருத்தரித்தல் முறையில், மொத்தமாக 30 லட்சம் வரை செலவாகும் என்று என் நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு 2017-ம் ஆண்டில் மட்டும் 832 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரவு கூறுகிறது. ஒவ்வொரு மருத்துவமனைகளும் நாங்கள் இந்த வசதிகள் செய்து தருகிறோம் என்று பல தொகையை வசூலிக்கின்றனர்.
ஏழைகள் இதுபோன்ற தொகையைச் செலவழிக்க முடியாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
இதைப் பற்றி மருத்துவர் காமராஜ் குறிப்பிடுகையில், “செயற்கை கருத்தரித்தல் ஒருவருக்குச் செய்ய 1 லட்சம் முதல் பல லட்சங்கள் வரை செலவாகிறது. இதற்குத் தேவையான மருந்துகளும், வெளிநாடுகளிலிருந்தே கொண்டுவரப்படுகிறது. இதை இந்தியாவில் தயாரிப்பது எளிமையானது தான். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் இதுபோன்ற மருத்துவ பொருட்களில் பலருக்கு நம்பிக்கை இல்லை.
உள்நாட்டிலேயே செயற்கை கருத்தரிப்பிற்கான பொருட்களைத் தயாரிக்கலாம். இதற்கு எளிமையான தொழில்நுட்பம் மட்டுமே போதுமானது. அதேபோல், குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டத்திற்கு வழிவகை செய்யலாம். அப்படிச் செய்தால் சாதாரண மக்களுக்கும் பயன்படும்”என்றார்.
2018-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சனைக்குச் செயற்கை கருத்தரித்தல் முறை தீர்வாக இருக்கும். அந்த சிகிச்சையைத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது தனியார் மருத்துவமனைகளில், இதைப் பயன்படுத்தி பெரும் லாபம் ஈட்டப்படுகிறது. அதற்குத் தமிழ்நாடு அரசு துணைபோவதுபோன்று உள்ளது, என்று குறிப்பிட்டு வழங்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் நிலுவையில் இருப்பதாகவே தெரிகிறது. இது பற்றிய விரிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் தற்போது வெளியான மற்றொரு ஆய்வை பார்க்கும் போது, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
மக்கள் தொகை குறைவினால் பொருளாதாரம், அரசியல் என்ற பல சிக்கல்கள் ஏற்படும் என்றால், அதற்குத் தீர்வு காணவேண்டிய அழுத்தம் தமிழக அரசிற்கே உள்ளது. தீர்வு என்பது, வெறும் சலுகைகளோடு நிறுத்தி விட முடியாது. சிகிச்சை, ஆரோக்கியம் போன்றவை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
நகரத்தில் வசிப்பவர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், கிராமங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர். அதில் பலருக்குச் சரியான சிகிச்சை கிடைக்காமலேயே பெற்றோராகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே இதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

Related Stories
செலவு மிக்க 'செயற்கை கருத்தரித்தல்' முறையை நடைமுறைப்படுத்துமா தமிழக அரசு? அலசல்